ஈரான் நாட்டு அதிபர் தேர்தலில் கடுமையான போட்டிக்கு பிறகு எப்ராஹீம் ரையீசி, அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

 ஈரான் நாட்டு அதிபர் தேர்தலில் கடுமையான போட்டிக்கு பிறகு எப்ராஹீம் ரையீசி, அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 


அதிகப்படியான வாக்குகள் பெற்று அவருக்கு சாதகமான சூழல் நிலவும் நிலையில், அவர் இரானியர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

இரானின் உச்ச நீதிபதியும் போட்டியிடும் 4 வேட்பாளர்களில் ஒருவருமான எப்ராஹீம் ரையீசி 62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அவருக்கு வீழ்த்தமுடியாத முன்னிலையை தந்துள்ளது. எனவே கடும்போக்காளரான ரையீசி இரானின் அடுத்த அதிபர் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பல வேட்பாளர்கள் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்ட நிலையில், மற்ற மூன்று வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு ரையீசி முன்னிலை பெற்றுள்ளார்.

மிகப் பழமையான பார்வைகளை உடைய இவர், அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தொடர்புடையவர். அமெரிக்க அரசு தடை விதித்தவர்களில் ஒருவர்.

இரானில் அதி உயர் தலைவருக்கு அடுத்தபடியாக இராண்டாவது பெரிய அதிகாரம் மிக்க பதவி அதிபர் பதவி.

உள்நாட்டுக் கொள்கைகள், வெளியுறவு போன்றவற்றில் அதிபருக்கு முக்கியமான செல்வாக்கு உண்டு. ஆனால், அரசு தொடர்புடைய எல்லா விவகாரங்களிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கே உண்டு.

"ரையீசியின் ஆட்சியின் கீழ் தூய்மைவாத இஸ்லாமிய ஆட்சியை நிறுவ கடும்போக்காளர்கள் முயற்சி செய்வார்கள். இதனால், சமூக செயல்பாடுகள் மீது மேலும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்களின் உரிமையும், வேலை வாய்ப்புகளும் குறையும். ஊடகங்கள், சமூக ஊடகத் தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாகும்" என்று பிபிசி பாரசீக சேவையின் கஸ்ரா நஜி தெரிவிக்கிறார்.

ரையீசி வெற்றியால் உலகுக்கும், இரானுக்கும் என்ன நடக்கும்?

கடும்போக்காளர்கள் மேற்குலகத்தின் மீது சந்தேகம் கொண்டவர்கள். ஆனால், ரையீசியும், அதி உயர் தலைவர் கமேனியும் இரானின் அணுக்கரு செயல்பாடுகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் ஒன்று மீண்டும் ஏற்படவேண்டும் என்று விரும்புகிறவர்கள். விரிவான கூட்டு செயல்திட்டம் என்ற முந்தைய ஒப்பந்தத்தில் இருந்து 2018ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. அதன் பிறகு இரான் மீது கடுமையான தடைகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்.

இந்த தடைகளால் சாமானிய இரானியர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் பரவலான அதிருப்தி தோன்றியது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, அந்த ஒப்பந்தத்தில் தடை செய்யப்பட்டிருந்த அணுக்கரு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது இரான். மீண்டும் பழைய ஒப்பந்தத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் பைடனும் அதை மீண்டும் உயிர்ப்பிக்கவே விரும்புகிறார். ஆனால், இரு தரப்பும் எதிர்த் தரப்பு முதலில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விரும்புகின்றன.

ரையீசியின் மூன்று போட்டியாளர்களும், பதவி நிறைவு பெறும் அதிபர் ஹசன் ரூஹானியும் ரையீசியின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அவருக்கு 62 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

தேர்தல் சுதந்திரமாக நடைபெற்றதா?

இரானில் சுமார் 5.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.8 கோடி பேர் வாக்களித்தனர். இதில் ரையீசி சுமார் 1.8 கோடி வாக்குகள் பெற்றுள்ளார்.

40 பெண்கள் உள்பட சுமார் 600 பேர் வேட்பாளர்களாகப் பதிவு செய்துகொண்டனர்.

இப்படிப் போட்டியிடத் தகுதி பெற்ற 7 பேரில் 3 பேர் தேர்தலுக்கு முன்பாகவே போட்டியில் இருந்து விலகினர். இதனால், 4 பேர் மட்டுமே களத்தில் இருந்தனர். இதனால், அதிருப்தியாளர்களும், சீர்திருத்தவாதிகளும் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்தனர்.

ஆனால், கடும்போக்குடைய கார்டியன் கவுன்சிலின் 12 ஜூரிகளும், இறையியலாளர்களும் அவர்களில் 7 பேருக்கு மட்டுமே போட்டியிடுவதற்கு அங்கீகாரம் அளித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இந்த கார்டியன் கவுன்சில்தான் வேட்பாளர்களுக்கு போட்டியிடத் தகுதி உண்டா என்பதை முடிவு செய்யும். இந்த முடிவு இறுதியானது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.