மகத்துவமிக்க துல் ஹஜ் பத்தாவது நாள்:
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மகத்துவமிக்க துல் ஹஜ் பத்தாவது நாள்:
மகத்துவமிக்க துல் ஹஜ் பத்தாவது நாள்:
1- ஹஜ்ஜில் அதிக வணக்கங்கள் அந்த நாளில் அமைந்திருப்பதால் அது "ஹஜ்ஜுல் அக்பர்" என்றும் அழைக்கப்படுகின்றது. “மேலும், இது (துல்ஹஜ் பத்தாம் நாள்), மாபெரும் ஹஜ்ஜின் (அல்ஹஜ்ஜுல் அக்பர்) தினமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், புஹாரி 1742).
2- நபி (ஸல்) அவர்கள் "குற்றமில்லை" எனக் கூறிய நாள்: (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், “கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபுஸ் ஸியாரா) சுற்றி வந்துவிட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை” என்று சொன்னார்கள். மற்றொருவர், “பலியிடுவதற்கு முன்பே தலைமுடி களைந்துவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள். இன்னொருவர், “கல்லெறிவதற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள். (புஹாரி 6666). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் (துல்ஹஜ் பத்தாம் நாள் செய்ய வேண்டிய) குர்பானி கொடுப்பது, தலையை மழிப்பது, கல்லெறி வது ஆகியவற்றை முன் பின்னாகச் செய்வது குறித்து வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” எனக் கூறினார்கள். (புஹாரி 1734).
3- துல் ஹஜ் பத்தில் மினாவில் செய்யப்பட்ட அறிவிப்புக்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "விடைபெறும்" ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜின்போது, அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவிற்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள்.
அப்போது துல்ஹஜ் பத்தாவது நாளில் (மினாவில் வைத்து) "இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது; இந்த ஆலயத்தை நிர்வாணமாக எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது" என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னையும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (.முஸ்லிம் 2622).
4- நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜில் பத்தாவது நாள் செய்த வணக்கங்கள்: 1) இறுதியாக உள்ள ஜம்ராவில் கல்லெறிதல்: "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்தலிபாவிற்கும், மினாவிற்கும் இடையிலுள்ள) “பத்னு முஹஸ்ஸிர்” எனும் இடத்துக்கு வந்த போது, தமது ஒட்டகத்தைச் சிறிது விரைவாக செலுத்தினார்கள்.
பின்னர், “ஜம்ரதுல் அகபா” செல்லும் சாலையின் நடுவில் பயணம் செய்து, அந்த மரத்திற்கு அருகிலுள்ள “ஜம்ரதுல் அகபா”விற்குச் சென்று சுண்டி எறியும் அளவிற்கு ஏழு சிறு கற்களை ஜம்ராவின் மீது எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறினார்கள். அந்தப் பள்ளத்தாக்கின் நடுவே நின்று கற்களை எறிந்தார்கள்." (ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம் 2334) நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி. 2) பலியைத் தன் கையாலும், பிறர் மூலமும் நிறைவேற்றல்: "பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள்.
பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலி(ரழி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலி (ரழி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக்கொண்டார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் ஓர் இறைச்சித் துண்டு கொண்டு வரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அலி(ரழி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள்." (ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம் 2334) நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி. 3) முடியை மழித்தல்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) மினாவிற்குச் சென்ற போது, (முதலில்) ஜம்ர(த்துல் அகபா)விற்குச் சென்று கற்களை எறிந்தார்கள்.
பின்னர் மினாவிலிருந்த தமது கூடாரத்திற்கு வந்து அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தையும் பின்னர் இடப்பக்கத்தையும் காட்டி, "எடு" என்றார்கள். பிறகு அந்த முடியை மக்களிடையே விநியோகிக்க (உத்தரவிடலா)னார்கள். (முஸ்லிம் 2510).
நபியவர்களின் முடியின் பரக்கத், அவர்களது உடலின் பரக்கத் என்பவை நபியவர்களுக்கு மர்த்திரமே உரிய சிறப்புக்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். தவாஃபுல் இஃபாழாவுக்கு (ஹஜ்ஜுக்குரிய தவாஃபுக்கு) முன் நறுமணம் பூசிக் கொள்ளல்: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "இஹ்ராம் கட்டும் நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்காக நான் நறுமணம் பூசினேன். அவ்வாறே, இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வருவதற்கு முன்னாலும் நறுமணம் பூசுவேன்." புஹாரி 1539).
4) தவாபுல் இஃபாழாச் செய்தல்: பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறி, (“தவாஃபுல் இஃபாளா” செய்வதற்காகக்) கஃபாவை நோக்கிச் சென்றார்கள். மக்காவிலே ளுஹர் தொழுது விட்டு, அப்துல் முத்தலிபின் புதல்வர்களிடம் வந்தார்கள். அவர்கள் “ஸம்ஸம்” கிணற்றிலிருந்து நீரிறைத்து விநியோகித்துக்கொண்டிருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “அப்துல் முத்தலிபின் மக்களே! நீரிறைத்து விநியோகியுங்கள்! “ஸம்ஸம்” கிணற்றில் நீரிறை(த்து விநியோகிக்கும் பொறு)ப்பில் உங்களை மக்கள் மிகைத்து விடுவார்கள் என்று (அச்சம்) இல்லாவிட்டால் உங்களுடன் நானும் நீரிறைப்பேன்!” என்று சொன்னார்கள்.
அப்போது அவர்கள் ஒரு வாளித் தண்ணீரை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கொடுக்க, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது நீரைப் பருகினார்கள்.” (ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம் 2334) நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி.
5- நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜில் மினாவில் ஆற்றிய உரை: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்தி னார்கள். அப்போது “மக்களே! இது எந்த நாள்?” எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனித நாள்’ என்றனர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனித நகரம்’ என்றனர். பிறகு அவர்கள், “இது எந்த மாதம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனித மாதம்!” என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” எனப் பல தடவை கூறினார்கள்.
பிறகு தலையை உயர்த்தி, “இறைவா! நான் (உன் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா? இறைவா! நான் (உன் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(வ்விறை)வன் மீது சத்தியமாக! இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாருக்குச் செய்த இறுதி உபதேசமாகும்.
பின்னர் “இங்கு வந்தவர்கள் வராதவர் களுக்கு இதை அறிவித்துவிடுங்கள். என(து இறப்பு)க்குப்பின் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் நிராகரிப்பவர்களாய் மாறி விடாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1739).
6- அய்யாமுத் தஷ்ரீகுடைய நாள்களில் செய்யப்பட்ட அறிவிப்புக்கள்: கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் "அய்யாமுத் தஷ்ரீக்" நாட்களில் அனுப்பி, "இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்; "மினா"வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்" என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். (முஸ்லிம் 2100).
7- 11,12,13 ஆகிய நாட்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அய்யாமுத் தஷ்ரீக்" (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும், மேலும் இறைவனை நினைவுகூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாட்களாகும். இதை நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 2099).
✍நட்புடன் அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி 2021/07/15 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.