''கழுதையால் கிடைத்த ஞானம்...!"

இரும்பு என்றாலே துருப்பிடிக்கத் தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத் தானே செய்யும்.

அதுபோல வாழ்க்கை என்றாலே இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்து தானே இருக்கும்...

சக்கரம் போல சுழன்று  மாறி மாறி வருவது தான் வாழ்க்கை என்ற நுட்பம் தெரிந்து கொண்டால், துன்பங்கள் நம்மைத் துரத்தாது...

ஞானி ஒருவரிடம் குடும்ப  வாழ்க்கையை  மேற்கொண்ட ஒருவர் வந்தார்...

தான் ஞானம் பெற விரும்புவதாகவும், தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ''ஞானம்'' எதுவோ அதைக் கற்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்...!

அறிவுரைகள் மூலம் ''ஞானத்தை'' புரிய வைக்க முடியாது என அறிவார் அந்த ஞானி...

'ஞானத்தை'' புரிய வைக்க அவரிடம்,

''தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்து இருக்கும்படியும், அந்த வழியாக சலவைத் தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும் போதும், மாலையில் திரும்பும் போதும் அதனை கவனிக்கும்படியும் கூறினார்...

மறுநாள் பொழுது புலர்ந்தது, திண்ணையில் அமர்ந்தார் ஞானியிடம் வந்தவர்...

சலவைத் தொழிலாளி அழுக்குப் பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றிச் சென்றார்...

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் கூறியது போல் காலையிலும், மாலையிலும் கழுதைகள் சென்றதையும், திரும்பியதையும் கவனித்தேன்...

ஆனால்!, அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பது போல் எனக்குத் தெரியவில்லையே எனக் கூறினார்....

"அன்பரே! .. காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளைச் சுமந்து சென்றன. அப்போது "அழுக்குத் துணிகளை சுமக்கிறோம் என்று துன்பம் இல்லை."

அதே போல் 'மாலையில் "சலவை செய்த சுத்தமான துணியை சுமக்கிறோம் என்ற இன்பம் இல்லை"

துன்பம் வரும் போது, அதிக துன்பம் இன்மையும், இன்பம் வரும் போது அதிக மகிழ்ச்சி இல்லாமலும், இன்பம், துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற செய்தி ,அந்தக் கழுதைகள் மூலம் தரும் ''ஞானம்'' என்றார் அந்த ஞானி...

ஆனந்தம் எவ்வாறு ஏற்படுகிறது...? நாம் விரும்பிய பொருளை அடைந்தால் ஆனந்தம் உண்டாகிறது...

நாம் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. நாம் நினைத்தது நடந்தால் இன்பம் தோன்றுகிறது. இந்த ஆனந்தத்திற்கு இன்பத்திற்கு எதிர்மறையனது துன்பம்...

நாம் விரும்பிய பொருள் கிடைக்காவிடில் துன்பம். நம்முடைய முயற்சி தோல்வியுற்றால் துயரம்.  நாம் ஒன்று நினைக்க, வேறொன்று நடந்தால் மன வேதனை...

ஆம் நண்பர்களே...!

இன்பமும், துன்பமும் மனித வாழ்க்கையில் இடைவிடாது நடக்கும் தொடர் நிகழ்வுகள், இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று உள்ளன. இன்பத்தில் ஈடுபடவும், துன்பத்தைத் தவிர்க்கவும் முயற்சிப்பது மனித இயல்பு...!

ஆனால்!, இந்த இன்பமோ அல்லது துன்பமோ நிலையானது அல்ல. இன்பமும் , துன்பமும் நம் இடையே தங்கி விடுவது இல்லை...!!

இன்பம் வரும் வேளையில் நாம் அதை வரவேற்பதைப் போல , துன்பத்தையும் நாம் வரவேற்க வேண்டும். அப்போது தான் நம் இதயம் இரண்டையும் நிகராக ஏற்றுக் கொள்ளும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.