அன்பினால் நிரப்புங்கள்...!

குடும்பம் என்பது இயற்கையால் நமக்காக நிலத்தில் ஏற்பாடு செய்திருக்கும் மிகப் பழமையான அமைப்பாகும்,  அது மனித சமுதாயத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. அதை இன்ப, துன்பமாக்குவது நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.

பணத்திற்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டு இருப்பது மகிழ்வின் விநாடிகளை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால்!, அலுவலகம் இன்னொரு திறமைசாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும்.

குடும்பம் அப்படி அல்ல, ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் உறுத்தும்போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படா விட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்கி விட முடியாது.

ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டு இருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்து விட்டார்.

அய்யா!, தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவரும்  கண்ணியத்துடனும்,

புன்னகையுடனும் விடை பெற்றார்கள்.

அவர்களிடையே கோபத்திற்கு காரணமில்லாமல் போயிற்று.

அன்று அவர் வீட்டுக்கு வந்தார். இரவு உணவு முடித்துது திரும்பும் போது தன் மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான்., கைகளைப் பின்னால் கட்டியபடி, தந்தை திரும்புகையில் அவரைத் தெரியாமல் இடித்து விட்டான்.

வழியில் நிற்காதே! ஓரமாய்ப் போ முண்டமே!,என்று சினத்தால் சாடினார். அவருடைய வார்த்தையில் அனலடித்தது.

சிறுவனின் முகம் வாடிப்போய் அவரிடம் இருந்து விலகினான். அவனின் கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமையோரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.

இரவில் அவர் உறங்கும் போது மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார்.

நேராக எழுந்து மகனின் படுக்கை அறைக்குச் சென்றார்.உள்ளே மகன் உறங்காமல் விசும்பிக் கொண்டு இருந்தான்.

அவனின் கண்கள் சிவந்து இருந்தன. அவன் அருகில் மண்டி இட்ட தந்தை ‘என்னை மன்னித்து விடு நான் உன்னிடம் அப்படிப் பேசி இருக்கக் கூடாது..’ என்றார்.

அந்தச் சிறுவன் திரும்பினான். சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து அமர்ந்தான்.

வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.

இதென்ன ?’ தந்தை வியந்தார். இன்று வெளியே நடந்து கொண்டு இருந்தபோது இந்தப் பூக்களைக் கண்டேன். பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன்...

அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன். அதை உங்களிடம் மறைமுகமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன் என்றான்.

மகன் சொல்ல தந்தை மனம் உடைந்தார். அவனையும், மலர்களையும் ஒரு சேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது

ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.

ஆம் நண்பர்களே...!

என்ன தான் அறிவியல் தொழில் நுட்பம் என்று பெருகி விட்டாலும், அன்பு என்ற ஒன்றை மட்டுமே மையப்படுத்தி இந்த உலகமும், நாமும் நகர்ந்து கொண்டு இருக்கிறோம்...!

🔴 அன்பைப் பெறுவதில் தான் எவ்வளவு  இன்பம்!, அதுபோலவே அன்பை பகிர்தலிலும் நாம் இருந்தால் "உலக அமைதி" என்றோ ஏற்பட்டு இருக்கும்...!!

⚫ உலக அமைதிக்காக நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அன்பைப் பகிர்வோம்! அன்பை விதைப்போம்!! அன்பால் இணைவோம்!!!

🔘 அன்பு தான் நம்மை மிகையாக மகிழ வைக்கும். இவ்வுலகில் நிலையானது அன்பு மட்டுமே. அன்பு செலுத்துவோம்! அன்பைப் பெறுவோம்...

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.