தயக்கமும், துணிச்சலும்.

வெற்றிக்கு சில துணைவர்கள் உண்டு. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் அந்த நண்பர்கள்.

அதேபோல வெற்றிக்கு இரண்டு எதிரிகள் உண்டு. அது தயக்கமும், முயற்சியின்மையும் தான். துணிச்சலைத் தோழனாக்கிக் கொண்டால் தயக்கம் எனும் எதிரியை விரட்டியடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.

தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்தோடி வரும். தயக்கத்தைத் தவிர்க்கவும், துணிச்சலை வளர்க்கவும் உதவும் சில அனுமானங்களை அறிவோம்.

தயக்கத்தை விரட்டும் முதல் அனுமானம் நேர்மறை எண்ணங்கள் தான். என்னால் முடியும் என்ற எண்ணம் தரும் நம்பிக்கை தயக்கத்தை விரட்டியடிக்கும். வெற்றியைத் தேடித் தரும், என்னால் முடியுமா...? என்ற தயக்கம் தோல்வியெனும் படுகுழியில் தள்ளி விடும்.

யாரும் என்னுடைய சொல்லைக் கேட்க மாட்டார்கள், எனக்கு யாரும் உதவ மாட்டார்கள், நமக்கு இது சரிப்பட்டு வராது என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களைக் குறைத்தாலே அனைத்தும் நலமாக நடப்பதை உணரலாம்...

மன உறுதியால் தேடியதைக் கண்டடைந்தவர்கள் உண்டு. மனஉறுதியின்மையால் பின்னடைவே வரும்...!

அடுத்ததாக!, தயக்கத்தை விட்டொழிக்கவும் முயற்சி அவசியம். எழுத்தாளராக வேண்டுமானால் எழுதி எழுதிப் பழக வேண்டும், பேச்சாளராக பேசிப் பேசிப் பழக வேண்டும், வெற்றியை நோக்கி செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

எனவே!, நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள், எதைக் கண்டு நடுங்குகிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டு அதைப் போக்க முயற்சி செய்யுங்கள். அதற்கான தயாரிப்புகளுடன் அடுத்தடுத்த செயல்களை செய்யுங்கள். மனஅமைதியுடன் ஒருமுகத்தன்மையுடன் செயல்பட்டு தயக்கத்தை வெற்றி காணுங்கள்.

சோர்வாக இருப்பது, தயங்குவது, பின்வாங்குவது, ஆர்வம் குறைவாக இருப்பது, முடியுமா என சந்தேகிப்பது, முடிவெடுக்க முடியாமல் தயங்குவது, தன்னம்பிக்கையின்றி பேசுவது, செயல்படுவது எல்லாம் துணிவின்மையின் அடையாளங்கள்...

இதைத் தருவதும் தயக்கம் தான். தயக்கத்தை விட்டொழிக்கும் போது துணிச்சல் தானே வரும். துணிச்சல் வந்தால் தன்னம்பிக்கையும் கூடவே வந்து விடும்...

நெப்போலியன் ஒரு நாட்டைப் பிடிப்பதற்காக, தன் படைவீரர்களை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் சென்றாராம். ஆற்றைக் கடந்ததும், படகுகளை எரிக்கச் சொன்னாராம்...

வெற்றி பெறாமல் புறமுதுகு காட்டி வந்தால் நாடு திரும்ப முடியாது என்ற வீர மனப்பான்மையை வீரர்களின் மனதில் பதிய வைக்கத் தான் அவர் இப்படிச் செயல்படுவாராம்...

இது உறுதியாக எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்ற மன உறுதியை வீரர்களுக்குத் தந்ததாம். இது நெப்போலியனின் வெற்றியின் மறைபொருள் (இரகசியம்) பலவற்றில் ஒன்றாகும்...

அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸ் துணிவே துணையாக பயணித்ததால் தான் தனது இலக்கான புதிய நாட்டையே கண்டுபிடிக்க முடிந்தது...

அவர் தனது குழுவினருடன் முப்பது நாட்களுக்கான உணவுப் பொருட்களுடன், மேற்கு திசையில் ஒரு நிலப்பரப்பு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணித்தார்...

பதினைந்து நாட்கள் பயணித்த அவர்கள் எந்த நிலப்பகுதியையும் அடையவில்லை. தன்னம்பிக்கை இழந்த மற்றவர்கள், உடனே நாடு திரும்ப வேண்டும் என்றார்களாம்...

ஏனெனில்!, உணவு மீதியிருக்கும் நாட்களுக்குள் நாட்டிற்குச் செல்ல வேண்டும், இல்லாவிட்டால் கடலிலேயே காலம் முடிந்து விடும் என்ற அச்சம் தான்...

ஆனால்!, கொலம்பஸ், குழுவினர்களைத் தேற்றினார். தனக்காக இன்னும் ஒருநாள் பயணிக்கும்படியும், அப்படி ஏதேனும் நிலப்பரப்பு தென்படாவிட்டால் நீங்கள் என்னைக் கடலில் விட்டுவிட்டு நாட்டுக்குத் திரும்புங்கள், உங்களுக்கான உணவுடன் ஊர் போய் சேருங்கள் என்றும் கூறி விட்டார்...

தலைமையாளரான அவரது சொல்லிற்காக அரை மனதுடன் தான் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்தார்கள். ஆனால்!, கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்...

அது அவரது துணிவுக்கு கிடைத்த வெற்றி. மற்றவர்களின் தயக்கத்திற்கு அவர் பலியாகி இருந்தால், இன்று வரலாற்றில் அவர் பெயர் இடம் பெற்றிருக்காது என்பது திண்ணம்...

ஆம் நண்பர்களே...!

நீங்கள் உங்களைப் பூனையாக நினைத்துக் கொண்டால் பூனை தான். சிங்கமாக எண்ணிக் கொண்டால் சிங்கம் தான், அதாவது மனம் எவ்வளவு துணிச்சலைக் கொண்டு உள்ளதோ அந்த அளவில் உங்கள் வெற்றி உறுதி...!

நெப்போலியன் கொலம்பஸ் மட்டுமல்ல, தயக்கம் தவிர்த்து துணிச்சலுடன் செயல்பட்டவர்கள் எல்லாம் இன்று வெற்றியாளர்களாகவும், வரலாற்றில் இடம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்...!!

திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை கொண்டால் நீங்களும் வெற்றியெனும் சிகரத்தில் ஏறலாம்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.