தாழ்வு மனப்பான்மை உங்கள் வாழ்வை தரைமட்டமாக்கி விடும்.

தாழ்வு மனப்பான்மை இனியாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். 

அப்போது உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக திகழும். 

அவமானங்கள், காயங்கள் எல்லாம் மாறிப்போகும். எழுந்திருங்கள்!

தன்னை எள்ளளவேனும் அறிந்து கொள்ளாமல், தன் சக்தியை உணராமல், எப்படியோ வாழ்ந்து முடிப்போம் என்று கோழைத்தனமாக உறங்கிக் கொண்டிருந்தால் ஈக்களும் எறும்புகளும் கூட உங்கள் உடம்பில் மைதானம் அமைத்து விளையாடும். 

அப்படித்தான் தங்களைப் பற்றிய தெளிவே இல்லாமல் பலரின் வாழ்க்கை பாழ்பட்டுப் போகிறது.

தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டும், தங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் தாங்களே பேசிக்கொண்டும் வாழ்வைக் கழிப்பது சிலருக்குப் பிடித்தமான விஷயங்கள். 

அப்படி நடந்து கொள்வதையே ‘தன்னடக்கம்’ ‘தாழ்மை’ ‘பணிவு’ என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு யாரும் தேவை இல்லை; தங்களைத் தாங்களே அவர்கள் வீழ்த்திக் கொள்வார்கள்.

தன்னடக்கம் என்பது வேறு, தாழ்வு மனப்பான்மை என்பது வேறு, தன்னடக்கம் தலைகுனியாது தாழ்ச்சி அடையாது. அது நிமிர்ந்து நிற்கும். 

உண்மையை உரக்கச் சொல்லும். ஆனால் தாழ்வு மனப்பான்மை, உங்கள் வாழ்வை தரைமட்டமாக்கிவிடும்.

குட்டக் குட்டக் குனிந்தால், உங்கள் முதுகின்மேல் நாலுபேர் ஏறி உட்கார்ந்து கொண்டு குட்டுவார்கள். 

‘ஆகா, இதுவல்லவா சுகம்’ என்று நீங்கள் குனிந்தபடியே வாழப் பழகிவிட்டால், அதன்பின் உங்கள் கூன்முதுகை நிமிர்த்த எந்த வைத்தியராலும் முடியாது.

‘தற்பெருமை கொள்ளாதே; அடங்கி இருக்கக் கற்றுக்கொள்’ என்று உங்களைப் பார்த்துச் சொல்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை வளரவிட மாட்டார்கள்.

 ‘அடங்கு அடங்கு’ என்று சொல்லியே அடக்கம் செய்துவிடுவார்கள்.

எனவே சுயமாகச் சிந்தியுங்கள். சுதந்திரமாக வாழுங்கள். உங்களை முதலில் நீங்கள் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

 உங்கள் ஆற்றலை எண்ணிப் பெருமை கொள்ளுங்கள். தன்பெருமை என்பதுதானே தற்பெருமை. 

ஒருவன் தன் பெருமைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வது தற்பெருமையாயின் அதில் என்ன தவறு!

‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காக பிறர் சொல்ல மாட்டார்கள். உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லுங்கள்.

அத்தகைய துணிச்சலும் தன்னம்பிக்கையும் நமக்கு வேண்டும். நம்முடைய தனித்துவத்தை பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்த முனையும்போதுதான், அதை வளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் நாம் பெற முடியும். 

நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அதுதான் உங்கள் வாழ்க்கை. கோபுரம் என்றால் கோபுரம்; குடிசை என்றால் குடிசை.

நன்றாக வாழ்வதற்காகத்தான் இந்த வாழ்க்கையை நாம் பெற்றிருக்கிறோம். 

அதைச் சிந்தித்தால் நம்மை நாம் அறிந்து கொள்வோம். நம்மை நாம் அறிந்து கொண்டால் நம் உள்ளாற்றலைப் புரிந்து கொள்வோம்.

 அப்படிப் புரிந்து கொண்டால், நம்மைப் பற்றி நிச்சயமாக நாம் பெருமிதம் கொள்வோம்.

உலகில் வெற்றியாளர்களாகத் திகழ்பவர்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள்? தங்கள் உள்ளாற்றலை அவர்கள் உணர்ந்தார்கள்; இந்த உலகிற்கு உணர்த்தினார்கள். 

தாங்கள் தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்பதில் பெருமிதம் கொண்டார்கள். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் தங்கள் வழியில் சென்றார்கள்; வெற்றி கண்டார்கள். அவர்களே வெளிச்சமானார்கள். 

எனவே நல்லவற்றில் தற்பெருமை கொள்ளுங்கள். அதில் தவறில்லை. இருப்பவற்றை எண்ணிப் புளகாங்கிதம் கொள்வதில் என்ன குற்றம்! அது ஆரோக்கியமானதுதான். 

ஒருவன் தற்சிறுமை கொள்வதுதான் பெருந்தவறு. ஏனெனில், அதுதான் அவனை அழிக்கக்கூடிய அபாயகரமான நோய்.

தம்மை உணர்ந்து தெளிந்தவர்கள் மகான்கள். 

அத்தகைய மகான்களாக இல்லையென்றாலும், மனிதர்களாக நாம் வாழ வேண்டும்.

இதுவரை எப்படியோ! இனியாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக திகழும். 

அவமானங்கள், காயங்கள் எல்லாம் மாறிப்போகும். எழுந்திருங்கள்!

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.