அறிவுக் கூர்மையே வெற்றிகளின் வழிகாட்டி.

''வேலையில் தரம், திறமை என்பதெல்லாம் ஒருநாளும் நேர்ச்சியாகக் கிடைப்பதில்லை. அறிவுத்திறன் ஆளுமைத் திறன் மற்றும் தொடர் முயற்சியால் மட்டுமே அது கிடைக்கும்’' என்று அழகாகக் கூறியிருக்கிறார் ஆங்கிலக்கலை திறனாய்வாளர் ஜான் ரஸ்கின் (John Ruskin)... (நேர்ச்சி- தற்செயல்)

எந்தத் தொழிலாக இருந்தாலும் அனைவருக்கும் உயர்ந்த இடம் கிடைத்து விடுவதில்லை. உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானே வருவதுமில்லை.

அறிவுத்திறன், சூழ்நிலைக்கேற்ப செயல்படும் மிகைத் திறன்,தொடர் முயற்சி, கடின உழைப்பு, இவை அனைத்தும் தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடை போட வைக்கும்...

அது இங்கிலாந்திலுள்ள ஒரு பெரிய கப்பல் நிறுவனம். இரண்டு மாத காலமாக அவற்றில் ஓரிடத்தில் மட்டும் சிக்கல் ஏற்பட்டது. சடுதியில் ஒருநாள் கப்பலின் முதன்மை பாகத்தில் ஒரு இயந்திரம் இயங்காமல் நின்று விட்டது...

எவ்வளவோ முயற்சித்தும் நிறுவனத்தின் பொறிமுறை நிறைஞர்களால் என்ன பழுதானது என்பதைக் கண்டுபிடிக்கவே இயலவில்லை... (பொறிமுறை நிறைஞர்- இயந்திரவியல் நிபுணர்/ Engineer)

கப்பல் கடலில் தொடர்ந்துப் பயணம் செய்தால் தான் நிறுவனத்துக்குப் பயன் ஈட்டவியலும். இயந்திரத்தைப் பழுது நீக்க பல பொறிமுறை நிறைஞர்களை வரவழைத்துப் பார்த்தார்கள், அவர்களும் வந்து முயற்சித்தும் பயனற்று விட்டது...

இந்த நிலையில் தான் ஓர் அதிகாரி தகவலொன்றைத் தயங்கித் தயங்கிக் கூறினார்...

'அய்யா...!, நார்விச் (Norwich) நகரத்தில் வயோதிகர் ஒருவர் இருக்கின்றாராம். இயங்காமல் நிற்கின்ற எந்த இயந்திரத்தினையும் செயல்படச் செய்வாராம், வேண்டுமானால் அவரை அழைப்போமா என்றார்...

இயந்திரம் இயங்கினால் போதும். அழைத்து வாருங்கள் என்றார் அந்தக் கப்பலின் உரிமையாளர். அடுத்த நாளே அவரும் வந்து விட்டார்....

அவருடைய தோளில் ஒரு பெரிய நூற்பை தொங்கிக் கொண்டிருந்தது. கண்டாலே உபகரணங்களை நிறைந்திருக்கும் நூற்பை (Tool Bag) என்பது புரிந்தது, அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக கப்பலின் பழுதான இயந்திரத்திற்கு அருகே சென்றார்...

இயந்திரம் முழுவதையும் கவனமாக ஆராய்ந்தார். அனைத்தையும் ஆராய்ந்தப் பிறகு அந்த முதியவர் தன் உபகரண நூற்பையைத் திறந்தார், அதிலிருந்து ஒரு சிறிய சுத்தியலை எடுத்தார். இயந்திரத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுத்தியலால் மெதுவாக அடித்தார்...

அவ்வளவு தான்...! கப்பலின் இயந்திரம் பழையபடி சீராக இயங்கத் தொடங்கி விட்டது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கப்பல் நிறுவன உரிமையாளர்ளுக்கும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் மிகுந்த வியப்பு...

அந்த முதியவர் நான் வீட்டுக்குச் சென்று செய்கூலியை கணக்கிட்டுத் தாளில் எழுதி அனுப்பி வைக்கிறேன்' என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். இரண்டே நாட்களில் அவர் இயந்திரத்தைச் சீரமைத்ததற்கான பட்டியலும் வந்தது...

மொத்தம் 10,000 யூரோ பணம் கேட்டிருந்தார், பலரால் இயலாத பழுது தான். ஆனால், ஒரு சின்ன சுத்தியலால் ஒரே ஒரு இடத்தில் தட்டியதற்கு 10,000 யூரோ என்பது அதிகமில்லையா...?,  இதை அப்படியே ஒரு கடிதமாக எழுதி, முதியவருக்கு அனுப்பி விளக்கம் கேட்டார்கள்...

அந்த வயோதிகரிடமிருந்து பதில் வந்தது. நீங்கள் கேட்டிருக்கும் விளக்கம் நியாயமானது தான். சுத்தியலால் தட்டியதற்கு கூலி வெறும் 2 யூரோ தான். ஆனால்!, எங்கே தட்ட வேண்டும் என்று நான் தெரிந்து வைத்திருப்பதற்கான கூலி 9,998 யூரோ...! என்றாராம்...

ஆம் நண்பர்களே...!

அறிவுக்கூர்மையும். ஆளுமைத் திறனும் இல்லாவிட்டால் நம்மால் எடுத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாது...!

சிந்தனையாற்றல் உள்ள அறிவை எப்பொழுதும் பேணிக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், அப்பொழுது தான் நம்மால் மிகையாகச் சாதிக்கவியலும். நம் குறிக்கோள்களையும் விரைவில் அடைய முடியும்...!

கடுமையாக உழைப்பதைக் காட்டிலும் திறமையாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...!

இக்கட்டான சூழ்நிலையிலும் அவசரப்பட்டு முடிவு எடுப்பதை விட, அறிவுக்கூர்மையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி...!

உடுமலை சு தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.