திறனாய்வுகளை எதிர்கொள்ளுங்கள்.

எவராவது நம்மை ஏளனம் செய்து விட்டால், `நான் யாரென்று தெரியுமா...?’ என்று வெஞ்சினம் கொள்கிறீர்களா...?, அல்லது, “நம்மை இப்படி இழிவுபடுத்தி விட்டார்களே என்று முடங்கி விடுகிறீர்களா...?” இரண்டுமே திறனாய்வுகளை எதிர்கொள்ளும் சரியான அணுகுமுறையல்ல.

ஆயினும், எதிர்மறையான ஏளனங்களும், நிந்தனைகளும், மனதைக் காயப்படுத்தும் செயல்கள் கூட வாழ்க்கை முழுவதும் மனதில் வடுவாக சிலருக்குப் பதிந்து விடும். 

தாழ்வான திறனாய்வுகள் பலரை வாழ்வில் செயல்பட விடாமலேயே தடுத்திருக்கிறது, அவர்களின் திறனாய்வுகளில், கருத்துகளில் பொருள் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் தவறுகளைத் திருத்தி முன்னேற்றம் காணுங்கள்.

பொருளற்ற விமர்சனங்களால், ஏளனம் மற்றும் நிந்தனைகளால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி நிலையற்றது, அது உங்களின் முன்னேற்றத்தால், நீங்கள் பெற்ற சிறப்பால் அவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

அது போன்றவர்களின் ஏளனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள். அவர்களுக்கு பதில்களால் பதிலடி கொடுக்காமல், முன்னேற்றத்தால் அவர்களிடம் மனம் மாற்றம் ஏற்படச் செய்யுங்கள்.

உடல் அமைப்பு, ஆடைத் தோற்றம், பெற்றோரின் நிலை போன்ற பல காரணங்களுக்காக சிலரைப் புனைப்பெயர் சூட்டி அழைப்பது சிலருக்கு வேடிக்கையாகத் தோன்றலாம், அதற்காக கலங்க வேண்டியதில்லை. அவர்களே இன்னும் பண்பட வேண்டியவர்களாவார்கள்.

அப்படிப் பேசுபவர்களிடம் எதிர்த்து விவாதிக்க வேண்டாம். 

சிறு புன்னகையுடன் கண்டு கொள்ளாது கடந்து சென்றாலே அவர்கள் சோர்வடைவார்கள்.

வாழ்க்கை முழுவதுமே இதுபோன்ற திறனாய்வுகள் மற்றும் எதிர்கருத்துகளை எதிர்கொள்ளப் பழக வேண்டும், பொருளார்ந்த சமூக வாழ்க்கையின் அடித்தளமே எதிர்கருத்துகள் தான்.

சரியோ தவறோ, எதுவாக இருந்தாலும் ஒன்றைப் பற்றிய பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய திறனாய்வுகள் தான் உங்கள் செயல்களின் அறுவடை.

வெறும் பாராட்டுகளால் மட்டும் மனநிறைவு அடைபவர்களை விட, திறனாய்வை சரியாக எதிர்கொண்டவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டவர்கள் என்றும் வெற்றியாளர்களாக நிலைப்பார்கள்.

எனவே!, புகழ்ச்சிகளில் மயங்க வேண்டாம், திறனாய்வுகளால் முடங்க வேண்டாம்...!

நம்மை எவராவது விமர்சனம் செய்யும் பொழுது அதன் உண்மைத் தன்மையை ஆய்ந்தறிய வேண்டும்.

உண்மையிலேயே நம் மீது தவறு இருந்து, அதை ஒருவர் சுட்டிக் காட்டியிருந்தால் அதைக் களைய முன் வர வேண்டும்.

இது இறங்கி வருவதல்ல; வளர்ச்சிப் பாதையில் மேலே மேலே செல்தற்கான வழி.

ஆம் நண்பர்களே...!

போட்டியாளர்களும், எதிராளிகளும் தீய எண்ணங்களுடன் உங்களைத் திறனாய்வு செய்து தீண்டி உணர்த்துபவர்களாக இருப்பார்கள்...(தீண்டி உணர்த்துதல்- சீண்டுதல்)

அவர்கள், உங்கள் வளர்ச்சியினால் கோட்பாடற்றுப் போவார்கள்...!

ஆனால்!, அதற்கு அவர்களின் வார்த்தைப் பொறியில் சிக்கி, நீங்கள் வாடி, முடங்கி விடாமல் திறனாய்வுகளை எதிர்கொள்ள வேண்டும்,  அதுதான் வெற்றியின் மறைபொருள்...! (மறைபொருள்- இரகசியம்)

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.