நாவிருந்து புறப்படும் வார்த்தைகள்.



நாக்கு வன்மையானது, இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது...

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும், இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணமாகி விடும்...

நாம் அடக்கத்துடன் இருப்பது அவசியம். புலனடக்கம் என்பது ஐம்புலனுக்கும் உரியது தான். அவற்றில் மற்றவற்றைக் காக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பேச்சில் அடக்கத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்...

ஒவ்வொருவரின் நாவிருந்தும் புறப்படும் வார்த்தைகள் மற்றவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம், சிலருக்கு மனதை உடைத்தெறியலாம். நம்பிக்கையை உடைத்தெறியலாம். ஆறாத வடுவை ஏற்படுத்தலாம்...

ஒருவரை சிந்தித்து வாழ வைக்கலாம். மற்றொருவரை சாகத் தூண்டலாம். ஒரு நொடிப்பொழுதில் நம்மை உயர்வடையவும் தாழ்வடையவும் செய்யலாம்...

கூடியவரை கடுஞ்சொற்களைத் தவிர்த்து விடுவது நல்லது. சினத்தால் வெளிப்படும் சொற்கள் காயப்படுத்துவதை விட, ஏளனமாக, புறக்கணித்துப் பேசும் வார்த்தைகளே அதிக வலியினைத் தரும்...

திருவள்ளுவர் சொல்கிறார்...!

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு." - என்று...

தீயால் சுட்ட புண்ணானது ஆறிவிடக் கூடியது, அதன் தழும்பு கூட மறைந்து விடக்கூடும். ஆனால், ஒருவரை நாம் கோபத்தால், வெறுப்பால், புறக்கணிப்பால் அல்லது அகந்தையால் நாவடக்கம் இன்றிப் பேசுவதால் அவர்கள் மனத்தில் உண்டாகும் காயம் ஆறவே ஆறாது...

இதனை வலியுறுத்தவே, "யாகாவாராயினும் நாகாக்க" என்றும் கூறுகிறார் அவர். 

ஒவ்வொருவரிடம் ஒரு நல்ல குணம், ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. அதைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும், ஒருவரைப் புண்படுத்துவது, பூவால் வருடுவது இரண்டையும் செய்யும் வல்லமை படைத்தது நம் நாக்கு.

ஒருவர் கூறும் நல்ல இனிமையான சொல், விரக்தியின் விளிம்பில் இருப்பவரைக் கூட மலர்ச்சியடையச் செய்கிறது. ஒருவர் வீசும் கடுஞ் சொல்லோ, நல்ல மனநிலையில் இருப்பவரைக் கூட வேதனைப்பட வைக்கிறது.

இனிய கனியைத் தேர்ந்தெடுப்பதா...?, புளிக்கும் காயைத் தேர்ந்தெடுப்பதா...? - இரண்டும் நம் கையில் தான்...

அல்ல. அல்ல. நம் நாவில் தான் இருக்கிறது...

தயவுசெய்து (Please), மன்னிக்கவும் ( Sorry), நன்றி ( Thank you) இவற்றை தாராளமாகப் பேச்சினூடே பயன்படுத்த வேண்டும்...

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு. அத்தகைய ஆற்றலும், சக்தியும் வாய்ந்த பேச்சு நம்மிடம் இருந்து வெளிப்பட வேண்டும்...

நமது பேச்சுப் பிறரை மகிழ்ச்சியுறுவதற்காகவும், எவ்வகையிலும் பிறரைக் காயப்படுத்தாததாகவும் அமைய வேண்டும்...

ஒருவரிடம் பேசும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிந்தித்து சுயமாகப் பேச வேண்டும்...

வாக்கினிலே இனிமை சேர்ந்தால் வாழ்வினிலும் இனிமையே கூடும் தானே...?

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.