புன்னகை எனும் மருந்து!

ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே செய்யக் கூடிய காரியங்களில் ஒன்று புன்னகைப்பது. 

எந்த விலங்குகளுக்கும் கிடைத்திராத - மனிதர்களுக்காக கிடைத்த - மிகப் பெரும் வரப்பிரசாதம் புன்னகை. 

மனிதர்களால் மிகவும் எளிதாக செய்யக் கூடிய காரியம் புன்னகை செய்வதைத் தவிர வேறெதுவும் இருக்காது.

புன்னகைப்பதன் மூலமாக பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழி கிடைக்கிறது. 

புன்னகைப்பது குறித்து நிபுணர்கள் பலர் சிறந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

புன்னகை செய்வதன் வாயிலாக மனஅமைதியும் தெளிவான சிந்தனையோட்டமும் கிடைக்கிறது.

மனது ஒருமுகமடைவதற்கு புன்னகை செய்வது பெரும் பங்கு வகிக்கிறது. 

யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலமாக மனதை ஒரு புள்ளியில் குவித்து ஒருமுகப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனால், புன்னகை செய்வதன் மூலமாக அந்தப் புள்ளியும் காணாமல் போய்விடுகிறது.

சுற்றியிருக்கும் அனைத்தையும் மறந்து புன்னகை செய்யும் போது வேறெந்தவித எண்ண அலைகளும் மனக் கோட்டைகளுக்குள் சஞ்சரிப்பதில்லை. 

ஆகையால் மனம் ஆழ்கடல் போல் அமைதியை அடைகிறது. உடலுக்கும் மனதுக்கும் எந்தவித மருந்துகளாலும் தர முடியாத பல நன்மைகளை புன்னகை எனும் அற்புத மருந்து தந்துவிடுகிறது.

துன்பத்திலும் புன்னகை செய்யப் பழக வேண்டும் என்று பெரியோர் கூறக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் உண்மையான பொருளை அறிவியல் ரீதியில் நாம் உணரத் தவறி விடுகிறோம். இன்பம், துன்பம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும் நம் மனதில் நிகழ்பவையே.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களே நமது செயலையும் நடத்தையையும் தீர்மானிக்கின்றன. 

நாம் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டால் அதற்கேற்ப நமது செயல்கள் இருக்கின்றன. 

நாம் சோகமாக இருப்பதாக எண்ணிக் கொண்டால் அதைப் பொருத்தே நமது செயல்களும் அமைகின்றன.

எனவே, சோகமாக இருக்க வேண்டிய தருணங்களிலும் மகிழ்ச்சியாக இருப்பதாக மனதை வடிவமைத்துக் கொண்டால் நமது செயல்பாடுகளிலும் மாற்றங்களைப் புகுத்த முடியும். 

நமது எண்ணங்களைத் தீர்மானிப்பதில் முகத் தசைகளுக்கு முக்கியப் பங்குள்ளது.

கவலை நம்மைச் சூழும் தருணங்களில் முகத்தசைகளில் ஏற்படும் மாற்றங்கள், கவலையை மேலும் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

அதே வேளையில் புன்னகை செய்வதன் மூலமாக முகத்தசைகளின் இயக்கத்தை மாற்றியமைத்தால் சோகமான தருணங்களைக் கூட மனதை நெருங்க விடாமல் செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புன்னகை செய்வதன் மூலமாக உடலும் மனமும் ஆரோக்கியமடைவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், தற்போது புன்னகையை வரவழைக்கும் கருவியாக நகைச்சுவை மாறிவிட்டது. 

ஆனால், நகைச்சுவை என்பது மட்டும் புன்னகையின் வாயிற்படி அல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

புன்னகை செய்வதற்கு எந்தவிதக் காரணமும் தேவையில்லை. உதாரணமாக பேருந்துப் பயணத்தின்போது தாயின் மடியில் அமர்ந்து குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டால் நமக்கு புன்னகை ஏற்படுவது இயற்கையே. 

மழை, வானவில், பெளர்ணமி நிலவு, இரவின் மடியில் தவழும் விண்மீன்கள் ஆகியவற்றைக் காணும்போதும் மகிழ்ச்சி ஊற்று பெருக்கெடுத்து புன்னகை நதியாகப் பாய்கிறது.

இவையனைத்தும் நகைச்சுவை என்ற வரையறைக்குள் அடங்காதவை. 

எனினும், இவற்றை உணரும்போது நாம் புன்னகை செய்யத் தவறுவதில்லை. இப்படி புன்னகை செய்யும் பழக்கத்தை சோகமான தருணங்களிலும் வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

எந்தவித தேவையுமில்லாமல் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பணியை புன்னகை செய்வது மேற்கொள்கிறது. 

அதற்காக இனி நாள்தோறும் அரை மணி நேரம் கண்டிப்பாக நான் புன்னகை செய்வேன் என்றெல்லாம் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.

புன்னகை புரிவது இயற்கையாகவே ஏற்பட வேண்டியது. அது உரிய மனப்பயிற்சியின் மூலமாகவே சாத்தியமாகும். 

அதைக் கொண்டு வருவதும் எளிதானதே. மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொண்டாலே போதும். இயற்கையின் மகிழ்ச்சியான தருணங்களையும், நம்மைச் சுற்றிலும் நாள்தோறும் நடந்தேறும் மகிழ்ச்சி நிறைந்த விஷயங்களையும் கவனிக்கத் தொடங்கி விட்டாலே புன்னகை புரிவது சாதாரணமாகிவிடும்.

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அலுவலகத்தின் சக ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் மகிழ்ச்சியாகப் பழகுவதன் மூலமாக புன்னகை புரிவதை நமக்குள் கொண்டு வந்துவிடமுடியும். 

நாம் புன்னகை புரிவதால் நமக்கு மட்டும் அதன் பலன் கிடைக்காமல் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கிடைக்கிறது.

ஒவ்வொரு நாள் நிறைவடையும்போதும் நமது வாழ்வு குறைந்துகொண்டே போகிறது என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டால், கவலைப்படுவதை விடுத்து புன்னகையோடு மகிழ்ச்சியான வாழ்வை நடத்துவதற்கான உத்வேகம் ஏற்படும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.