குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்களின் கடமை.

"Most potential  problems will not become mental health problems if we respond to them early.”

அந்தத் தந்தை தன் ஆறு வயது மகளை பாசத்தோடு வீட்டு வாயிலில் அவள் தலையை வாரிக் கொண்டிருந்ததைக் கண்டதும் எனக்கு அன்று கண்ணீர் மல்கியது. 

சந்தோஷமடையும் நேரத்தில்  எதற்குக் கவலை?  கவலைதான்.

 நிச்சயம் காரணம் இருக்கிறது.

அந்த குடும்பத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு கதையே இருக்கிறது.  

அந்தப் பிள்ளை கூட பாடசாலைக்கு போக முடியாமல்  இரண்டு கால்களிலும் மாக்கட்டுடன் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தாள்.  

போதைக்கு அடிமையான அந்தத் தந்தை கடந்து சில வாரங்களாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அன்றுதான் வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருந்தார். ஏற்கனவே வீட்டில் வறுமை.தாய் எங்கெங்கோ வீட்டு வேலை  செய்கிறாள்.  ஓரிரண்டு இடங்களில் யாசகம் கேட்டதாகவும் கண்டு சொன்னவர்களுமுண்டு. வெளியில் விளையாடிக் கொண்டிருந்த இந்தப்பிள்ளை அடுத்த வீட்டு மதிலில் அசட்டையாக கழற்றி, சாத்தி வைக்கப்பட்ட  இரும்புக்கு கேட்டுக்கு மேலேறி தன்தாய் காயப் போட்ட துணிகளை எடுக்கப் போய், 'கேற்' மேலே சரிந்து, பிறகு  எட்டுப் பேர் சேர்ந்து கனமான அந்தக் கேற்றை தூக்கித்தான் அதற்கடியில் விழுந்திருந்த  பிள்ளையை வெளியில் எடுத்தனர்.

 காதிலும் ,மூக்கிலும் இரத்தம் வடிந்து, கால்கள் முறிந்து இப்பொழுது வீட்டில்...

 சாதாரணதரம் படிக்க வேண்டிய தனது சகோதரன் கூட கல்வியை தொடர முடியாதவாறு நல்லவர்கள் ,கெட்டவர்கள் தெரியாமல் நண்பர்களோடு சுற்றுகிறான்.இது நான் கண்ட நேரடிக் காட்சி.

இது நமது வீட்டில் இல்லை. எங்கோ தான் நடக்கிறது என கடந்து விட முடியவில்லை. குழந்தைகளின் வாழ்க்கை அவர்களுக்கான உலகத்திலிருந்து பலாத்காரமாக பிடுங்கியெடுக்கப்பட்டு விடுகிறதா? அல்லது அவ்வாறாவதற்கு ஏதோ ஒரு காரணமாக  பெற்றோர்களோ,சமூகமோ இருக்கிறதா?

அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? ஒரு பிள்ளைக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய இடத்தில் அவர்களின் பாதுகாப்பு முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கிறதே..

கவலைதான்.

உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும்  பிள்ளைகள்  வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளின் போதெல்லாம் அவற்றைப் பற்றிய தலைப்புடன் நூற்றுக்கணக்கான ஆலோசனைகளும், விழிப்புணர்வுகளும் வந்து கொண்டுதானிருக்கின்றன.ஆனாலும் என்ன? ஒன்றை முடிக்க முயலும் போது இன்னொன்று அவர்களுக்கு சவாலாக அமைந்து விடுகிறது. 

உலகில் சுமார் 1.9885 பில்லியன்  குழந்தைகளில்

துரதிஷ்டவசமாக மில்லியன் கணக்கான குழந்தைகள பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதாக ஆய்வுகள் கூறுகிறன.

முக்கியமாக குழந்தைகள் வன்முறை, துஷ்பிரயோகம் , சுரண்டல்,  வறுமை,கொடுமை, பாதுகாப்பின்மை போன்ற சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

உலகத்தை அலங்கரிக்கும் இந்தச்  செல்வங்கள், எமது வீடுகளை நிறைத்திருக்கின்ற இவர்கள், எம் கண் முன்னாலிருக்கும் உயிர்கள் என இக்குழந்தைகள்  இவ்வகையான ஏதாவதொரு அச்சத்துக்கு உட்பட்டிருக்கிறார்களா? என்பதனை தினமும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்தப் பொறுப்பு முக்கியமாக பெற்றோர்களிடமே இருக்கிறது.

ஒரு குழந்தை அன்பு, பாதுகாப்பு, ஆரோக்கியம், நல்ல உணவு, இயக்கம் சார்ந்த  தேவைகள், மகிழ்ச்சியான சூழல் போன்ற முக்கிய தேவைகளை கொண்டதாக  இருக்கும்.

இவற்றில் குறைகள் ஏற்படும் போது, சமநிலைகள் தவறி குழந்தைகளின்  வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகிu விடுகின்றது.

குழந்தைகளின் அடிப்படை  உரிமைகளான உயிர் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை,  பங்கேற்பதற்கான உரிமை, ஆகியவற்றில் பாதுகாப்பு உரிமை மிக முக்கியமானதாகும். 

பாதுகாப்பென்பது குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, சுரண்டல், தீங்கிழைத்தல், மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, ஆரோக்கியமாக உயிர் வாழவும் மற்றும் உடல், மன வளர்ச்சி பெற்று, தனித்தன்மையுடன்  பாதுகாக்கப்படுவதுமாகும்.

ஒரு  சிறந்த பெற்றோர்களாலேயே இவற்றை வழங்க முடிகிறது.

பெற்றோர்களாக இருப்பவர்கள் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும்  தாங்கள் இருக்கின்றோமா என உறுதி செய்து கொள்வது அவசியம். 

குழந்தைகளின் வாழ்க்கையைச் சமாளிப்பது மிகவும் சிரமமாக இருந்தாலும், அவர்களது உடல் ,உள ஆரோக்கியத்தை பாதுகாப்பது முதன்மையான கடமையாக ஆக்கி விடுகின்றது. இதற்காக பின்வரும் சில வழிமுறைகள் பின்பற்றப்படுவது அவசியம்.

🔹பிள்ளைகளை சுய திறன்களை, நல்ல மனநிலைகளை வளர்ப்பதற்காக பெற்றோர்களே  ஒரு  முன்மாதிரியாக இருத்தல்.

 🔹நடத்தை மாற்றங்களை கவனித்துக் கொள்ள தகவல் தொடர்புகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் வைத்திருத்தல்.

🔹தெளிவான எல்லைகளை அமைத்தல். 🔹அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள் என்பதனை அவர்களுக்கு வெளிப்படையாகவே தெரியப்படுத்தல்.

 🔹நேர்மறையான கருத்து மற்றும் ஊக்கத்தை வழங்குதல்.

🔹மகிழ்ச்சியான இயக்கங்களை ஊக்குவித்தல்.

🔹 அவர்கள் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளைப் பற்றி தொடர்ந்து பேசுதல்.

🔹 முடிவெடுப்பதில் அவர்களை ஈடுபடுத்தல் .

என இவ்வழிமுறைகளை பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம்

 குழந்தைகளிடம் எதை எதிர்பார்க்கின்றோமோ அது எம்மிடத்திலும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதனை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தமது  வாழ்க்கை மட்டத்திலிருந்தே  ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக தம்பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருப்பது முக்கியம்.இது  ஒரு  சமூகத்தையே சிறப்பாக கட்டி எழுப்ப வித்திடுவதற்கு சமம்.

நேர்மறையாக சிந்தித்துu அவர்களை வழிநடத்துவது போலவே, அவர்களுக்கேற்படும் உளப்பாதிப்புகள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை  கெடுக்கும் காரணங்கள் இருக்கின்றன.

குழந்தையின் மன ஆரோக்கியத்தை  பாதிப்பனவாக பின்வருவன அமையலாம். தொடர்ச்சியான வறுமை,குடும்ப அழுத்தத்துடன் தொடர்புடைய சூழ்நிலைகள்,  துஷ்பிரயோகம் ,அல்லது நீண்டகால புறக்கணிப்பு, வீட்டு வன்முறை அல்லது பெற்றோரின் ஆரோக்கியமற்ற மனநலம்,போதைப்பொருள்  போன்றவை ஒரு குழந்தையின் உளப் பிரச்சனைகளின் அபாயத்தை உயர்த்தக் கூடியவையாக இருக்கின்றன.

இதேவேளை பெற்றோர்களாகிய நாமும் அவர்களது மன வலிமையை இல்லாமலாக்கும் சில தவறுகளை செய்து கொண்டுதான் இருக்கின்றோம் என்பதை அறிய வேண்டும்.

அவ்வாறு பெற்றார்கள் மூலமாக நடைபெறும் சில தவறுகளில்:

🔹 குழந்தையின் உணர்வுகளைக் அறிய முனையாதிருத்தல். 

🔹அவர்களை எப்போதும் தோல்வியில் இருந்து காப்பாற்றுவதற்காகவே பழக்கப்படுத்தல்.

🔹குழந்தைகளை எல்லா விடயங்களிலும் மிகைப்படுத்துதல்.

🔹 அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு.

🔹அவர்கள் எப்போதுமே வசதியான வாழ்க்கை ஒன்றையே வாழ ,சந்தர்ப்பம் வழங்குதல்.

🔹அவர்களுக்கான எல்லைகளை, வரையறைகளை அமைக்காதிருத்தல்.

🔹அவர்களை எல்லாவற்றிற்கும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற உணர்வை கொடுத்தல்.

🔹 அளவுக்கதிகமான பணப்புழக்கத்திற்கு அனுமதித்தல். மற்றும் அவர்களின் தவறுகளை விமர்சிக்காதிருத்தல்.

🔹எல்லா நேரங்களிலும் அவர்கள் வேண்டுகோளுக்கு சார்பாகவே நடந்து கொள்ளல்.

🔹 பிள்ளைகளுக்கு  பிறர் பொறுப்பு கூறுவதை தடுத்தல்.

🔹அவர்களை பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்து வழிநடத்த முயற்சி செய்தல்.

என்பது போன்ற முக்கியமான தவறுகள் பெற்றோர்களால் ஏற்பட்டு ,பிள்ளைகளுடைய நேர்த்தியான வளர்ச்சிக்கு அவர்களே முட்டுக்கட்டையாக  இருந்துவிடக் காரணமாகின்றன.

Most potential  problems will not become mental health problems if we respond to them early.”

நிச்சயமாக பிள்ளைகள் பற்றிய அதீத கவனமென்பது, அந்தப் பிள்ளை கர்ப்ப காலத்திலிருக்கும் போதே  பெற்றோர்களுக்கு ஏற்பட்டு விட வேண்டும். எனவே பெற்றோர்கள்  குழந்தை ஒன்றை  பெற்றதோடு தனது கடமை முடிவடைந்து விட்டதென எண்ணாமல், அவர்கள்  வாழ்க்கைக்குத் தாங்களே பொறுப்புக்குரியவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை ஒவ்வொரு நிமிடமும் நினைவில் வைத்திருக்க  வேண்டும்.

The best inheritance a parent can give his children is a few minutes of his time each day.”

ஒரு பெற்றோர் தனது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த சொத்துழ ஒவ்வொரு நாளும் அவரது நேரத்தின் சில நிமிடங்களே." 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.