வாழ்க்கையின் மெய்யியல்...!

வாழ்க்கை என்பது ஒரு மாயச்சுடர். ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் அந்த மாயச்சுடர் அணைந்துப் போய் விடும்...

இருந்தாலும் ஆசை என்னும் மாயவலையில் வீழ்ந்து வாழும் காலத்தைச் சிக்கலாக்கி விடுவது தான் மனித மனங்களின் இயல்பாகி விட்டது...

ஏன் இந்தப் பொருளற்ற ஆசைகள்!, ஆசைகள் ஆசைகளாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அதுவே!, பேராசையாய், பேரவாவாய், வெறியாய், பொறாமைத் தீயாய், துரோகமாய், ஏமாற்றுவதாய் என்று நீண்டு, தம்மையும் அழித்துப் பிறரையும் அழித்து விடுகிறது…!

பலரது இறப்புகளையும் கண்ட பின்னும் பலரது மனங்கள் திருந்த மறுப்பதேன்…?

வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போன்றது. ஊதி விட்டால் நீர்க்குமிழி  உடைந்து போய் விடும்...

இதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாதபடி சிலருக்கு ஆசைகள் அறிவுக் கண்ணை மறைத்து விடுகின்றன...

ஓர் நாள் அனைத்தும் பொருளற்றுப் போகும் போது, வீடு வாசல் பணம் பதவி எதுவுமே உடன் வரப் போவதில்லை...

இருந்தும், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தான் எத்தனை எத்தனை கனவுகள், நனவுகள், ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கோபங்கள், தாபங்கள், சண்டைகள், சல்லாபங்கள் இன்னும் எத்தனை..!  எத்தனையோ...!!

உடலை விட்டு உயிர் போன பின் தான் எல்லாமே மாயை என்பது புரிகிறது...!

மாயம் என்று தெரிந்தும் மனம் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்று பொல்லாத்தனமாய் அலையும். இந்தப் பொல்லாத்தனங்கள் எல்லாம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தான்...

தண்ணீரில் போடும் கோலம் போல, வாழ்க்கையும் நிலைக்காதது. தரை மீது காணும் எதுவுமே நிலைக்காது...

நாம் பிறக்கும் போது தன்னந்தனியாக வெற்றுடம்புடன் பிறக்கிறோம். பிறகு இங்கிருந்து செல்லும் போது  வெறும் கையுடன் தான் செல்கின்றோம்...

பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று உறுதியாக இருக்கும். பிறப்பைக் கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைகிறோம்...

சாதிக்கும் எவருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், உறுதியாக ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது...

இடையிலே நாம் எதற்கெல்லாம் ஆசைப்பட்டு  சேர்த்து வைத்தோமோ அவையெதுவுமே நம்மோடு வருவது இல்லை...

ஆம் நண்பர்களே...!

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை, வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிடப் போவதும் இல்லை...!

வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதை பொருளுள்ளதாக வாழ்ந்து விட்டுப் போவதில் என்ன தயக்கம்...?

இருக்கும் வரை அதிக ஆசைகளைத் தவிர்த்து மற்றவர்களின் அன்பைப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.