யார் மாற வேண்டும்...?

அது தவறு, இது தவறு, அவர் தவறு செய்கிறார், இவர் தவறு செய்கிறார் என்று நாள் முழுவதும் யாரவது ஒருவரைக் குறை சொல்லியே வருகின்றோம். ஆனால் மற்றவர்கள் செய்த அதே தவறை  நாமும் செய்து கொண்டு தான் வருகின்றோம்...!

இதில் யார் செய்வது தவறு...?, யார் மாற வேண்டும்...?என்பதே கேள்வி.

எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறி விட முடியாது. ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றால் முதலில் அதற்கான தகுதி நமக்கு வேண்டும்.

எந்தச் செயலிலும் நாம் முன் மாதிரியாக இருந்தால் தான் நம் சொல்லுக்கு மரியாதை இருக்கும்.

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது. நாடே அதைப் பற்றியே எங்கும் பேச்சாக இருந்தது.

அந்தக் குழந்தைக்கு இறை வழிபாடு செய்து கொண்டே, நிரம்பி வழியும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தார் மூன்று குழந்தைகளைப் பெற்றவர்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைக்கு பரிதாபப்பட்டுக் கொண்டே பதினாறு பள்ளிக் குழந்தைகளை தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்கிறார் ஒரு முச்சக்கர வாகன ஓட்டுநர்.

ஆழ்துளைக் கிணற்றை மூடாதவர்களை வசை கூறியவாறே கைபேசியில் பேசியபடி இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார் வாகன ஓட்டுனர் ஒருவர்.

சீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக் கொண்டே பாதையின் அருகில் உள்ள மின் மாற்றியின் (டிரான்ஸ்பார்) கீழ் அவசரத்துக்கு ஒதுங்கினார் ஒரு சாமானியன்.

மனிதாபிமானம் என்பதே இப்போது கொஞ்சம் கூட யாருக்கும் இல்லை என்று பேசிக் கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பவரை காணொளி எடுத்து வலைதளங்களில் புகுத்தினார் ஒரு நல்லவர்.

மக்கள் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வரை இப்படித் தான் இருக்கும் என்று திட்டி விட்டு, 50,000 ஆயிரம் ரூபாய் கையூட்டு கொடுத்து பணியிட மாற்றம் வாங்குகிறார் ஒருவர்.

நாட்டின் பொருளாதாரம் சரிந்துப் போனதால் மனம் உடைந்து, தினமும் 500 ரூபாய் மதுபானக் கடைக்கு (டாஸ்மாக்) வீண்செலவு செய்கிறார் ஒரு குடிமகன்.

நீர் வாங்கவும், மது (பீர்) வாங்கவும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டே, தொழிற்சாலைகளால் தான் காற்று மாசு ஏற்படுகிறது என்கிறார் ஒருவர்..

பொதுவாக அடுத்தவர் முதுகைப் பார்த்து சிரிக்கும் எவரும் தன் முதுகை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை.

நம்மிடம் ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு மற்றவர்கள் திருந்த வேண்டும் என்று எண்ணுகின்றோம்...

ஆம் நண்பர்களே...!

நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்...!

அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம் தான்’ என்பது புரியும்...!!

மாற்றத்தை உருவாக்க விரும்புபவர்கள் தங்களிடம் இருந்து தொடங்க வேண்டும். நாம் மாறினால் மொத்த சமூகமும் மாற வாய்ப்பு உருவாகும்...!!!

ஆம்!, முதலில் நாம் மாறுவோம்.

தானாகவே மக்கள் மாறுவார்கள். மாற்றம் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.