வாழ்க்கை நீடித்த கல்வியும் மனித வாழ்வும்

கல்வி என்பது ஒருவனுடைய அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் ஏற்படுகின்ற ஒரு விருத்தி ஆகும்.  ஒரு மனிதன் சமூகத்தில் தனக்கான அங்கீகாரம், தனக்கான கௌரவம் என்பவற்றினை நிலைநாட்ட வேண்டும் எனில் கல்வி கற்க வேண்டும். ஏனெனில் கல்வி என்பது ஒரு தனி மனிதனின் நிலை மட்டும் அன்றி அவனது நடத்தைப் பாங்கினையும் மாற்றும் ஒரு செயல்முறையாகும். அந்தவகையில் கல்வியாளர்களின் கூற்றுப்படி,”இளைய தலை முறையை வழிநடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும்  கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது”. 

கல்வி சிறப்பு பற்றி நோக்கினால், கல்வி கற்றவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும், அவர்கள் பிற சமூகத்தினால் மதிக்கப்படுகின்றார்கள். இதற்கெல்லாம் ஒரு அடிப்படை காரணம் அவர்கள் கற்ற கல்வியே. கற்றவனுக்கு தனது நாடும் ஊரும் அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவரின் சிறப்பு இருக்க ஒருவர் தான் பிறந்தது முதல் இறக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தினை கழிப்பது மிகவும் சிரமமான காரியமாகும். ஏனெனில் மாறுகின்ற உலக மாற்றத்திற்கு ஏற்ப ஒரு மனிதன் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

“யாதும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு” என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

இனம், மதம், மொழி மற்றும் கலாச்சாரம் என்ற வேறுபாடின்றி கல்வி என்பது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டிய ஒரு அற்புதமான ஆயுதம் ஆகும். ஆரம்ப காலத்தில் செல்வந்த வீட்டு பிள்ளைகள் மட்டுந்தான் கல்வி கற்க வேண்டும் என்கின்ற ஒரு எண்ணக்கரு காணப்பட்டது.

 ஆனால் தற்காலத்தில் அந்த எண்ணக்கருவினை தகர்த்தெறிந்து ஏழை, பணக்காரன் எனும் பேதமில்லாமல் அனைவரும் கல்வி கற்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் கல்வி சமமாக வழங்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணக்கரு தற்காலத்தில் காணப்படுகிறது.

வாழ் நாள் முழுவதும் கற்றல் என்கின்ற கருத்தானது, ஒரு தனிமனிதனை மட்டுமன்றி சமூகத்தினை மாற்றும் ஒரு ஆயுதம் என்றே குறிப்பிட முடியும். அந்தவகையில் வாழ் நாள் முழுவதும் கற்றல் என்பது ஒருவன் தான் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உலக மாற்றத்திற்கு ஏற்ப கல்வியினை கற்று அதன்படி செயற்படுதல் ஆகும். 

மேலும் கல்வியானது அறிவு, திறன் மற்றும் சிந்தனை செயல்கள் போன்றவற்றை தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி அத்தோடு பண்பாடு மற்றும் நடத்தை போன்றவற்றையும் ஒரு மனிதனுள் புகுத்தி   மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள ஒருவனாக மாற்றம் அடையச் செய்வதும் ஆகும். இதனையே வாழ் நாள் முழுவதும் கற்றல் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தை எடுத்து நோக்கினால் ஆரம்ப காலம் முதல் தற்காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொரு வகையில் உலகம் மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அதாவது ஆரம்ப காலத்தில் கைகளினால் மற்றும் மனிதன் தன் உடலை வருத்திக் கொண்டு வேலை செய்தான். ஆனால் இன்றைய தற்காலத்தில் இயந்திரப் பாவனைகள் அதாவது விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையிலே காணப்படுகிறது. இதற்கெல்லாம் ஒரு அடிப்படை காரணம் கல்வி என்றே கூற வேண்டும்.

அறிவு என்பது நாம் ஏதோ ஒரு வகையில் கற்கும் அடிப்படையிலே பெற்றுக் கொள்கிறோம். அவ்வாறு பெற்றுக் கொள்ளும் அறிவினை வைத்து கொண்டே நம்முள் காணப்படும் திறன்களை அறிந்து கொள்கிறோம். அறிவு மற்றும் திறனை வைத்து கொண்டே உலக மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கின்றோம். 

அந்த வகையில் நோக்கினால், பாடசாலைக் கல்வியினைக் கற்றுக் கொள்வது மட்டும் வாழ்நாள் நீடித்த கல்வி என்று கூறி விட முடியாது.   அதற்கு அப்பால் உள்ள உயர்கல்வி மற்றும் முறை சார்ந்த, முறை சாராக் கல்வியினையும் பெற்றுக் கொள்வதுடன் உலக மாற்றத்திற்கு ஏற்ப ஒருவன் தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியும்.

பாடசாலை கல்வியினை விட்டு இடை விலகியோர் மற்றும் படிக்காத பாமர மக்கள் போன்றோர் , முறை சாராக் கல்வியினை பெற்றுக் கொள்கிறார்கள். (உ+ம்): முன் பள்ளிக்கல்வி, சிறுவர் பராமரிப்பு நிலையம், இளைஞர் மற்றும் வளர்ந்தோருக்கான எழுத்தறிவு வகுப்புகள், தொழிற்பயிற்சி நெறிகள் ( தையல் வகுப்பு, கேக் தயாரிப்பு மற்றும் அழகுக் கலை தொடர்பான தொழிற்பயிற்சி) போன்றவற்றின் மூலம் ஒரு மனிதன் தன்னை வளப்படுத்த மற்றும் சமூகத்தில் தானும் ஒரு மனிதனாக தலை சிறந்து விளங்க , உலக மாற்றங்களை அறிந்து கொள்ள வாழ் நாள் முழுவதும் கற்றல் ஏதோவொரு வகையில் செயற்படுகிறது. 

மேலும் NVQ, VTA மற்றும் தற்காலத்திற்கு பொருத்தமான English and computer course போன்றவற்றையும் கற்பதன் மூலம் மனிதன் தன்னை வளப்படுத்திக் கொள்கிறான். தனக்கான எதிர்கால வாழ்க்கையை அவனே தீர்மானித்து கொள்கிறான்.

கல்வி என்பது பாடநூல்கள் வாயிலாகப் பெறுவது என்கின்ற எண்ணம் பல பெற்றோர்களிடையே நிலவுகின்றது. இந்த சிந்தனையை மகாத்மா காந்தி  மறுதலித்தார். பாடநூல்கள் மூலமாகவே அனைத்தையும் கற்பித்து விடலாம் எனில், ஆசிரியர்களின் சொற்களுக்கு மதிப்பற்று போய் விடும். 

“பாட நூல்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர், அவரது மாணவர்களிடத்தில் சுய சிந்தனையை விதைக்க முடியாது.” என்றார். ஒருவர் கற்கும் கல்வி அவர் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதனால் தான் “வாழ்க்கைக்கான கல்வி, வாழ்க்கை மூலம் கல்வி, வாழ்க்கை முழுவதும் கல்வி” என்பதை காந்தி வலியுறுத்தினார்.

விவசாயி, கூலித் தொழில் செய்யும் தொழிலாளி மற்றும் நிறுவனம் ஒன்றை நடத்தும் முதலாளி என ஒவ்வொருவரும் தங்கள் தொழிலினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியான செயற்பாடுகள் நிகழ்ந்தால் முன்னேற்றம் எனும் கரையினை அடைவது கடினமான ஒரு விடயமே. 

அந்த வகையில் தனது தொழிலினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம், எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம், எவ்வாறு பொருளாதாரத்தை ஈட்டலாம். என ஒவ்வொரு முதலாளியும் மற்றும் தொழிலாளியும் அறிந்து நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.

தற்காலத்தில் பாடசாலை மட்டங்களில் வாழ்க்கை நீடித்த கல்விக்காக பல்வேறுபட்ட நடைமுறைகள் காணப்படுகின்றன. 

இம்முறையானது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக காணப்படுகிறது. அதாவது தற்காலமாக இருந்தாலும் சரி எதிர்காலமாக இருந்தாலும் சரி இப்போது எல்லாமே நவீன தொழில்நுட்ப காலமாக மாற்றமடைந்து வருகின்றது. 

இதனை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் தொழினுட்பம் எனும் பாடம் கற்பிக்கப்படுகிறது. இக் கல்வி முறையானது ஒரு வாழ்க்கை நீடித்த கல்வியாகவே மனித வாழ்க்கையில் காணப்படுகிறது.

வாழ் நாள் நீடித்த கல்வியானது ஒவ்வொரு நாளும் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களும் கல்வியைப் பெறல் வேண்டும். என்பதனையே நோக்கமாகக் கொண்டு அமைகிறது. இது மனித வாழ்விற்கும் அடிப்படையாகவும் அமைகிறது.

கல்வி என்பது ஒரு மனிதனை திறமையான, நல் சிந்தனையுள்ள, ஆளுமைமிக்க மனிதனாக மாற்றும் ஒரு ஆயுதம் ஆகும். அந்த வகையில் மனிதனானவன் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும்(பிறப்பு முதல் இறப்பு) ஏதோவொரு வகையில் கல்வியினை கற்க வேண்டும். இதன் மூலம் மனிதன் தனக்கான ஒரு அங்கீகாரத்தை அமைத்து கொள்ள வேண்டும். 

இவ் உலகில் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்கின்ற எண்ணத்தினை விட்டு இவ் உலகில் பிறந்து நமக்கான ஒரு பாதையினை அமைத்து பல நற் பெயர் மற்றும் சாதனைகளோடு நம் வாழ்நாளினை நிறைவு செய்வோம் என்ற நம்பிக்கையுடன் எதிர்கால வாழ்க்கையினை அமைத்து கொள்ள வேண்டும். 

இதற்கெல்லாம் ஒரு அடிப்படை காரணியாகவும் , உந்துசக்தியாகவும் அனைவருக்கும் உறுதுணையாக அமைவது வாழ் நாள் முழுவதும் கற்றல் எனும் கல்வி எண்ணக்கரு ஆகும். இதுவே எதிர்கால வாழ்க்கைப் பயணத்திற்கும் பொருத்தமான விடயமும் ஆகும்.

“நீங்கள் கற்றலை நிறுத்தியதும், நீங்கள் இறக்கத் தொடங்குகிறீர்கள்”.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - 

சிவகுமார் விஷாளினி

2ம் வருட 1ம்அரையாண்டு கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி, கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை கலை கலாசாரப் பீடம்,

கிழக்கு பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.