மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பெற்றோர்களின் திணிப்பு

இன்றைய காலகட்டத்தினை பொறுத்தவரையில் சிறார்கள் மூன்று வயது எட்டினாலே ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் சேர்த்து விடப்படுகின்றனர்.

எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாத குழந்தைகள் வீட்டை கடந்து புதிய சூழலில் ஐக்கியமாகும் போது சுதந்திரமாகவே சிறகடிக்க முயல்வர்.

இருப்பினும் நாகரீக வளர்ச்சி மற்றும் கல்வி செயற்பாடுகளின் விருத்தி போன்ற காரணங்களினால் குழந்தைப் பருவம் முதலே நசுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் ஆடல், பாடல், உடற்பயிற்சிகள் என ஆரம்ப காலங்களில் குழந்தைகளின் கல்வி அமைப்பு கட்டி எழுப்பப்பட்டிருந்தாலும் தற்சமயம் வாசித்தல், கணிதச் செயற்பாடுகள், போட்டிப் பரீட்சைகள் என விசாலமாக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

மேலும் இச் சிறார்களை ஊக்கப்படுத்துவதாக எண்ணி பல பெற்றோர்கள் வீட்டில் வைத்து கற்பிப்பதை தவிர்த்து மூன்று வயதில் பிரத்தியேக வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். 

கள்ளம் கபடம் அல்லாத இச் சிறுசுகளை கட்டு போட்டு தவிக்க வைக்கின்றது இச் செயற்பாடுகள். மேலும் சக பெற்றோர்களின் குழந்தைகளுடன் தமது குழந்தைகளை ஒப்பிடுதல் போன்றவற்றால் பிள்ளைகளிடம் சிறுவயது முதல் தாழ்வு மனப்பாங்க உருவாகின்றது.

இவ்வாறு சிறுவயது முதல் ஒடுக்குதல்களுக்கு உட்பட்ட சிறார்கள் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட பின் எதிர்கொள்ளும் உலக மகா யுத்தமாக தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை குறிப்பிடலாம்.

 பத்து வயது பட்டாம்பூச்சிகளின் தோள்கள் கணக்கும் வகையிலான புத்தக முடிச்சுகளும் பொழுது புலந்தது முதல் பொழுது சாயும் வரைவிலான ஓட்ட, ஆட்டங்களும் பொதுவான ஒன்றாகவே மாறிவிட்டது என கொள்ளலாம்.

அதிலும் வெட்டுப் புள்ளிகளை தொடும் நோக்கில் அரசாங்க நூல்களையும் தாண்டிப் பிரத்தியேக வெளியயீட்டு நூல்களாலும் இப் பிஞ்சுகள் திணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றர்.

மேலும் ஓடி விளையாட வேண்டிய வயது பிரிவினருக்கு பல கட்டுக்கோப்புகளுக்கு இயயைபடையச் செய்யும் வண்ணம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் எனும் எண்ணம் பெற்றோர்களால் திணிக்கப்பட குழந்தைகளும் அதனை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டு ஓய்வுகளற்ற இயந்திரமாக உழைக்கின்றனர்.

அத்துடன் பெற்றோர்கள் தமது குடும்பங்களுடன் ஒப்பீட்டு நோக்கல்களுக்கு இப் பெறுபேறுகளையும் ஒரு கணியமாகவே எண்ணுகின்றனர்.

இங்கு குழந்தைகளின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பது கூட கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஆனால் முன்னோடி பரீட்சை புள்ளிகளும் உயர் புள்ளிகளும் தினமும் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒன்றாக பெற்றோர்களால் கருதப்படுகின்றது.

ஆரம்பப் பிரிவில் எதிர்கொண்ட திணிப்புக்கள் எமன் பாசக்கையற்றுடன் எம்மை சுற்றுவது போல பிள்ளைகளை சுற்றுகின்றது எனலாம். 

தரம் 6 செல்லும் பிள்ளை முதல் வரலாறு, புவியியல்,குடியுரிமை போன்ற பாடங்களுக்கு கூட பிரத்தியேக வகுப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன. அதுவும் தவணைப் பரீட்சைகள் முடிவுகளின் உந்துதல்களின் அடிப்படை காரணமாகவே அமைகின்றது எனலாம்.

 மேலும் கா.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளும்போது மாணவர்களிடையே திணிக்கப்படும் கருப்பொருளாக ஒன்பது பாடங்களிலும் "A" சித்தியினை அடைவதாகவே அமைகின்றது எனலாம். மேலும் தமது குடும்ப அந்தஸ்துகளை பிரதிநிதித்துவப்படுத்தியே பொதுவான ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. 

இதனால் தமது சொந்த பெற்றோர்களிடம் கூட விருப்பு, வெறுப்புக்களை பகிர்ந்து கொள்ளும் எண்ணப் பாங்குகள் பிள்ளைகளிடம் அருகிச் செல்கின்றது எனலாம். அது மட்டுமல்லாது கா.பொ.த உயர்தர பரீட்சை பாடப்பிரிவுகள் கூட பெரும்பாலும் பெற்றோர்களின் விருப்புக்களாகவே அமைகின்றது. 

இவ்வாறு கை பொம்மைகளாக செயல்படும் மாணவர்கள் அறியாத பல சந்தர்ப்பங்களில் மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர். இவ்வாறான திணிப்புகள் காரணமாகத்தான் உயர்தரப் பெறுபேறுகளை அடுத்து சில தற்கொலைச் சம்பவங்களும் பதிவாகின்றன எனலாம்.

இவ்வாறு சிறு குழந்தைகள் முதல் உயர்தர பிரிவு வரை மாணவர்கள் பெற்றோர்களால் திணிக்கப்படுவதை விடுத்து அவர்களின் கைகளிலே கல்விப் பயணத்தை தொடர வழி வகுத்துக் கொள்ளலாம். 

மேலும் அவர்களின் பயணத்திற்கு சிறந்த வழிகாட்டல்களே அவசியம் மாறாக திணிப்புகள் அவர்களை நெருக்கும் போது பாதைகள் மாற நேரிடும் எனவே தமது குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் செயல்பாடுகளிலே தங்கியுள்ளது எனலாம்.

தவராசா தர்ஷிகா

2ம் வருட 1ம் அரையாண்டு கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி,

கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை கலைகலாசார பீடம்,

கிழக்கு பல்கலைக்கழகம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.