தற்கால உலகில் வாழ் நாள் நீடித்த கல்வியின் வகிப்பங்கு

கல்வி என்பது அறிவு, திறமை, செயல், சிந்தனை என்பவற்றை தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி ஒரு மனிதனை முழுமையான ஆற்றல் உள்ளவனாக மாற்றமடைய செய்வதாகும். இக் கல்வியை கற்பதற்கான கால வரையறை கிடையாது. இவ்வுலகில் மனிதன் பிறந்தது முதல் அவனது உயிர் உடலை விட்டு பிரியும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே வாழ் நாள் நீடித்த கல்வி ஆகும். 

வாழ் நாள் நீடித்த கல்வி என்பது பரந்த ஓர் எண்ணக் கருவாகும். ஒருவன் வாழ்க்கை முழுவதும் கற்க வேண்டும். அத்தோடு நாட்டில் உள்ள அனைவரும் கற்க வேண்டும். அவ்வாறு கற்கப்பட வேண்டிய கல்வி பாடசாலைகளில் மட்டுமன்றி, கற்றல் தொடர்பான அனைத்து நிலையங்களிலும் வகைகளிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என பரந்த ஓர் எண்ணக்கருவாக இது காணப்படுகின்றது.

நைதலிம் முறையின் அடிப்படையில், கல்வி என்பது பாட நூல்கள் வாயிலாக பெறுவது என்ற எண்ணம் பெற்றோர்களிடம் நிலவுவதால் மகாத்மா காந்தி அதனை மறுதலித்து, பாட நூல்கள் மூலம் அனைத்தையும் கற்பித்து விடலாம் என்றால் ஆசிரியர்களின் மதிப்பு குறைந்து விடும். 

பாட நூல்களை கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களின் சுய சிந்தனையை வளர்க்க மாட்டார் என்றார். இதனால் ஒருவர் கற்கும் கல்வி அவர் வாழ்க்கைக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என்பதை, வாழ்க்கைக்கான கல்வி, வாழ்க்கை மூலமே கல்வி வாழ்க்கை முழுவதும் கல்வி என்பதை வலியுறுத்தியுள்ளார். எனவே இதன் மூலம் மகாத்மா காந்தி வாழ் நாள் நீடித்த கல்வியின் முக்கியத்துவத்தை கூறியுள்ளார்.

இந்த வாழ் நாள் நீடித்த கல்வியானது முறை சார், முறை சாரா வழிகளில் மாத்திரமல்லாது, விரைவாக பெருகி வரும் அறிவை பாடசாலையோடு சமாந்தரமாக இணைத்து பல்வேறு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. உதாரணமாக, திறந்த பாடசாலை, தொலைக் கல்வி, வளர்ந்தோர் கல்வி, திறந்த கல்வி, விழுமிய கல்வி, பூரண கல்வி, அகில சமூகத்திற்கான கல்வி, E- learning போன்ற அனைத்து வழி முறைகளிலும் வாழ் நாள் நீடித்த கல்வி மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு கற்றல் சமூகத்தில் உள்ள நோக்கங்களை பொதுவாக கவனத்தில் எடுக்கும் போது அவை சமூக, கலாச்சார,மத, பொருளாதார, தொழில் போன்ற பல்வேறு கோணங்களிலும் நோக்க வேண்டியுள்ளது.

வாழ் நாள் நீடித்த கல்வியின் நோக்கங்களாக, தற்கால நவீன அறிவுக்கேற்ப தன்னை மாற்றி அமைத்து கொள்ளல், வாழ்க்கையின் பண்பு சார் விடயங்களை மென்மேலும் அபிவிருத்தி செய்து கொள்ளல், ஜனநாயகம் மிக்க உலகில் சிறந்த பிரஜைகளை உருவாக்குதல், நடை முறைக்கேற்ப புதிய பல விடயங்களை அழித்து கொள்ளல், ஓய்வு நேரத்தை பயன்னுள்ளதாக மாற்றுதல், முழுமையான ஆளுமை உள்ள நபர்களை உருவாக்கி கொள்ளுதல், போட்டி மிக்க கல்வியினை விட சுயமான கற்றலுக்கான வளங்களையும் மனப்பாங்குகளையும் கட்டி எழுப்புதல், பாரிய அளவிலான நுகர்வு வாழ்க்கையை விட உண்மையானதும் எளிமையானதும் வாழ்க்கை பாங்கின் அடிப்படையில் வாழ் நாள் நீடித்த கல்வி முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவன் வாழ் நாள் முழுவதும் கற்றலில் ஈடுபடுகின்ற போது அறிவாற்றல், மனவிடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கை சரியாக அமைத்து கொள்வது போன்றவற்றில் சிறந்த தீர்மானங்களையும் சரியான நடைமுறைகளையும் பின்பற்ற முடியும். 

வாழ் நாள் நீடித்த கற்றலில் ஈடுபடுகின்ற ஒருவனிடத்தில் தேடல் என்பது தீவிரமான ஒரு முயற்சியாக இருப்பதோடு அவனுடைய சிந்தனைகள் படிப்படியாக விரிவாக்கம் அடைந்து புத்துருவாக்க முயற்சிகளில் ஈடுபட தொடங்குகின்றான்.

இச் செயற்பாடு சமூகத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடி தருகின்ற செயற்பாடாக அமைகின்றது. தனது தொழில் தகைமைகளை வளர்த்து கொள்வதற்காக புதிய கற்கை நெறிகளை தேடி கற்கின்றமையை இதற்கு உதாரணமாக பறைசாற்றலாம்.

இன்றைய காலகட்டத்திலே பாடசாலை மற்றும் உயர் கல்வியை மாணவர்கள் பெரும் சுமையாக கருதுகின்றனர். அந்த வகையில் இறுக்கமான பாடதிட்டங்கள் மற்றும் பரீட்சைகள் இதனால் வாழ் நாள் நீடித்த கல்வி என்பது தற்காலத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டியதும் கட்டாயப்படுத்த வேண்டிய ஒன்றாகும். 

அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் கடந்த இரு தசாப்தங்களாக வாழ் நாள் நீடித்த கல்வி தொடர்பான கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . வைத்திய துறையில் உள்ளவர்கள் தனது கால மாற்றத்திற்கேற்ப உருவாகும் நோய்களை தீர்ப்பதற்காக புதியவற்றை அறிய தொடங்குகின்றனர் . 

இவ்வாறே தொழில் விருத்திக்காக ஒவ்வொரு துறையினரும் கற்று கொண்டே இருக்கின்றார்கள். கல்வியை அறிந்தவர்கள் மட்டுமல்ல பாமரர்கள் கூட பிறந்ததிலிருந்து இறக்கும் வரை கற்று கொண்டே தான் இருக்கின்றார்கள். 

நாம் எதிர் நோக்குகின்ற ஒவ்வொரு மனிதனும் தான் அனுபவிக்கும் குழப்பங்களில் இருந்து தெளிவுகளையும் தெளிவுகளில் இருந்து தீர்மானங்களையும் கற்று கொள்கின்றார்கள். இதற்கு வாழ் நாள் நீடித்த கல்வி இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.

வாழ் நாள் நீடித்த கல்வியை பல்வேறு தொழில்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தமது தொழில் பகுதிகளையும் திறமைகளையும் பலப்படுத்தி கொள்வதற்கும் தொழில் இல்லாதவர்கள் தமது தொழில் திறன்களை மேம்படுத்தி கொள்ளவும் உதவுகின்றது. இவ்வாறு ஒரு நபர் பாடசாலை பல்கலைக்கழக கல்வியை மட்டும் முடித்து விட்டு ஒரு குறித்த தொழிலில் ஈடுபடுவதனாலேயோ 

படிப்பில் இருந்து இடை விலகியவர்கள் இன்னொரு சந்தர்ப்பம் கிடையாது என்று எண்ணி ஒதுங்கி இருப்பதாலையோ நாட்டின் அபிவிருத்தி மேம்படாது. பாடசாலை பல்கலைக்கழக கல்விக்கு அப்பால் அனுபவத்தையும் திறன்களையும் பெற்று தரக் கூடிய எத்தனையோ வகையான கல்வி செயற்பாடுகள் காணப்படுகிறன. அவ்வாறான கல்வி செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி தனது ஆளுமைகளை வளர்த்து கொள்வதோடு நாட்டின் அபிவிருத்தியையும் மேம்படுத்திக் கொள்ளலாம். அதற்கு சிறந்த உதாரணம் பல்கலைக்கழக கல்வி ஆகும்.

அது மட்டுமன்றி நாட்டின் கல்வி ரீதியான எண்ணறிவு, எழுத்தறிவு, கல்வி அறிவு விருத்தி அடையவும் வாழ் நாள் நீடித்த கல்வி வழி அமைக்கிறது. சமூக மாற்றத்தின் விளைவாக பணத்தோடும் நவநாகரீகத்தோடும் மக்கள் ஒன்றிணைந்து இருப்பதால் வருமானம் சேர்ப்பதிலே அக்கறை செலுத்துகிறார்கள் தவிர கல்வி கற்பதில் இல்லை. அத்தோடு குடும்ப சுமை, வருமான பற்றாக்குறை வேறு நாடுகளின் கீழ் உழைப்பில் ஈடுபட செல்லல் போன்றவற்றாலும் வாழ் நாள் நீடித்த கல்வியானது பூரணப்படுத்தப்படாத ஒன்றாக காணப்படுகின்றது.

எனவே, குழந்தை பருவத்தில் இருந்தே ஒருவருடைய திறமைகளை அறிந்து, அவர்களின் திறன்களை ஊக்குவிப்பதால் தன்னுடைய இலக்கினை அடையும் வரை கற்று கொண்டே இருப்பார்கள். அது மட்டுமல்லாது கல்வி நிறுவனங்களில் நவீன மையப்படுத்தல் வசதிகளையும், கற்பதற்கு தகுந்த சூழலையும் ஏற்ப்படுத்தி மேலதிக கல்வியையும் 

 திறமைகளையும் வளர்த்து கொள்ள கூடிய கல்வி சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் ஒவ்வொரு பிரஜையும் கற்றலை விரும்புவதோடு வாழ் நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட்டு சிறந்த சமூதாயத்தை கட்டி எழுப்ப தூண்களாய விளங்குவார்கள்

ராமநாதன் கலையமுதன்

இரண்டாம் வருட கல்வியியல் சிறப்பு கற்கை மாணவன் 

 கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை

கிழக்கு பல்கலைக்கழகம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.