தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்குமா மெனோபாஸ், மருத்துவர்கள் கூறுவது என்ன?

 

“ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் மிகவும் முக்கியமானவை, பருவமடையும்போது, கர்ப்பமாக இருக்கும்போது, மாதவிடாய் நின்று போகும்போது (மெனோபாஸ்). ஆனால் முதல் இரண்டு கட்டங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மெனோபாஸிற்கு கொடுக்கப்படுவதில்லை,” என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

மெனோபாஸ், மாதவிடாய் நின்றுபோதல் என்பது பெண்கள் உடலில் காலப்போக்கில் நிகழும் ஒன்று. பெரும்பாலான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இது நிகழ்கிறது. அப்போது அவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் நிகழ்வதுடன், அவற்றின் சுழற்சி முறையிலும் வேறுபாடு உண்டாகிறது. இவற்றுடன் எதிலும் நாட்டம் இல்லாதது, மூட்டு வலி, பிறப்புறுப்பில் வறட்சி உள்ளிட்ட பல பிரச்னைகளையும் பெண்கள் அனுபவிக்க நேரிடுகிறது.

ஆனால் இந்த மாதவிடாய் நின்று போதல் எந்த வயதில் நிகழ்கிறது, எந்த மாதிரியான அறிகுறிகளை உடலில் ஏற்படுத்துகிறது, அந்த அறிகுறிகளால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் என்ன, நமது அன்றாட வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பொறுத்து அதன் தீவிரம் மாறுபடுகிறது.

மெனோபாஸ் காலகட்டத்தில் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை இருக்கும் என்பது உண்மையா? அவ்வாறு உண்டாகும் நாட்டமின்மையைச் சரிசெய்ய மருத்துவர்களின் அறிவுரை என்ன?

பெண்களைப் போல் ஆண்களுக்கும் மெனோபாஸ் பிரச்னை உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இங்கு பார்க்கலாம்.

“பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான முக்கிய ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென். அந்த ஹார்மோன் உடலில் குறையும்போது கருமுட்டைகள் உருவாவதும், அவை வெளியேறுவதும் குறைந்து, ஒருகட்டத்தில் நின்றுவிடும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் அதைத்தான் மெனோபாஸ் என்கிறோம்,” என்று விளக்கினார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்களின் உடலில் தலை முதல் கால் வரை, ஈஸ்ட்ரோஜெனின் தாக்கம் இருக்கிறது. அந்த ஹார்மோன் குறையும்போது மனநிலை, உடல்நிலை இரண்டும் பாதிக்கப்படும். மெனோபாஸ் தொடங்குவதற்கு முன்பும், அந்தக் கட்டத்திற்குப் பிறகும் இந்த பாதிப்புகள் இருக்கும்.

மனச் சோர்வு, தூக்கமின்மை, எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு மற்றும் முதுகு வலி, உடலில் திடீரென வெப்பம் அதிகரிப்பது, உடல் பருமன், முடி உதிர்வு எனப் பல பிரச்னைகள் ஏற்படும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான், பெண்ணுறுப்பில் உள்ள திசுக்களைப் புதுப்பிக்கும். அந்த ஹார்மோன் குறையும்போது, பெண்ணுறுப்பு உலர்ந்துவிடும். இதனால் பிறப்புறுப்பில் அசௌகரியம், வலி ஏற்படும். மெனோபாஸ் கட்டத்திற்குப் பிறகு தாம்பத்திய வாழ்வில் பெண்களுக்கு ஆர்வம் குறைய இதுவும் ஒரு காரணம்,” என்கிறார் மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

“ஈஸ்ட்ரோஜென் குறைவால் ஏற்படும் நேரடி விளைவுதான் பாலியல் ஆர்வம் குறைவது. என்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண் வந்திருந்தார். அவருக்கு 49 வயதில் மெனோபாஸ் ஏற்பட்டது. அவர் என்னிடம் சிகிச்சைக்கு வருவதற்கு முன்பாக தீவிர மனச்சோர்வில் இருந்துள்ளார்.

பாலியல் ஆர்வம் குறைந்ததால் அவருக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது அவரது மனச் சோர்வை மேலும் அதிகப்படுத்தியது. தூக்கமின்மை பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணங்கள் அவருக்கு எழுந்துள்ளன.

அவரது நண்பர் ஒருவர் பரிந்துரைத்து என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு ஹார்மோன் மாற்று தெரபியை தொடங்கினோம். ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு ஈடாக மருந்துகள் மூலம் தீவிரமான அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முறைதான் ஹார்மோன் மாற்று தெரபி.

இப்போது சில கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். மெனோபாஸ் என்பதைப் பற்றிய புரிதல் பலருக்கும் இங்கு இல்லை. பாலியல் உறவில் நாட்டமின்மை முதல் மெனோபாஸ் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் கண்டிப்பாகச் சரிசெய்யலாம்.

வாழ்நாளில் மருத்துவரிடம் செல்லாமல் இருப்பதை இங்கு பலரும் ஒரு சாதனை என்று நினைக்கிறார்கள். மெனோபாஸ் சமயத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் உங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டால் மருத்துவரை அணுகுவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம்,” என்று கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

“ஆண்களுக்கும் பெண்களுக்கும் 80 வயது வரைகூட பாலியல் ஆர்வம் இருக்கும். எனவே மெனோபாஸ் என்பதை தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகப் பார்க்கக்கூடாது,” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

“ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களால் பெண்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால் தானே தாம்பத்திய வாழ்வு சிறக்கும்.

அதோடு சேர்த்து பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி, உறவின்போது கடுமையான வலியை உண்டாக்கி, பாலியல் உறவு குறித்த ஒரு பயத்தை ஏற்படுத்திவிடும். மேலும் நம் நாட்டில் இருக்கும் ஒரு பொதுவான எண்ணம், பாலியல் உறவு என்பது தம்பதிகளுக்குள் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் இருக்க வேண்டும், பின் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும், ஆன்மீகத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.

இதெல்லாம் சேர்ந்துதான் 45 வயதிற்கு மேல் தம்பதிகளுக்குள் பாலியல் ஆர்வம் குறைந்துவிட்டால் அதை மிகச் சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள்,” என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார்.

“மெனோபாஸ் சார்ந்த மாற்றங்களுக்கு இப்போது மருந்துகள், சிகிச்சைகள் வந்துவிட்டன. அதில் முக்கியமான சிகிச்சை ஹார்மோன் மாற்று தெரபி, எத்தனையோ பேர் அதை எடுத்துக்கொண்டு இயல்பான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இதை எடுத்துக்கொண்டாலே மெனோபாஸ் தொடர்பான பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சிக்கு நிறைய லூப்ரிகண்ட்ஸ் (Lubricants) கிடைக்கின்றன. ஆணுறை நிறுவனங்கள்கூட இதற்கென பிரத்யேக ஆணுறைகளைத் தயாரிக்கின்றன. எலும்பு தேய்மானத்திற்கு மருந்துகளையும், ஆரோக்கியமான உணவுகளையும் பரிந்துரைக்கிறோம்.

எனவே ஒரு வயதிற்கு மேல் கணவன்- மனைவிக்குள் உடலுறவு என்பதே ஏதோ பெரிய குற்றம் என்ற பொதுப்புத்தியில் இருந்து விலகி, மெனோபாஸ் குறித்த பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டும்.

உடலுறவின் மீது ஆர்வம் இல்லை என்றால் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உடலுறவு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது,” என்கிறார் மருத்துவர் காமராஜ்.

“இந்த ஹார்மோன் பிரச்னைகள் ஆண்களையும் பாதிக்கும். இதை, ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்பார்கள், `ஆண்களுக்கான மெனோபாஸ்' என்றும் இதைச் சொல்லலாம்” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

“பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் போல ஆண்களின் உடலில் டெஸ்ட்டோஸ்டீரான் (Testosterone) என்ற ஹார்மோன் குறையும்போது இது ஏற்படும். ஞாபக மறதி, ஆணுறுப்பு எழுச்சியின்மை, தசைகளின் பலம் குறைவது, தூக்கமின்மை, மனச் சோர்வு, பாலியல் ஆர்வம் குறைவது, விந்து சீக்கிரமாக வெளியேறுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

நாற்பது வயதுக்கு மேல் ஆகும்போது, இதையெல்லாம் பலரும் முதுமையின் அறிகுறிகளாகப் பார்ப்பார்கள். ஆனால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், ஆண்ட்ரோபாஸ் கட்டத்தில் இருக்கும் ஆண்கள் மருத்துவரை அணுகி, உடலில் ஹார்மோன்களை அதிகரிப்பதற்குத் தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் பாலியல் ஆர்வம் கூடுவது மட்டுமல்லாது, அவர்களது அன்றாட வாழ்க்கையும் மேம்படும்.

கணவன்- மனைவி, மெனோபாஸ் மற்றும் ஆண்ட்ரோபாஸ் கட்டத்தில் இருக்கும்போது மனம் விட்டுப் பேச வேண்டும். சரி நமக்கு வயதாகிவிட்டது, இதை ஏற்றுக்கொண்டு உடலுறவைத் தவிர்த்துவிடுவோம் என இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த ஹார்மோன் பிரச்னைகள் உடல்நிலை சார்ந்தும், மனநிலை சார்ந்தும் பல விபரீத சிக்கல்களை ஏற்படுத்திவிடும். 40- 50 என்ற வயது சோர்ந்து, ஓய்வு எடுப்பதற்கான வயது அல்ல.

மெனோபாஸ்/ஆண்ட்ரோபாஸ் என்பதை பாலியல் வாழ்க்கையின் வீழ்ச்சியாகப் பார்க்கக்கூடாது. அறிகுறிகளைப் புரிந்துகொண்டு குறிப்பிட்ட சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு புதிய தாம்பத்திய வாழ்வைத் தொடங்குவதற்கான வாய்ப்பை அது வழங்குகிறது.

நல்ல மருத்துவ ஆலோசனையோடு உங்கள் உடலைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டால், தாம்பத்திய வாழ்க்கைக்கு வயது ஒரு தடையே இல்லை,” என்று கூறுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

BBC News, தமிழ்


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.