இலங்கை கண்ட ஓர் தன்னிகரற்ற சன்மார்க்க ஜோதி

இலங்கை கண்ட ஓர் தன்னிகரற்ற சன்மார்க்க ஜோதி


 அஷ் ஷேஹ் எம். ஐ. எம் முபாரக் (மதனி)

(முழுமையான வரலாறு)

  Arafath Saifullah (Haqqani) Thihariya

மலரும் பூக்கள் எல்லாம் வாசம் வீசுவதில்லை. அதே போன்று தான் வாழும் மனிதர்கள் எல்லாம் வரலாறு படைப்பதும் இல்லை.

சில மனிதர்களின் பிறப்பு வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்பதனை அவர்களது வாழ்க்கை படம் பிடித்துக் காட்டுகின்றது.

இவர்கள் தனக்காக வாழவில்லை சமூகத்திற்காகத்தான் வாழ்ந்தார்கள் என்ற மகுடத்தை அவர்களது வாழ்க்கை வரலாறு பறைசாற்றுகின்றது.

அவ்வரிசையில் மிளிர்ந்தவர்கள்தான் மர்ஹூம் அஹ்மத் முபாரக் (மதனி) அவர்கள்.

வரலாற்றில் ஒளிர்ந்த இத் தாரகையின் வரலாற்றை கண்ணீருடன் வரைகின்றேன்.

 பிறப்பு

இலங்கையின் ரம்புட்டான் பழத்திற்கு மிகவும் பிரசித்து பெற்ற கம்பஹா மாவட்டத்தின் மல்வானை எனும் எழில் மிகு பிரதேசத்தில் 1949 ஆம் ஆண்டு மஹ்தூம் ஆலிம் மற்றும் உம்மு ராஹிமா தம்பதியினருக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.

 குடும்பப் பின்னணி

3 ஆண் சகோதரர்கள் (ஆசிரியர் ஹல்வான், வைத்தியர் மஷூர்) மற்றும் 3 சகோதரிகள் கொண்ட குடும்பத்தின் இறுதியான வருமா ஆவார்.

தனது தந்தை மஹ்தூம் ஆலிம் அவர்களின் நேறிய வழிகாட்டலில் வளர்க்கப்பட்ட மர்ஹும் முபாரக் அவர்கள் தனது தந்தையின் சீரிய பயிற்சிப் பாசறைக்கு கலங்கரை விளக்கு போல் திகழ்ந்தார்கள்.

 சிறு பராயம்

சமூகத்திற்கான ஒர் புலமைச் சொத்து என்பதனை அன்னாரது இளம் பராயமே எடுத்துக்காட்டியது.

தனது பாடசாலைக் கல்வியை மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையில் தொடர்ந்தார். தரம் 7 வரை கற்று பாடசாலை ஆசிரியர்கள் மத்தியில் சிறந்த மாணவனாகவும் இனம் காணப்பட்டார்.

 மத்ரஸாக் கல்வி

தானும் சிறந்த ஓர் துறை சார் ஆலிமாக வேண்டும் என்ற அவா வில் 1963 ஆம் ஆண்டு மகரகம கபூரிய்யா அரபுக்கல்லூரியில் இணைந்துகொண்டார்.

கலாசாலை வாழ்வை மிகவும் சிறப்பாக கழித்தார். மகரகம பிரதேசம் கொழும்பு மாநகரிற்கு மிகவும் அண்டியதாக இருந்தும்கூட அனாவசியமான பயணங்களை மேற்கொள்ளாது கல்வி மேம்பாட்டிற்காகவே அதீத கரிசனை செலுத்தினார்.

கலாசாலை சக மாணவர்களோடு மிகவும் பண்பாகவும் மனித நேயம் கொண்டவராகவும் செயற்பட்டார்.

கலாசாலை உஸ்தாத் மார்கள் மற்றும் குறிப்பாக அதிபர் உஸ்தாத் சம்சுத்தீன் (இந்தியா) அவர்களின் நேசத்திற்குரிய மாணவராகவும் திகழ்ந்தார். என கலாசாலை நண்பரும் லிபிய தூதரகத்தின் முன்னாள் அதிகாரியுமான மௌலவி மஹ்ரூப் (கபூரி) கண்கலங்கக் குறிப்பிட்டார்.

1970 ஆம் ஆண்டு கலாசாலையில் இருந்து ஆலிம் பட்டம் பெற்று வெளியேறினார்.

 மஸ்ஜிதின் கதீப்

கல்லூரியில் இருந்து வெளியாகியவுடன் பண்டாரவளை ஜும்ஆ மஸ்ஜிதில் பிரதம கதீபாக செயற்பட்டார்.

அன்னாரது பன்முக சேவைகளால் பண்டாரவளை மக்களின் நெஞ்சில் நிறைந்த ஆலிமாகவும் இடம் பிடித்துக் கொண்டார்.

எந்தவொரு குத்பா உரையையும் முழுமையாக எழுதாமல் நிகழ்த்த மாட்டார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 திருமண பந்தம்

1974 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பலகத் துறையைச் சேர்ந்த பாத்திமா நவாசியாவை அன்பு துணைவியாக மணந்துகொண்டார். 

 பிள்ளைகள்

தனது 6 பிள்ளைகளையும் சிறந்த ஒழுக்க மாண்பு நிறைந்த புத்திஜீவிகளாக உருவாக்கினார். 2 பேர் வைத்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 பாடசாலை ஆசிரியர்

மௌலவி ஆசிரியர் நியமனம் பெற்று1973 முதல் 1971 மினுவாங்கொட கல்லொலுவ மத்திய கல்லூரியில் பல வருடங்கள் சேவையாற்றி பாடசாலை சமூகம் ஒன்றை உருவாக்கிய சிறந்த ஆசானும் ஆவார்.

 மதீனா பல்கலைக்கழகம்

ஆசிரியர் சேவையில் வீற்றிருக்கும் போது சவுதி அரேபியாவின் மதீனா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெறவே 1978 ஆம் ஆண்டு மதினா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு ஷரீஆ துறையில்  கலைமானி (B.A) பட்டம் பெற்று பட்டதாரியானார்.

சவுதி அரேபியாவின் பிரபல முப்தி அப்துல் அஸீஸ் பின் பாஸ்z (ரஹ்) அவர்களின் நேசத்துக்குரிய மாணவராகவும் திகழ்ந்தார்.

அதுமட்டுமன்றி அரபு பாசையில் அதீத பாண்டித்தியம் பெற்றவராகவும் காணப்பட்டார்.

கபூரிய்யா அரபுக் கல்லூரியில்

மதினா சர்வதேச பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியாகியவுடன் கபூரிய்யா அரபுக் கல்லூரியில் உஸ்தாத் ஆக இணைந்துகொண்டார்.

அங்கு அப்போதிருந்த அதிபர் உஸ்தாத் சம்சுதீன் அவர்கள் இந்தியா சென்ற சமயம் அங்கிருந்து வரமுடியத ஒரு சூழல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 1981 ஆம் ஆண்டில் கல்லூரியின் அதிபர் பொறுப்பை முபாரக் (மதனி) அவர்கள் சுமந்து கொண்டார்கள்.

கல்லூரியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஓர் ஆளுமை என்பதனை அன்னாரது கபூரிய்யா மாணவச் சமூகம் மறக்கவே மாட்டாது.

அங்கு அதிபராக இருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் அதிபராகவும் ஆசிரியராகவும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் ஏன்! சமையல் சேவகராகவுமிருந்து பணியாற்றினார்.

அவருடைய காலப் பிரிவிலேயே மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியின் முழுக் கானிக்கும் மதில் அமைக்கப்பட்டது. இது அந்நிய சக்திகளால் இன்றும் ஒரு அங்குலம் கூட சூறையாட முடியாது என்பதனை உணர்த்துகின்றது. 

சுமார் 32 வருடங்கள் அதிபராக இருந்து கபூரிய்யாவின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த அதிபர் என்றால் அது மிகையாகாது.

ஜாமிஆ நளீமிய்யாவில்

பேருவளை ஜாமியா நளீமியா கலா பீடத்தின் பகுதி நேர விரிவுரையாளராக இரண்டரை வருடங்கள் சேவையாற்றினார். 

அஷ் ஷேஹ் ஐயூப் அலி (நளீமி), அஷ் ஷேஹ் ஹைருல் பஷர் (நளீமி) போன்றோர் அன்னாரது நளீமிய்யாவின் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையில்

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் காரணகர்த்தாக்களில் ஒருவர் என்றாலும் அது பொய்யாக மாட்டாது.

ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டார்.

1991 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவராகவும், 2003 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அதன் செயலாளராகவும் செயற்பட்டு வருகிறார். மட்டுமல்லாமல் 1979 ஆம் ஆண்டு முதல் அதன் ஃபத்வாக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டார்.

மர்ஹூம் அஷ் ஷேஹ் முபாரக் (மதனி) அவர்களின் காலத்திலேயே அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா ஓர் ஜனரஞ்சகமான நிறுவனமாகவும் உருவெடுத்தது மட்டுமன்றி உலமா சபைக்காண முதலாவது காரியாலயமும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தற்போதைய தலைவர் அஷ் ஷேக் முப்தி ரிஸ்வி அவர்களுக்கு வலது கை போன்று உறுதுணையாக இருந்து இரவு பகலாக ஜம்யயாவுக்காக அரும்பாடுபட்டார்.

 வகித்த ஏனைய பதவிகள்

1) முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் ஆலோசகர்.

2) (NIA) இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின்  இஸ்லாம், அறபு  புத்தக அச்சகத்தின் ஆலோசகர்

3) (MICH) ஷோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் உறுப்பினர்

4) 2002 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய ஷரீஆ வங்கிகளுக்கான ஆலோசகர்

5) ஸஊதி அரேபியாவின் தாருல் இப்தாவின் இலங்கைக்கான பிரதிநிதி

6) மல்வானை பின் பாஸ்z பெண்கள் அரபுக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 1980 முதல் 1994 வரை இஸ்லாமிய சட்ட வரை மற்றும் ஹஜ் விளக்கம் போன்ற நிகழ்ச்சிகளால் நேரங்களில் மனதை வென்ற ஆலிமாமாகவும் திகழ்ந்தார்.

சிறந்த எழுத்தாளராகவும் கட்டுரை ஆசிரியராகவும் விளங்கினார். 1992 ல் எழுதிய அஹ்காமுல் ஜனாஸா - ஜனாஸாவின் விதிமுறைகள் என்னும் நூல் அன்னாருடைய சதகா ஜாரியாவுக்கு சான்று பகர்கின்றது.

7 இற்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

தனது வாழ்வை சமூகத்திற்காகவே பிரகாசிக்கச் செய்த இலங்கை கண்ட தன்னிகரற்ற சன்மார்க்க ஜோதி மர்ஹூம் அஷ் ஷேஹ் முபாரக் (மதனி) அவர்கள் 27/10/2020 இறையடி சேர்ந்தார்கள்.

விண்ணிலே ஒளிர்ந்த தாரகை ஒன்று மறைந்தது. உம் பிரிவால் எம் உள்ளங்கள் உறைகின்றதே!

யா அல்லாஹ்!! அன்னாருடைய பாவங்களையும் மன்னித்து உயர்ந்த சுவர்க்கத்தின் சொந்தக்காரராக ஆக்குவாயாக!

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.