பெற்றோர் பிள்ளைகள் நல்லுறவு

சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். குடும்ப வாழ்வில் பலவிதமான சிக்கல்கள் நேர்கின்றன. அவற்றுள் உறவுச் சிக்கல்களும் உண்டு. குறிப்பாக, கணவன்- மனைவி உறவுக்கு அடுத்து சிக்கல்கள் நேரிடும் உறவு பெற்றோர்- பிள்ளைகளுடையது. 

பிள்ளைகள் வளர, வளர உறவின் பரிமாணங்கள் சிக்கல் அடைந்துகொண்டே போகும். சிக்கல்கள் நீங்கி, நல்லுறவு மலர, பெற்றோர் பின்வரும் செயல்பாடுகளை முயற்சிக்கலாம்.

1. தொடுங்கள்.

பெற்றோர் தம் குழந்தைகளை சிறு வயது முதலே, தொட்டு, அணைத்து வளர்த்து வந்தால் பிள்ளைகள் வளர்ந்த பலும் பாசம் குறையாது. 

தாய் தன் குழந்தையை மார்போடு அணைத்து, முத்தமிட்டுக் கொஞ்சி, உறவாடுவதன் மூலம் ஆழமான பாசத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுபோல, தந்தையும் தன் பிள்ளைகளை மடியில் கிடத்தி, தோளில் தூக்கி, கரம் பிடித்து நடத்திச் சென்று பாதுகாப்பு உணர்வை ஊட்டுகிறார். சிறு வயதில் ஏற்படும் இந்த அனுபவம் ஆழ்மனதில் தங்கி, பிள்ளைகளுக்குப் பெற்றோரின் மேல் ஒரு பாசப் பற்றுதலை உண்டாக்குகிறது.

நமது கலாசாரத்தில், பிள்ளைகள் வளர்ந்த பிறகு, அவர்களைத் தொடுகின்ற பழக்கம் மெல்லக் குறைந்துவிடுகிறது. ஆனால், தட்டிக்கொடுத்தல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், சிலுவை வரைதல் போன்றவை மூலம் தொடுவுணர்வைத் தொடர்வது நல்லது.

சில வீடுகளில் பெற்றோர் பிள்ளைகளைத் தொடுகின்ற ஒரே நேரம் அவர்களை அடிக்கும்போதுதான். என்னே பரிதாபம்! இந்தப் பிள்ளைகள் பெற்றோரின் பாசத்தை எப்படி உணர்வார்கள்? பிள்ளைகளை அடிக்காமலே, வேறு விதமான தண்டனைகளை அவர்களுக்கு வழங்கலாம். ஒருநாள் முழவதும் தொலைக்காட்சிப் பெட்டியை மூடிவைப்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தண்டனை. சில தாய்மார்கள் நாள் முழுதும் பிள்ளைகளுடன் பேசாமல் இருந்துவிடுவர். பிள்ளைகளால் அதைத் தாங்கமுடியாது. மன்னிப்பு கேட்டு, சரணாகதி அடைந்துவிடுவர்.

மேலை நாடுகளில் தொடுவுணர்வின் அருமையை நன்றாக உணர்ந்துள்ளனர். எனவே, அடிக்கடி அணைத்து, தட்டிக்கொடுத்து தங்கள் பாசத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். 

பெற்றோர் தம் பிள்ளைகளைத் தொட்டு அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற உளவியல் உண்மையை வலியுறுத்தும்பொருட்டு, சாலையோரங்களில் 'இன்று உங்கள் குழந்தையை அணைத்தீர்களா?' என்று விளம்பரத் தட்டிகள் சில நகரங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. 

இதிலிருந்தே அவர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளலாம். மேனாட்டாரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்லவற்றில் இதுவும் ஒன்று.

2. தவறு செய்ய அனுமதியுங்கள்

இல்லங்கள் பல்கலைக் கழகங்கள். அங்கே கற்றுத் தரப்படும் பாடங்களில் ஒன்று மன்னிப்பு. பிள்ளைகளுக்கு மன்னிப்பின் அனுபவத்தைப் பெற்றோர் தர வேண்டும். மன்னிக்கப்படும் அனுபவத்தைப் பெற்றோரிடம் பெறாவிட்டால், வேறு யாரிடம் பெறுவது?

பள்ளிகளிலோ, விடுதிகளிலோ அந்த அனுபவத்தை அதிகம் எதிர்பார்க்க முடியாது. அங்கெல்லாம் நீதியின் அடிப்படையில், தண்டனைதான் கிடைக்கும். ஆனால், இல்லத்தில்தான் அன்பின் அடிப்படையில் மன்னிப்பும், பரிவும் கிடைக்க வேண்டும்.

சில வீடுகளில் தந்தையரின் தலைமைப் பண்பே அலாதி. ராணுவத்திற்குரிய கட்டுப்பாட்டில் மனைவியையும், பிள்ளைகளையும் வைத்திருப்பர். அதில் பெருமிதமும் கொள்வர். ஆனால், அந்த இல்லம் பரிதாபத்துக்குரியது.

பிள்ளைகள் செய்யும் தவறுகளைப் பெற்றோர் அனுமதித்து, மன்னித்து, அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். 'இந்த வீட்டில் யாரும் தவறே செய்யக் கூடாது' என்று கொள்கை முழக்கமிடுவது யதார்த்தமல்ல.

'தவறு செய்யலாம். தவறு செய்தால் பரவாயில்லை. ஆனால், தவறை ஒத்துக்கொள்ள வேண்டும். மறுமுறை அத்தவறை செய்யாமல் இருக்க முயல வேண்டும்'என்பதே பெற்றோர் பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடிய அறிவுரையாக இருக்க வேண்டும்.

இந்த சுதந்திரச் சூழலில் வளரும் குழந்தைகள் பேறுபெற்றோர். நாளடைவில் தங்கள் தவறுகளைக் குறைத்துக் கொள்வர். அது மட்டுமல்ல, நேர்மையாகச் செயல்படக் கற்றுக்கொள்வர். தங்கள் தவறுகளை மறைக்க பொய் சொல்ல மாட்டார்கள்;;. மறைக்கவும் முயல மாட்டார்கள். மாறாக. தாமே முன் வந்து தம் தவறுகளை ஒத்துக்கொள்வர். 

மறுபடியும் அத்தவறு நேராது என்று வாக்களிப்பர். இதுவே பிள்ளைகள் வளர மிகச் சிறந்த வழி. இத்தகைய இல்லங்களில் பெற்றோர் - பிள்ளைகள் உறவு நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

3. தரமான நேரம் ஒதுக்குங்கள்

பரபரப்பான இந்தக் காலகட்டத்தில், பெற்றோரும் பிள்ளைகளும் இணைந்து நேரம் செலவழிப்பது அரிதாகி வருகிறது. சில வீடுகளில் வேலை முடிந்து தந்தை வீடு திரும்பும்போது, பிள்ளைகள் உறங்கியிருப்பர். 

சில வீடுகளில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பிள்ளைகள் உடனே 'டியூஷன்'என்று புறப்பட்டு விடுகிறார்கள். இரவு உணவுக்குத்தான் இனி அவர்கள் திரும்பி வருவார்கள்.எனவே, பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் மனம் விட்டுப் பேசுவதற்கும், உறவை வளர்ப்பதற்கும் நேரமில்லாமல் போகிறது.

நாள் முழுவதும் பெற்றோரும், பிள்ளைகளும் ஒரே வீட்டில் இருந்தாலும்கூட, அவர்கள் உளப்பூர்வமாக சேர்ந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. எனவேதான், 'தர நேரம்'(ஙரயடவைல வiஅந)ஒதுக்குங்கள் என்கின்றனர் உளவியலாளர்.

பெற்றோர் தம் பிள்ளைகளுடன் தினமும் பத்து நிமிடங்களாவது எந்த இடையூறுமில்லாமல், (தொலைபேசி, தொலைக்காட்சி, விருந்தினர்கள்) உறவாடலுக்குச் செலவிட வேண்டும். 

இந்த நேரத்தில் அவர்களுடைய பாடம், கல்வி போன்றவை பற்றிப் பேசாமல், அவர்களின் பாசம், நண்பர்கள், இலட்சியம், கனவுகள் பற்றிப் பேசுங்கள்.

இந்த நேரம் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் அடிக்கல் நேரம் மட்டுமல்ல, பெற்றோரின் அக்கறையை, பரிவைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லும் நேரமும் கூட. இந்த நேரங்களைப் பிற்காலத்தில் பிள்ளைகள் பெரிதும் எண்ணிப்பார்த்துப் பெருமிதம் கொள்வர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.