உணர்ச்சியும் ஒரு தொற்றுநோய்தான்!

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் தொற்றுநோய்கள் பற்றி நமக்குத் தெரியும். 

அதேபோல் உணர்வுகளும் ஒரு தொற்றுநோய்தான் என்கிறார் பிரபல அமெரிக்க தன்னம்பிக்கை பேச்சாளரான ஜிம் ரோஹன். 

நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் உணர்வுகள் மிகுதியான செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார்.

‘நம்மைச்சுற்றி, எப்போதுமே ஒரு 4 பேர் இருப்பார்கள். பெரும்பாலான நேரத்தை அவர்களுடன்தான் செலவழிப்போம். 

அவர்களின் சிந்தனை, சொல், செயல் இவற்றைத்தான் நாம் பிரதிபலிப்போம். சத்தமில்லாமல் அந்த நான்கு பேரின் எண்ணங்களே நம்மை ஆளத் தொடங்கியிருக்கும். 

மற்றவர்கள் நம்மீது உணர்ச்சிரீதியான ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்பாவிட்டாலும் கூட, உணர்ச்சித்தொற்று ஓர் அமைதிக்கொல்லி நோய்.

இந்நோய் நெருங்கிய உறவுகள், நட்புகள், சக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பரவிவிடும். பழக்க வழக்கங்கள் மற்றும் நடத்தைகளுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களை இவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள். 

சில நேரங்களில் அது உடல்ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும்’ என்கிறார் ஜிம் ரோஹன்.

இதற்கே இப்படி என்றால் இன்னும் போகப்போக, நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் குரூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் உலகின் மூலை, முடுக்குகளிலும் ஏற்பட்ட தொடர்பு கூட நம் வாழ்க்கையில் விபரீதத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை உணராமல் இருக்கிறோம். 

ஊக்கமளிக்கக்கூடிய அல்லது உற்சாகம் தரக்கூடிய நபர்களைச் சுற்றி நாம் இருக்கிறோமா அல்லது அந்த மாதிரி நபர்களோடு இருக்க வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? 

ஒன்று எப்போதும், எல்லாவற்றையும் பற்றி புகார் செய்கிற ஒரு நபர் அல்லது எந்த காரணமுமே இல்லாமல், உங்களைத் தூண்டிவிடக்கூடிய, கட்டாயப்படுத்தக்கூடிய ஒரு நபர் உங்களோடு இருக்கிறார் என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? எப்போதும் சோம்பேறியாக, வெட்டியாக வாட்ஸ் அப் சாட் அரட்டையில் தானும் இருந்து கொண்டு, வினாடிக்குள் உங்களையும் இழுத்துவிடும் ஒரு ஆபத்தான நண்பர் கண்டிப்பாக 

ஒவ்வொருவருக்கும் இருப்பார்.

இதற்கு பேர்தான் உணர்ச்சித் தொற்று. கிட்டத்தட்ட 30 வருட ஆராய்ச்சி, இந்த உணர்ச்சித்தொற்றின் வலிமையை நிரூபித்துள்ளது. குறிப்பாக, உறவு வட்டத்தை உருவாக்கவும், மற்றவர்களுக்கு உதவவும் விரும்பும் ஒருவரை இந்த உணர்ச்சி தொற்று மிக அதிகமாகவே தாக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது’ என்ற உண்மையை இந்த ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 

நம்மிடத்தில் உணர்ச்சித் தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது? எந்த வகையிலெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது? அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்? யோசிப்போம்.

முதலில் உணர்ச்சித் தொற்றின் அறிவியல் என்ன?

உறவு விஞ்ஞானத்தின்(Relationship Science) ஒரு முன்னோடி ஆராய்ச்சியாளரான எலைன்ஹாட்ஃபீல்டின் வரையறைப்படி, மற்றொரு நபரைத் தானாகவே, தன்னுடைய உணர்ச்சிகள், குரல்வழிகள், தோரணைகள் மற்றும் இயக்கங்கள் ஆகியவற்றோடு ஒற்றுமைப்படுத்தி அதன்விளைவாக தொடர்ச்சியாக அவரை ஒத்திசைக்க வைப்பதே உணர்ச்சித் தொற்று.

1992-ம் ஆண்டில் Guacomo Rizzolatti -ஆல் நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆய்வில், ஒருவருடைய தற்போதைய செயலில், அதற்கு முன்பு அதே செயலை வேறொருவர் செய்த காட்சியை அப்படியே படம் பிடித்து மூளையின் செல்கள் சமமாக பிரதிபலித்தது’ கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒருவரின் சோகம், கோபம், மகிழ்ச்சி என எந்த உணர்வாக இருந்தாலும், அதை படம் பிடிக்கும் மூளையின் செல்கள், அதே உணர்வை பிரதிபலிக்கிறது.’

நரம்பியல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்ட அந்த செல்களை Mirror neurons என்று சொல்லும் அறிவியலாளர்கள், அவை எப்போதும் உணர்ச்சிப் பரிமாற்றத்தை அப்படியே படம் பிடிப்பதற்கான அடித்தளத்தை  கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். மேலும் இந்த ஆய்வின்படி, உணர்ச்சித்தொற்று செயல்முறையானது, இந்த மிரர் நரம்பணுக்களை மூன்று நிலைகளில் பாதிக்கிறது.

மிமிக்ரி (Mimicry) : மனிதர்கள், தங்களுடைய மிரர்நியூரான்களில் பதிந்துள்ள சுற்றியுள்ளவர்களின் முகபாவங்கள், குரல் வெளிப்பாடுகள், தோரணைகள் மற்றும் நடத்தைகளை தானாகவே அப்படியே பிரதிபலிக்கின்றனர்.பின்னூட்டம் (Feedback) : பிறருடைய உணர்ச்சிகளின் வெளிப்படையான 

பிரதிபலிப்பை மக்கள் உணர்கிறார்கள்.

பகிர்தல் (Contagion): இதன் விளைவாக மக்கள் ஒருவரிடமிருந்து உணர்ச்சிகளைப் பற்றிக்கொள்ள முற்படுகிறார்கள். மேற்கூறிய சூழ்நிலைகளை நாம் உடைத்து வெளிவர நினைக்கும்போது, இந்த செயல்முறையை எளிதாக்குவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், உணர்ச்சியின் தீவிரம் எவ்வளவு வெளிப்படையானது என்பதையும் தெளிவாக உணர முடிகிறது.

எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவரோடு நாம் உறவில் நெருக்கமாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு அவர்களது நடத்தைகளையும், உணர்ச்சிகளையும் அப்படியே பிரதிபலிக்கத் தொடங்குகிறோம். அதேபோல அவர்களது வலிமையான உணர்ச்சிகள் நம்முள் இறங்கி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, நெருங்கிய நண்பன் அழுதுகொண்டிருந்தால் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத சூழலாக இருந்தாலும், நீங்களும் அவரோடு சேர்ந்து அழ ஆரம்பித்துவிடுவீர்கள். 

நண்பனுடனான நெருங்கிய உறவினால் வரும் இந்த சோகம், மிமிக்ரி மற்றும் உணர்ச்சித் தொற்றுக்கு சரியான உதாரணம். அதாவது, முன்பு எப்போதோ உங்கள் வாழ்வில் நடந்த இதேபோன்ற துயர சம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்து, அந்த சோகத்தினால் அழுவோம் அல்லது  பல சந்தர்ப்பங்களில்,  நம்மை அறியாமலேயே உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வோம்.   

வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில்,  நம்மையும் அறியாமல் எப்படி உணர்ச்சித் தொற்றுக்கு உள்ளாகிறோம் என்பதையும், தேவையற்ற இந்த உணர்ச்சித்தொற்று நமக்குள் பரவுவதை எப்படி கவனமாக தடுப்பதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்.

உறவுப்பிணைப்பில்.

ஒரு காதல் உறவில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் இருவரும் உணர்ச்சிப்பூர்வமான நிலைப்பாட்டில் இருக்கும்போது, ஒருவருக்கொருவர் என்ன கொண்டு செல்கிறீர்கள்? உங்கள் உரையாடலின்போது அதிக வலுவான உணர்வுகள் எவை? அந்த உணர்வுகள் இருவரில் யாரால்  உருவானவை?  என்பதை நேர்மையாக மதிப்பீடு செய்யுங்கள்.

உணர்ச்சித்தொற்று ஏற்படும் சூழலில் எந்த உணர்வு வலுவாக இருக்கிறதோ அதுவே வெற்றி பெறும் என்பதை இருவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

இயல்பாகவே  எதிர்மறையான அல்லது நம்பிக்கையற்றவராக  இருந்தாலும், உங்களுடைய காதலர் அல்லது காதலி என்பதாலேயே, அவரை உங்களுக்குப் பிடித்துவிடும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுடைய காதலன் / காதலியின் உணர்ச்சி நிலை அடிக்கடி உங்களைத் தொற்றிக் கொள்கிறதா? இது நேர்மையாக பதில் சொல்ல வேண்டிய மற்றும் உங்களை நீங்களே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. 

சாத்தியமில்லை என்று தெரிந்தாலும், நம்முடைய துணைக்கு தன்னை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை அடிக்கடி கொடுக்கிறோம். அது தவறான முடிவு.நம்மில் பலர் குறிப்பாக உறவுகளில், நம்முடைய துணையின் குறைகளை சரி செய்வதையே விரும்புகிறோம்.  அதற்கு பதில், உணர்ச்சி ரீதியாக நன்மை பயக்கும் ஒருவரைக் கண்டுபிடிக்கலாமே? 

வாழ்க்கையில், லட்சியம், குறிக்கோள், நேர்மறை எண்ணங்கள், பேரார்வம் அல்லது குறைந்தபட்ச நேர்மை உள்ள ஒருவரை சிறந்த துணையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும்போது, அதெல்லாம் இல்லாத ஒரு நபரை காதலித்து, அவரை மாற்றும் அபாயகரமான முயற்சியில் இறங்க வேண்டிய அவசியம் என்ன?

நட்பு வட்டத்தில்.

நட்பில் ஆழ்ந்த அன்பை பகிர்ந்துகொள்ள வேண்டும் அல்லது அவருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் நபர் என்றால், நீங்களே உங்களை பாதுகாப்பதற்கும், நண்பருடன் நேரத்தை செலவழிப்பதில் கடுமையான முடிவுகளை எடுப்பதற்கும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டு, அதற்கான தீர்வை நண்பர்களிடமிருந்து பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். இந்த விஷயத்தில் நண்பர்களுக்குள் ஒரு தெளிவான புரிதல் இருக்க வேண்டும். 

உங்கள் நெருங்கிய நண்பர் தன்னுடைய துயரங்களை சொல்லும்போது, அதற்கு உடனடியாக உங்களின் உணர்ச்சிகளை  வெளிப்படுத்த  வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக மனிதாபிமானமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. 

உங்கள் உணர்ச்சிகளைக கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களை அந்த உணர்ச்சித் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். 

இதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டும் எனில், சிலர் நம்மையும் குழப்பி, தானும் குழம்பி, நம்மிடம் எல்லா ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு, நாம் கூறியவற்றை காற்றில் பறக்கவிட்டு, தான் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதை மட்டுமே செய்வார். நாம் கூறும் ஆலோசனையால், அவருடைய சூழலில் எந்த ஒரு மாற்றமும் நடக்கப்போவதில்லை. அதே நேரத்தில், அதைப் பற்றி எதுவும் செய்ய விருப்பமில்லாதவர்களாகவும் அல்லது அந்தப்பக்கம் போய் மிகவும் உற்சாகத்தோடும் கூட இருக்கலாம். இவர்களால் நம்முடைய நேரமும், மனநிலையும் பாழாவதுதான் மிச்சம்.

இதுபோன்ற நட்புக்களை எப்படி கையாள்வது?

அவர்களின் சோகம் உங்களைத் தொற்றுவதைத் தடுக்கும் அளவிற்கு உங்களுடைய ஆற்றலையும், நேர்மறைத் தன்மையையும் உயர்த்திக் கொள்ளுங்கள். 

கூடியவரை, உங்கள் நட்பு வட்டத்தில் நேர்மறையான மக்களை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளை மற்றவர்கள் மாசுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். 

உங்களுடைய கடினமான சூழலில், உங்களுடைய பிரச்னைக்கு தீர்வு சொல்லும் சரியான நபரிடம் ஆலோசனை பெறலாம். ஒன்றிரண்டு நண்பர்களின் ஆலோசனைகளை மட்டும் பின்பற்றலாம். 

எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவும், எல்லாருடைய ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது அவர்களின் விருப்பு, வெறுப்புகளை நம் மீது திணிக்கவும், நம் வாழ்வில் கும்மியடிக்கவும் வழி வகுக்கும். விழிப்புடன் இருங்கள்.

சமூக வலைதளம் இதுபோன்று சகமனிதர்களிடையே நேரிடையாக நடக்கும் உணர்ச்சிதொற்றுப் போராட்டம் ஒரு பக்கம் என்றால், தற்போது சமூக வலைதளங்களினால் நம் வாழ்க்கையில் நடக்கும்  சீரழிவுகள் ஏராளம்.  

ஃபேஸ்புக் 2014-ல் ஆய்வு ஒன்றை நடத்தியதில், ‘சமூக வலைதளங்கள் மூலம்  மிகப் பெரிய அளவிலான உணர்ச்சி ஊடுருவல் நடக்கிறது’  என்ற நம்பமுடியாத சர்ச்சைக்குரிய ஆதாரத்தைக்கூறி மக்களை எச்சரித்துள்ளது. பயனாளிகளின் செய்தியூட்டங்களில் (News feed) நேர்மறையான தகவல்களும், பலநேரங்களில் எதிர்மறைத் தகவல்களும் வெளிவருகின்றன.

 எதிர்மறை செய்திகளை படிக்கும் பலரும் தங்களுடைய ஸ்டேட்டஸில் சொந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை கொட்டுகிறார்கள்.  இது அப்படியே பகிர்வு செய்யப்பட்டு பரவி, எதிர்மறை உணர்ச்சிகள் பலரிடத்தில் வைரஸாக ஊடுருவி விடுகின்றன. 

அந்த செய்திக்குப் பின்னணியில் நடப்பதைப்பற்றி புரிந்து கொள்ளாமல் அல்லது பொருட்படுத்தாமல், ஒருவரது உணர்வுகள் எப்படி மறைமுகமாகவும், உரை மூலமாகவும், எழுத்துமூலமாகவும்  பிறரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களை இந்த ஆய்வறிக்கை கொடுத்துள்ளது.

 சமீபத்திய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின்போது, நம்முடைய வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், அதிக அளவு கோபம், வெறுப்பு, கவலை மற்றும் கருத்து மோதல்களை பார்த்திருக்க முடியும். 

எவ்வளவு நேரம் சமூக ஊடகத்தில் செலவிடுகிறீர்கள்? எந்த மாதிரியான நண்பர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்? நீங்கள் இருக்கும் குழுவின் தரம் என்ன? நீங்கள் பார்க்கும் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின் தன்மை என்ன? இவற்றைப் பற்றியெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

 இவற்றிலிருந்து விலகி, உங்களை சந்தோஷப்பட வைக்கக்கூடிய உங்கள் ஆரோக்கியத்தில் பங்களிக்கக்கூடிய அல்லது உங்களின் நேர்மறையான எண்ணங்களுக்கு உதவக்கூடிய குழுக்கள் மற்றும் நட்பு வட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

இறுதியாக, உணர்ச்சித் தொற்று ஏற்படுவது நிதர்சனமான உண்மை. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையை பாதிப்பது உறுதி.

 உணர்ச்சித்தொற்று இருப்பதை எப்படி நம்புகிறீர்களோ? அது உங்களிடம் அதிகமாக இருப்பதையும்  ஒப்புக்கொண்டு அடுத்தபடியாக, அதிலிருந்து விடுபட என்ன செய்வது என்பதைப் பற்றியும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

ஒருவேளை உணர்ச்சியை கட்டுப்படுத்துவதில் நீங்கள் ரொம்பவும் பலவீனமானவர் என்றால் உங்களைச் சுற்றி இருப்பவர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் சமூக வலைதளத்தை உங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். இது சுயநலம் இல்லை. 

உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதும், உங்களது தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் முக்கியம் என்பதால், இவற்றிலிருந்து நீங்கள் நிச்சயம் விலகி இருக்க வேண்டும். 

உங்கள் உறவுகள் மற்றும் நட்புகளை மறுபரிசீலனை செய்ய எப்போதும் வெட்கப்பட வேண்டாம். இது உங்கள் வாழ்க்கை, அதை எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

உங்களைச் சுற்றி நேர்மறை அணுகுமுறை, லட்சியமுள்ள, நேர்மை, ஒழுக்கம், அன்பு, கருணை, பொறுப்பு என எல்லாவற்றிலும் அக்கறையுள்ள நபர்களாக தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுக்கும் உரிமை உங்கள் கையில் இருக்கிறது. 

அதை நடத்திக்காட்டுங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.