நிம்மதியைக் குலைப்பது கவலை.

பயம், கவலை, சோகம், வறுமை, ஏமாற்றம், விரக்தி, சந்தேகம், சோர்வு போன்ற உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து வரும். ஒன்று மற்றதை உற்பத்தி செய்யும். ஒன்று மற்றதை அதிகப்படுத்தும். 

நிம்மதியைக் குலைப்பது கவலை. எனவே முக்கியமாக நாம் கருத வேண்டியது கவலை. இது எப்படி ஏற்படுகிறது? இதை எப்படி அழிக்கலாம்? என்பதே இங்கு கவனிக்கத்தக்கது. என்றாலும்,

 இரண்டாம்பட்சமாக மற்ற மேற்சொல்லிய குணங்களும் கலந்து வரும். 

அவற்றுள் பயம், சந்தேகம் முக்கியமானவை. நிம்மதியை ஏற்படுத்த முக்கியமாகக் கவலையையும், அடுத்தபடியாக பயம், சந்தேகம் ஆகிய இரண்டையும் எப்படி அழிப்பது என்று விளக்கமாகக் கருதுவோம். 

நிம்மதியை நேரடியாக அதிகப்படுத்தும் முறைகளையும், அதற்கு எதிரானவற்றை அழித்து, அதன் மூலம் அதிகப்படுத்தும் முறைகளையும் சில உதாரணங்கள் மூலம் சொல்லலாம். 

பல நிகழ்ச்சிகளுக்குப் பொதுவான முறைகளை பொதுவாகவும், குறிப்பிட்ட உதாரணத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறைகளை அதனுடன் இணைத்தும் விளக்க முயல்கிறேன்.

ஒரு சாதாரண குடும்பத்துப் பெண் திருமணமாகி மாமியார் வீடு சென்றாள். மாமியாருக்கு மருமகளை அளவுகடந்து பிடித்து விட்டது. மற்ற 4 மருமகள்களையும் விட்டுவிட்டு மாமியார் தன் மகளிடம் செலுத்தாத அன்பையும் இந்த மருமகளிடம் காட்டினாள். கணவன், மனைவி மீது உயிரையே வைத்திருந்தார். 

6 மாதம் கழித்து அப்பெண் தன் வீட்டிற்கு எழுதிய கடிதத்தில் இவற்றையெல்லாம் விவரித்துவிட்டு தனக்கு எந்தக் குறையுமில்லை. ஆனால், "நம் வீட்டில் இருந்த ஆழ்ந்த அமைதி மட்டும் ஏனோ இங்கில்லை'' என்று எழுதி இருந்தாள். 

அவள் குடும்பம் ஆழ்ந்த அன்பும், பண்பும் இயல்பாக நிறைந்துள்ள இடம். பல தலைமுறைகளாக முறையாக வாழ்ந்த குடும்பம் என்பதால் அன்பையும், பண்பையும் சிறப்பானதாகக் கருதாமல், இயல்பான ஒன்றாகக் கருதிய இடம். 

அக்குடும்பத்தினர் ஆழ்ந்த நிம்மதியைத் தாங்கள் அனுபவிப்பதை உணராமலேயே என்றென்றும் பெற்றிருந்தனர். 

அன்பு (affection) என்பது தெய்வீக இயல்பு. பாசம், பற்று என்பது மனித குணம். அன்புக்குரியது ஆன்மா எனப்படும் சைத்திய புருஷனேயாகும். சைத்திய புருஷனுக்கு அன்பு எப்படி இயல்பானதோ, அதேபோல் சாந்தமும் இயல்பானது. அன்பு நிறைந்த குடும்பம் அமைதி தவழும் இடமாகும்.

இந்தப் பெண் புகுந்த வீடு எல்லா வகைகளிலும் இவளுக்குப் பொருத்தமானதென்றாலும், உயர்ந்த குடும்பங்களுக்குரிய சிறந்த இலட்சணமான அன்பைப் பரம்பரையாகப் பெற்றதன்று.

 அவளுடைய அகவுணர்வு அதை அவளுக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது. "என் வீட்டில் சண்டை, சச்சரவு என்று நான் பார்த்ததேயில்லை'' என்று ஒருவர் தம் 30வது வயதில் சொன்னால், அவருடைய குடும்பம் அன்பான ஒன்று என்று அர்த்தம். 

நிம்மதியை நிலையாக வாழ்வில் அனைவரும் பெற வேண்டுமானால், குடும்பம் அன்புக்கும், பண்புக்கும் உறைவிடமாக இருக்க வேண்டும். இது வாழ்வின் நியதி. இதை எட்டியவர்கள் உண்டு.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.