உயிரை பறிக்கும் உடல்பருமன்

தற்போதைய தொழில்நுட்ப மயமான வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது மிகவும் அருகிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் இதனால் ஏற்படும் விளைவு குறித்து பலரும் அக்கறை காட்டுவதில்லை என்பதே வருந்தத்தக்கது.

உலகம் முழுவதிலுமே தற்போது தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தி குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர்.

இது உடல் பருமனில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுக்குள் அடங்காத வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் (Obesity)அல்லது உடற் கொழுப்பு எனலாம்.

உடல் கொழுப்பை சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தில் சாதாரண ஒரு இயல்புதான். ஆனால் அதுவே தீவிரமாக நடைபெறும் போது அது உடல் நல்லதுக்கு ஆபத்தானது என்பது மட்டுமன்றி அது மருத்துவ வட்டாரத்தில் ஒரு நோயாக அடையாளப்படுதப்பட்டுள்ளது.

பருமனால் ஏற்படும் இறப்புகள் அதிகரிப்பு

இருப்பினும் இது ஒரு நோயா? என்பதில் மாறுப்பட்ட கருத்துக்கள் நிலவுவதும் உண்மையே. மேற்கு நாடுகளில் உடல் பருமன் ஒரு முக்கிய பொது சுகாதார பிரச்சினையாக கருத்தப்படுகிறது. மேலும் சில சமூகங்களில் உடல் பருமன் எனப்படுவது பண வசதியை சுட்டி நின்றாலும் அநேக சமூகங்களில் உடல் பருமன் அழகற்றதாக கருத்தப்படும் ஒரு நிலை காணப்படுகின்றது.

2016 இல் உலக சுகாதார தாபனம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் 1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் உடல் பருமன் உள்ளோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் உடல் நிறை குறைவினால் ஏற்படும் மரணங்களை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை கூடிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உடல் பருமன் என்பது தடுக்கப்பட வேண்டிய நிலை எனவும் உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் 30 சதவீதமான மக்கள் குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர்.

📌உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம்

சிறுகுழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தொலைக்காட்சி மற்றும் கைபேசியை பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

முந்தைய காலங்களில் குழந்தைகள், இளைஞர்கள் மாலை நேரங்களில் வீதிகளில் விளையாடுவதை காணக்கூடியதாக இருந்தது. இன்று அவ்வாறான நிலை மாறி விளையாட்டும் கூட கைபேசியிலும் கணனியிலும் என்ற அவல நிலை ஏற்பட்டு விட்டது.

10 இல் ஒருவருக்கு குழந்தை பருவத்திலேயே உடற் பருமன் வருவதற்கு அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதே காரணம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் அதிக உடல் எடையானது மனிதர்களில் பல்வேறு மாற்றங்களுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக உயர் குருதி அழுத்தம், இரண்டாம் வகை சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டுவலி , முதுகு வலி, மாரடைப்பு, மார்பக புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடல்லிறக்கம், மலட்டுத்தன்மை போன்றன உடல் பருமன் ஏற்படுத்தும் அபாயகரமான விளைவுகள் என்பது நம்மில் பலரும் அறியாத விடயம்.

மருத்துவர்களின் கருத்து 

எனவே இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் செய்யற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒருவர் உணவு எடுத்துக்கொள்ளும் வீதம் அதிகமாகவும் உடல் உழைப்பு குறைவாகவும் உள்ள மனிதர்களுக்குதான் உடல் பருமன் அதிகமாக ஏற்படுகிறது.

மிகவும் சிலருக்குதான் அது மரபு வழியாகவும் சில மருத்துவ காரணங்களினாலும் சில உளப்பிரச்சினைகளாலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் போதிய தூக்கம் இன்மை, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்புகள், அதிக புகைப்பழக்கம், தாமதமான குழந்தை பேறு போன்ற காரணங்களும் உடல் பருமனுக்கு வழிவங்குகின்றது.

உலகளாவிய அளவில் தடுக்க கூடிய நோயினால் மனிதர்கள் இறப்பதில் உடல் பருமன் முதன்மை வகிப்பது மிகவும் வருந்தத்தக்கது. உடல் பருமன் என்பது உடல் அளவில் மட்டுமன்றி மனதளவிலும் மனிதர்களை பாதிப்படைய செய்கின்றது.

📌ஆரோக்கியமான முறையை தேர்ந்தெடுத்தல்

தெருவுக்கு மூன்று ஜிம்கள் முளைப்பதற்கும் உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது. உடல் பருமனை காட்டுப்படுத்த அனைவரும் ஜிம்மின் உதவியை நாட ஆரம்பித்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் நாம் உடல் பருமன் குறித்து போதிய விழிப்புணர்வு அற்றவர்களாக இருக்கிறமையே ஆகும்.

அழகும் ஆரோக்கியமும் எப்போதும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஆரோக்கியம் இல்லாத அழகு அத்திவாரம் இல்லாத கட்டிடம் போன்றது. நாம் உடல் பருமனை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எப்போதும் ஆரோக்கியமான வலியை மாத்திரமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போதெல்லாம் மனிதர்களுக்கு எதிலும் பொறுமை என்பதே இருப்பதில்லை. உடற் பருமனை குறைக்கவும் உடனடி தீர்வையே நாடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. உடனடியாக கிடைக்கும் தீர்வு நிலையானதாக இருக்காது என்பதை நம்மில் பலரும் மறந்துவிடுகின்றோம்.

உடல் பருமனை குறைக்க நாள் முழுவதும் ஜிம்மில் கிடப்பதும், மருந்தகங்களில் வைத்திய ஆலோசனை இன்றி உடலை மெலிய வைக்கும் மருந்துக்களையும், பானங்களையும் உபயோகித்து உடலை மெலிய வைப்பதும் மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது.

இதன் விளைவுகள் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் என்பது குறித்து பலரும் அக்கறை செலுத்துவதில்லை. உடல் பருமன் உடனடியாக தோன்றுவது அல்ல. கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள வைத்திருக்கும் தேக்கம் ஆகும்.

ஆரோக்கியமான உணவு பழக்கம் அவசியம்

பெண்களுக்கு 20- 25 சதவீதமும் ஆண்களுக்கு 12-15 சதவீதமும் உடலில் கொழுப்பு காணப்படுகிறது. பெண்களுக்கு அவர்களின் மகப்பேறு பணிக்காக மார்பகம், கூபகம், தொடை பகுதிகளில் 12 சதவீதம் கூடுதலாக அத்தியாவசிய கொழுப்பு காணப்படுகின்றது.

ஆண்களுக்கு இது 3 சதவீதம் தான் காணப்படும். உடல் பருமன் தேக்கி வைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பத்தால் மட்டுமே உருவாகின்றது. உடல் மற்றும் உடலுக்கு அடியின் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புதான் கூடுதல் உணவு குறைந்த உடல் உழைப்பு, சில நேரங்களில் பரம்பரை காரணங்கள், ஒமோன் ஏற்றதாழ்வு போன்ற காரணங்களால் உடல் பருமன் நோயை உருவாக்குகின்றது.

மருத்துவ அறிவியலானது உடல் முழுவதும் ஒட்டுமொத்தமாக பருமனாக காணப்படுவதை ஒவாய்டு (Ovoid) அமைப்பு என்றும், பருத்த தொப்பை மாத்திரம் காணப்படுவதை ஆப்பிள் அமைப்பு என்றும், தொடை அடிவயிறு மட்டும் பருமனாக இருப்பதை கைனாய்டு ( Gynoid) அமைப்பு என்றும் வகைப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் ஒவ்வொருவரும் எந்த பிரிவு என்பதை பொறுத்து அவர்களுக்கான சிகிச்சை முறையும், உணவு காட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மாறுப்படும் இதனை நினைவில் கொண்டே உடல் பருமனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

அதுவே ஆரோக்கியமான முறையாகும். மேலும் உடல் பருமனை குறைக்க பலரும் டயட் எனும் பெயரில் பட்டனி கிடைப்பது வழக்கமாகிவிட்டது. இது தவறான முயற்சி உடலுக்கு தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

குறைவான கலோரியில் நிறைவான நார்சத்து கொண்ட உணவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் உடன் உணவு வகைகளை நாடுவதை உடற் பருமன் உடையவர்கள் முற்றாக நிறுத்துவது அவசியம்.

மேலும் அக்கறையுடன் கூடிய தொடர் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தால் உடல் பருமன் எனும் நோயை இலகுவில் விரட்டியடித்து விடலாம் என்பது உறுதி.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.