வாழ் நாள் நீடித்த கல்வி

கல்வி என்பது பிள்ளையின் உள்ளிருக்கும் ஆற்றலினை வெளிக்கொணர்வதாகம் என பொதுவாக கூறப்பட்டாலும் கல்வி என்பதை வரைவிலக்கணம் செய்வதென்பது முடியாத ஒன்றாகும். கல்வி ஒருவனுடைய அறிவினை விருத்தி செய்து சிறந்த வாழ்க்கையினை பெற்றுக் கொள்ள உதவுகின்றது. இதனால் தான் உலகில் உள்ள அனைத்து செல்வங்களையும் விட கல்விச் செல்வம் சிறந்ததாக கருதப்படுகின்றது.

ஒரு மனிதன் தான் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை தன்னால் இயலுமான விடயங்களை கற்பானாயின் அது வாழ் நாள் நீடித்த கல்வி ஆகும். இனம், நிறம், மதம், தொழில் போன்ற எந்தவொரு காரணத்தினாலும் கல்வி நிறுத்தப்படாமல் வாழ்க்கை முழுவதும் நடைபெற வேண்டும். அறிவுக்காக மட்டும் கற்காமல் திறன், மனப்பாங்கு, விழுமியம் என்பனவற்றின் உயர்சிக்காகவும் கற்க வேண்டும். வாழ் நீடித்த கல்வியை கற்பதற்கு காலம், வயது என்பனவற்றை கணக்கிட முடியாது.

 சோக்ரடீஸ் கூறும் போது நான் இளைஞனாக இருக்கும் போது எனக்கு எல்லாம் தெரியும் என நினைத்தேன். முதுமை நிலை அடையும் போதே எனக்கு எதுவும் தெரியாது என அறிந்தேன். பிளேட்டோ வாழ் நாள் நீடித்த கல்வி தொடர்பாக கூறும் போது கல்வி என்பது முடிந்து விடும் செயற்பாடன்று. பாடசாலை கல்வி முடிந்தவுடன் புதையுண்டு போகும் விடயமாக கல்வியை பார்க்காமல் எவ்வளவு கற்க முடியுமோ அத்தனையயும் வயது தடையின்றி கற்க வேண்டும் என்றார்.

பெளத்த தத்துவமான Yuva Nibban ( பரி நிர்வாண நிலையை அடையும் வரையுள்ள காலம் ) இல் வாழ் நாள் முழுவதும் கற்க வேண்டும் என கூறப்படுகிறது. மகாத்மா காந்தியின் Nallthaleem கொள்கையும் வாழ் நாள் முழுவதும் கல்வி பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை கூறுகின்றது. மேலும், 1970 Edger Foret என்ற அறிக்கையிலும் வாழ் நாள் முழுவதும் கல்வி தொடர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாடசாலையை விட்டு வெளியேறியதும் பெரும்பாலோனோர் கல்வியை தொடர விரும்புவதில்லை. சமூக ஊடகங்கள் அல்லது செய்திகளை மட்டுமே பின்பற்றுவதில் சிலர் திருப்தியடைந்து கொள்கிறார்கள். அதனால் புதியவற்றை கற்றுக் கொள்வதில்லை. ஆனால் மிகவும் ஊக்குவிப்பு பெற்ற சிலர் மட்டுமே இறுதி நாட்கள் வரை கற்று வருகின்றனர். உலக நடப்பிற்கேற்ப நடப்புக்களை அறிந்து கொள்ளவும், திறனை வளர்த்து கொள்ளவும் வாழ் நாள் பூராகவும் கற்க வேண்டும்.

பாடசாலையில் மாத்திரம் வாழ் நாள் நீடித்த கல்வியை கற்று விட முடியாது. மாறாக முறை சார்ந்த வழியிலோ, முறை சாரா வழியிலோ கற்றுக் கொள்ள முடியும். கல்வியினை முதலில் தாயிடமும், குடும்பத்தாரிடமும் இருந்து குழந்தை கற்கின்றது. பின்னர் பாடசாலை, பல்கலைக் கழகம், சமூகம் என்பனவற்றில் இருந்தும் கல்வியை தொடர்கின்றது. இவ்வாறு வாழ் நாள் பூராகவும் கல்வி கற்கப்படுகின்றது.

வாழ் நாள் நீடித்த கல்வியை ஒருவர் தொடர்ந்து பெறுவதனால் சிறந்த அறிவினை பெற்றுக் கொள்ள முடியும். அவ் அறிவினை வைத்து தன்னை உலக ஒழுங்கிற்கேற்ப மாற்றி சிறந்த மனிதனாக வாழ கூடியதாகவும் உள்ளது. மேலும், சமூகத்தில் மதிப்பும் தனித்துவமும் மிக்க மனிதனாக மிளிர வாழ் நாள் கல்வி துணைப் புரிகின்றது.

அதாவது இன்றைய சமூகத்தில் அனைவரும் கற்றறிந்தவர்களாக இருக்கின்றமையால் அவர்களின் முன் சிறப்பானவர்களாகவும், தனித்துவமானவர்களாகவும் விளங்க வாழ் நாள் நீடித்த கல்வி அவசியம் ஆகும். இருப்பினும் இக் கல்வியை பெற்றுக் கொள்வதில் பல சவால்கள் காணப்படுகின்றன.

வாழ் நாள் முழுவதும் கற்பதில் உள்ள முக்கிய பிரச்சினையாக காணப்படுவது வறுமை. அதாவது 13 வருட கல்வியை தொடர்வதிலே வறுமை காரணமாக பல சவால்களுக்கு மாணவர்கள் முகம் கொடுக்கின்றனர். இந் நிலையில் வாழ் நாள் முழுவதும் கற்பதென்பது வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு கடினமான ஒன்றாகும். எனவே வறுமையை போக்க வேலைக்கு செல்வதால் அங்கு வாழ் நாள் நீடித்த கல்வி தடைப்படுகின்றது.

இன்றைய கல்வி முறை பரீட்சையை மையமாக கொண்டதாக காணப்படுகின்றது. பரீட்சைக்காக படிக்கின்றனர் பரீட்சையில் சித்தி எய்ததும் கற்ற கல்விக்கான தொழிலினை தேடுகின்றனர். தொழிலின் காரணமாக ஏற்படும் சுமையினால் கல்வியினை தொடர முடியாத நிலை ஏற்படுகின்றது.

கிராமப்புறங்களில் வாழக் கூடியவர்கள் பெரும்பாலும் தொழிநுட்ப வசதி, வளப்பாற்றாக் குறை போன்ற பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். தொழிநுட்ப அறிவு இன்றைய உலகிற்கு அத்தியாவசியமான ஒரு விடயம். ஆனால் தொழிநுட்ப சாதானங்கள் பற்றாக்குறையால் கல்வியினை தொடர்ச்சியாக பெற முடியாது போகும். நகர்புறங்களுக்கு சென்று கல்வியினை தொடர நினைத்தாலும் போக்குவரத்து ஒரு பிரச்சினையாக இருக்கும். இது போன்ற காரணங்களால் வாழ் நாள் நீடித்த கல்வி தடைப்படுகின்றது.

எனவே, வறுமை காரணமாக தொழிலுக்கு செல்கின்றவர்கள் கல்வியை இடையில் நிறுத்தாமல் தொழில் புரியும் இடங்களிலும் ஓய்வு நேரங்களிலும் கல்வியை தொடர நடவடிக்கைகளை மேற்க் கொள்ள வேண்டும். கல்வி என்பது பாடசாலையோடு முடியாத ஒன்று எனவே வாழ் நாள் பூராகவும் கற்க வேண்டும்.

கிராமங்களில் தொழிநுட்ப வசதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்கு கணினிகளை வழங்குதல், மேலும் பொது நூலகங்களை அமைத்தல் அதற்கு தேவையான நூல்கள், சஞ்சிகைகள், நாவல்கள் போன்றவற்றை வழங்குதல் என்பனவற்றின் மூலம் வாழ் நாள் நீடித்த கல்வியினை தொடர முடியும்.

வாழ் நாள் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விளக்கி அதனை கற்க ஊக்கவிக்க வேண்டும். கல்வி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை தொடரப்படக் கூடிய ஒன்றாகும். அவ்வாறு வாழ் நாள் முழுவதும் கற்பதன் மூலமே ஒருவர் சமூகத்தில் தனித்துவமுடையவராக மிளிர முடியும். இதனால் தான் வாழ் நாள் கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

"மன்னனுக்கு தன் தேசத்தில் மட்டுமே சிறப்பு கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு"

அப்துல் ஹலீம் பாத்திமா ஹப்ஸா

2ம் வருட கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி

கல்வி, பிள்ளை நலத் துறை

கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.