நல்ல சிந்தனைகள்! நல்ல வார்த்தைகள்!! சிறந்த வாழ்க்கை!!!

காலையில் தூங்கி எழுந்ததும் பேப்பரை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்த ராஜன் தன் மனைவியிடம், “மரகதம் குடிக்க காபி கொண்டு வா”  என்றார். 

“காபித்தூள் இல்லை” என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது. 

“சரி டீயாவது கொண்டு வா” என்றார். 

“ம்……..ம் டீத்தூளும்   இல்லை” என்றாள் மரகதம். 

“ஏன் மரகதம் காலையிலேயே இல்ல, இல்லைன்னு சொல்லிட்டு இருக்க?” என்று ராஜன் கேட்க, 

“அப்படியா? சரி, காபித்தூள் டப்பா காலியா இருக்கு, டீத்தூள் டப்பா-வும்  காலியா இருக்கு” என்றாள் மரகதம். 

கேட்க சற்று பழைய கதை போன்று இருந்தாலும், இதில் ஒரு கருத்து அடங்கியுள்ளது. 

நேர்மறை, எதிர்மறை என்று இரண்டே வகை வாக்கியங்களை தான் நாம் தினமும் பயன் படுத்துகிறோம். 

ஒரு நாளில் நாம் பேசும் வார்த்தைகளில் எந்த வகை வாக்கியம் அளவு அதிகமாக இருக்கிறது? 

நேர்மறை வார்த்தைகளா அல்லது எதிர்மறை வார்த்தைகளா? 

முதலில் வார்த்தைகள் எங்கிருந்து உருவாகின்றன என்பதை பற்றி பார்க்கலாம். 

சிந்தனைகளின் நிறைவினால் வார்த்தைகள் வெளி வருகிறது. எனவே நம்முடைய பேச்சுக்கள் நேர்மறையாக இருக்க வேண்டும் என்றால், முதலில் சிந்தனைகளில் மாற்றங்கள் வேண்டும். நம்மைப்பற்றி மற்றும் நம்முடைய குழந்தைகளை பற்றிய கவலை, சோகம், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் போன்ற  எதிர்மறை எண்ணங்கள் எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக இருப்பது நம்முடைய சிந்தனைகள் தான். 

சமூகத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை சார்ந்த நடக்கும் சம்பவங்களினால் நமக்கு முதலில் பயம் ஏற்படுகிறது. பின்பு அதன் விளைவாக நம்முடைய மனதில் அவை நம்முடைய குழந்தைகளை பற்றிய எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி விடுகிறது. 

இவற்றை சரி செய்ய நம்மால் இயன்ற விஷயங்களை முயற்சி செய்து பார்க்கலாமே.

முதலில் உங்கள் சிந்தனைகளுக்குள் பல விஷயங்களை அனுமதிக்க கதவாக இருக்கும் கண்களிற்கு கட்டுப்பாடு விதியுங்கள்.

கண்களால் பார்க்கப்படும் பல விஷயங்கள், நம்முடைய சிந்தனைகளுக்குள் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. நேர்மறை எண்ணங்கள் ஏற்பட்டால், கவலைப்பட தேவையில்லை. ஆனால் எதிர்மறை எண்ணங்கள் நம்முடைய வாழ்க்கையிலும், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

நம்முடைய மகிழ்ச்சியும், சோர்வும் வெளியிலிருந்து வரும் விஷயங்களால் மாத்திரம் ஏற்படுகிறது என்றால், நாம் நம்மை மாற்ற வேண்டிய நேரம் இது. ஆம் சூழ்நிலைகளை சார்ந்து நம்முடைய மகிழ்ச்சியும், சோர்வும் இருக்கக் கூடாது. நம்முடைய சூழ்நிலைகளினால் ஏற்படும் தாக்கத்தை, கட்டுப்படுத்துகிற நபராக, நாம் இருக்க வேண்டும்.

நல்ல விஷயங்களை மாத்திரம் கண்களால் பார்த்து, காதால் கேட்க முயற்சிப்போம்.

நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் புத்தகங்கள், இறைவழிபாடு, வரைதல், தியானப் பயிற்சி போன்றவற்றை முயற்சிக்கலாம்.

எதிர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் காரியங்களை பார்ப்பது, கேட்பது போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.

பொருளாதாரம், உடல்நலம் போன்றவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தோல்விகள் நம்மை சோர்வுகுள்ளாக்கி எதிர்மறையாக யோசிக்க வைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவற்றினால் சோர்ந்து போய், அமர்ந்து விடாமல் அவற்றை மேற்கொள்ள உங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றி, அந்த இடத்தில் நேர்மறை எண்ணங்களை நிரப்புங்கள்.

குழந்தைகளையும் திட்டும்போது “நாயே பேயே” என்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டாமல், “நீ ரொம்ப நல்ல பிள்ளை ஆச்சே, எனவே இனி அப்படி செய்யமாட்ட”, போன்ற நேர்மறை வாக்கியங்களின் மூலம் கண்டிக்கலாம். உடனடியாக அவை நல்ல மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றாலும், நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையில் அந்த நேர்மறை வாக்கியங்கள் நல்ல மாற்றங்களை கொண்டுவரும்.

உடல் நலமின்றி இருக்கும் ஒருவரை நாம் சந்திக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக நல்ல நேர்மறை எண்ணங்களை கொண்டு பேசி விட்டு வரும்போது, அவர்கள் உடலிலும் தைரியம் ஏற்பட்டு, விரைவில் குணமடைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் ஊடகங்களில் வரும் தேவையற்ற விஷயத்தை மனதில் போட்டு, சிந்தித்து எதிர்மறையாக பேசினால் அதனால் பயன் ஏதும் ஏற்படாது. மாறாக அவை நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் தான் ஏற்படும். 

எனவே கண்கள், காது மற்றும் சிந்தனைகள் என்ற கதவுகளின் மூலம் நல்லவற்றை மாத்திரம் அனுமதித்து, நல்ல விஷயங்களை மாத்திரம் சிந்தித்து, நல்ல விஷயங்களை மாத்திரம் பேசினால், நாமும் மற்றும் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் அதன் மூலம் பயன் அடைவார்கள். 

இந்தப் பதிவை முடிப்பதற்கு முன், ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். ஒரு நாளில் நாம் பேசும் வார்த்தைகளில், எதன் அளவு அதிகமாக இருக்கிறது? 

நேர்மறை வாக்கியமா அல்லது எதிர்மறை வாக்கியமா? எதன் அளவு அதிகமாக இருக்கிறது என்று வீட்டில் நாம் முயற்சி செய்து பார்க்கலாம். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக அவற்றை மாற்ற வேண்டிய நேரம் இது. 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.