இலங்கை பாடசாலை கலைத்திட்டத்தில் இயற்கை வாதக் கோட்பாடு.

தத்துவங்களானது மேலைத்தேயம் கீழைத்தேயம் என்ற அடிப்படையில் வளர்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் மேலைத்தேய கருத்துக்கள் கீழைத்தேய கருத்துக்களைவிட வளர்ச்சி பெற்று காணப்படுகின்றது. பல தத்துவ கருத்துக்கள் உருவெடுத்த போதிலும் பிரான்சிய நாட்டைச் சேர்ந்த ரூசோவின் இயற்கை வாதம் எனும் தத்துவக் கருத்து இன்றளவும் மக்கள் மனதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பிள்ளை வளர்ப்பு பிள்ளையின் கல்வியில் இயற்கையின் தொடர்பு பற்றிய விடயங்கள் இயற்கை வாதத்தின் அடிப்படை விடயங்கள் ஆகும். அதன் அடிப்படையில் இலங்கையின் கல்வி முறையில் இயற்கைவாதமானது எந்த வகையில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை ஆராய்வோம்.

      தற்காலத்தில் நோக்குகையில் நவீனமயமாக்கம் காரணமாக அனைத்து செயற்பாடுகளும் செயற்கையாக மாறிக்கொண்டு செல்கின்றது. இதன் காரணமாக அனைவரும் இயற்கையை நோக்கிய வண்ணம் நகரும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக அலோபதி மருந்துகளுக்கு பதிலாக இயற்கை மருத்துவம், இயற்கை உணவுகள் என்பன கையாளப்படுகின்றன. இது போன்று இன்றைய கல்வி முறையும் இயற்கையோடு பின்னிப்பிணைந்துள்ளது. அதாவது இயற்கை வாதம் கூறும் மாணவர்களுக்கான வகுப்பறை காற்றோட்டமான இயற்கையை உணரும் வகையிலான கல்வித்திட்டங்களை உள்வாங்கியுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் பாடசாலைகளை நோக்குகையில் கல்வி கற்பதற்கான கட்டிடங்கள் அற்ற இயற்கை எழிலுடன் கூடிய சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பாடசாலை பூந்தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி கற்கை.

     மேலும் விளையாட்டு, இசை போன்ற செயற்பாடுகள் மூலமும் இயற்கையான நடை பயிற்சி மற்றும் மரம் ஏறுதல் போன்ற செயற்பாடுகள் மூலமும் கல்வி செயற்பாடானது மேற்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக சாரணர் இயக்கம், விளையாட்டு கழகம், கலாச்சார நிகழ்வுகள் மூலம் இத்தகைய கல்வியானது போதிக்கப்படுகின்றது. மேலும் ஒரு பிள்ளையின் வாழ்வில் அடைய முடியாத குறிக்கோள்களை திணிக்க கூடாது என்றும் பிள்ளையின் விருத்தியின் மீது பல கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும் இயற்கைவாதம் வலியுறுத்துகின்றது. இதன் அடிப்படையில் தான் தரம் ஐந்து மாணவர்களின் புலமை பரீட்சை பற்றிய ஆய்வுகள் இடம் பெற்றது. இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன் வைக்கப்பட்ட கருத்துப்படி தேசிய கல்வி ஆணைக்குழு தேசிய கல்வி நிறுவனம் மாகாண கல்வி ஆகியன குறைந்தது ஆறு மாதங்களுக்கு கூடி கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது. இதன் பின்பு ஐந்தாம் தர புலமைப் பரீட்சை விருப்பத்திற்குரிய பரீட்சையாக மாற்றப்பட்டது. (2019)

     மேலும் ஆராய்தல், பரிசோதித்தல், அவதானித்தல் முறைகளை இயற்கை வாதம் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் தரம் எட்டு மாணவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ZONAL LEVEL INVESTORS COMPETITION, தரம் 9 மாணவர்களுக்கு 2016-ம் ஆண்டு நடைபெற்ற SECIENCE COPIES NATURE’S SECRTS போன்ற கண்டுபிடிப்புகளை ஊக்கும் வகையில் பாடசாலை மட்டங்களில் நடைபெற்ற போட்டிகள் ஆகும். மேலும் தொழிற்கல்வி முக்கியத்துவம் இயற்கை வாதத்தின் முக்கிய விடயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி முயற்சியாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழிற்கல்வி பாடங்கள் தொழிற்கல்வி பயிற்சியை வழங்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

     மேலும் இயற்கை வாதத்தில் ஆசிரியர் பற்றிய எண்ணக்கருவானது ஒரு ஆசிரியர் வழிகாட்டி அன்றி கற்பிப்பாளர் அல்ல என்ற கருத்தும் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் இன்றைய கல்வியை எடுத்து நோக்குகையில் மாணவர்களுக்கான பாடம் தொடர்பான அறிவை தாமாக தேடலில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுக் கொள்ளும்படி செய்கின்றனர். உதாரணமாக ASSIGNMENT, PRESENTATION, FIELD WORK போன்றவற்றின் மூலம் மாணவர்களது பரந்த தேடல் விருத்தி ஆக்கப்படுவதுடன் பல்வேறு வகையான விடயங்களை தாமாகவே கற்றுக் கொள்கின்ற வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது.

     மேலும் கலை விழாக்கள் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகள், போட்டி நிகழ்வுகள், தோட்டங்கள் அமைத்தல், விவசாய பாடமூலம் விவசாயம் செய்தல் மற்றும் மனையியல் போன்ற பாடங்கள் மூலம் பல்வேறு வகையான விடயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக: சமையல், தையல், கைவினை தொழில் என்பன கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் பாடசாலை கலைத் திட்டத்தில் பல்வேறு வகையான விடயங்கள் இயற்கை வாதத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றபோதிலும் கூட சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அதாவது மனனம் செய்தல், புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் கற்றல் எனும் கல்வியின் குறைபாடுகள் மாற்றப்படவில்லை அதனோடு இணைந்த வகையில் தான் அனைத்து நடவடிக்கைகளும் காணப்படுகின்றது. மேலும் ஆசிரியர்களை பொறுத்தவரை இயற்கை வாதத்தில் ஆசிரியர்கள் போதனையிலும் சாதனையிலும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

 அடக்குமுறையால் மாணவர்களை கட்டுப்படுத்த கூடாது ஆனால் அனைத்து ஆசிரியர்களும் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. பல ஆசிரியர்கள் தங்களது அறிவை விருத்தி செய்யாமல் பழைய விடயங்களை கற்பிக்கும் நிலையே காணப்படுகின்றது. MED, DOCTOR OF PHILOSOPHY IN EDUCATION, SLEAS, SLPS,SLTS போன்ற படிநிலைகள் காணப்பட்டாலும் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவது ஒரு சிலர் மாத்திரமே.

     எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்குகையில் இயற்கைவாத கல்வி கோட்பாடானது இலங்கையின் பாடசாலை கலைத்திட்டத்தில் நடைமுறையில் இருப்பதை அறியலாம். இருந்த போதிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே ரூசோவினுடைய இயற்கை வாத கோட்பாட்டை இலங்கையினுடைய கல்வித் திட்டத்தில் முழுமையாக கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சிறந்த இயற்கை வாத பாடசாலைகளை உருவாக்கி சிறந்த பிரஜைகளை உருவாக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

முஹம்மது நவாஸ் நஸ்மா.

2 ஆம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,

கல்வி, பிள்ளை நலத் துறை,

கிழக்குப் பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.