கல்வியின் தற்போதைய பிரச்சினைகள்

 கல்வி என்பது எந்த ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அளவு கோலாகும் மற்றும் ஒருவரின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை குறித்து நிற்கின்றது. கல்வியின் வெற்றி ஆசிரியர்களின் கைகளில் தங்கி உள்ளது. ஒரு நாட்டின் எதிர்கால சந்ததியினரை கல்வியின் மூலம் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார் படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாகும் 

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இவ்வகையான முறை சார்ந்த கல்வி வழங்குவதில் அரசாங்கம் முன்னிலை வகித்து வந்துள்ளது. 

பொதுவுடமை நாடுகள் தவிர்ந்த ஏனைய வளர்முக நாடுகளில் அரசாங்கத் துறையோடு தனியார் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களையும் காண முடிகின்றது. இலங்கையில் கடந்த ஆறு தசாப்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் விளைவாக கல்வித்துறையில் அரசாங்கத்தின் பங்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆனாலும் தற்கால கல்வி முறைமையிலும் கல்வி நடவடிக்கைகளும் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையின் கல்வி முறமையானது ஆரம்பக் கல்வி, இடைநிலை கல்வி, உயர்கல்வி எனும் மூன்று வகையாக காணப்பட்டாலும் ஒவ்வொரு நிலைகளிலும் உள்ள மாணவர்களும் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். 

அந்த வகையில் இன்றைய கல்விமுறையில் அவதானிக்க கூடிய முக்கியமான பிரச்சினையாக வேலையில்லா பிரச்சினை காணப்படுகின்றது காரணம் படிப்பிற்கேற்ற தொழிலின்மை மற்றும் ஊதியமின்மை, படித்தவர்களை விட படிக்காதவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர் எனவே அதிகமான பட்டதாரிகள் வேலையின்றி இருக்கின்றனர்.

இதற்கு காரணமாக தொழில் உலகுக்கும் கல்வி உலகுக்கும் இடையில் உள்ள இணக்கமின்மையாகும். மக்களை தொழில் உலகுக்கு தயார் படுத்துவதில் நம் நாட்டு கல்வி முறையானது பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. போராட்டங்களும் வன்முறைகளும் இடம் பெற்ற வண்ணமே காணப்படுகின்றது.

 ஆண்டுதோறும் வெளியேறும் 9000 பட்டதாரிகள் உடனடியாக வேலையின்மை பிரச்சினையை பல காலங்களுக்கு எதிர்நோக்குகின்றனர். தாங்கள் உருவாக்கிய பட்டதாரிகளை தாங்களே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அரசின் மீது உண்டு. 

அரச பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு அது தெரியாது இது தெரியாது உதாரணமாக ( ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் ) என்பதால் அவர்கள் வேலைகளில் அமர்த்தப்பட முடியாதவர்கள் என்ற கருத்தை சில அதிகார தரப்பினரே தெரிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும் இவ்வாய்ப்புகள் உயர்கல்வியின் சமூக பயனை குறைத்தும் ஆரம்பக் கல்வியின் பயனை அதிகமாகவும் மதிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த பிரச்சினையாக அண்மை காலங்களில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, போருக்கான ஆயத்தத்திற்கு ஒதுக்கப்பட்ட பெரிய அளவிலான நிதி என்பன கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் பலவீழ்ச்சிக்கான காரணமாக உள்ளன இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.

 தற்காலத்தில் இலங்கையை பொறுத்தவரையில் முறை சார்ந்த கல்வி நடவடிக்கைகள் முறைசார் கல்வியை மேலோங்கி செல்கின்ற நிலையே தோற்றம் பெற்றுள்ளது. இன்றைய கல்விமுறையில் பெரும்பான்மையாக ஏட்டுக் கல்வி முறையே இன்றும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓர் எல்லைக்குள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் தேடி அறியும் தன்மை, கற்பனை வளம், தொழில்நுட்ப ஆற்றல் போன்றன வளர்ச்சி அடையாமல் குன்றியதாகவே காணப்படுகின்றன.

பாடசாலைக்கு மாணவர்கள் ஒழுங்காக வருகை தராமைக்கு முக்கிய காரணமாக அமைவது பெற்றோரின் கல்வி நிலைமை அதாவது கல்வியில் பின்தங்கியிருத்தல் மற்றும் பிள்ளைகளின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்தாமை, பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருத்தல் அதிலும் குறிப்பாக தாய்மார் வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு செல்லுதல் இதனால் பிள்ளைகள் கவனிப்பாரற்று வளர்தல் போன்ற இன்னோரன்ன காரணங்களினால் பிள்ளைகளின் பாடசாலை வருகை ஒழுங்கின்றி காணப்படுகின்றது.

 தற்காலத்தில் கல்வி முறையானது நிகழ்நிலை மூலமே பெரும்பாலும் நடைபெறுகின்றன. இதன் காரணமாக மாணவர்கள் பல்வேறு  பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றார்கள். அந்த வகையில் மாணவர்கள் அதிகமான நேரம் கைபேசி திரையை பார்க்க நேரிடும் இது மட்டுமின்றி இணையவழி விட்டுப் பாடத்தை செய்வதற்கும் கைப்பேசி திரையில் நேரத்தை செலவழிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக மாணவர்கள் பலவிதமான உளப் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றார்கள்.

 அந்த வகையில் தலைவலி, கண் பாதிப்புக்கள், முதுகு வலி உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள் மற்றும் அதிக நேரம் தொலைபேசியில் தங்கி இருப்பதால் ஏனைய சக மாணவர்களுடன் பேசுவது போன்ற சமூக உறவுகள் இல்லாத சூழலும் மாணவர்களின் மனநிலையை அதிகமாக பாதிக்கின்றன.

மேலும் உயர் கல்வியை தொடர்வதிலும் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். அதாவது கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில்  சித்தி அடைந்த அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கோ அல்லது கல்வியற் கல்லூரிகளுக்கோ உள்வாங்கப்படுவதில்லை. 

ஏனெனில் Z புள்ளி அடிப்படையில் மாவட்ட ரீதியில் முதன்மைப் பெரும் மாணவர்களுக்கு மாத்திரமே இந்த வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றது  ஏனையவர்களுடைய உயர்கல்வி என்பது சவால் மிகுந்ததாகவே காணப்படுகின்றது.

அரசாங்க தொழில்கள், பல்கலைக்கழக அனுமதி, க. பொ. த உயர்தர வகுப்புகளுக்கு அனுமதி என்பவற்றுக்கு சில கல்வித் தகுதிகள் தேவை. முக்கியமாக இலங்கையில் தொழில் வாய்ப்புகள் அனைத்தும் கல்வித் தகுதிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்விக் காலம் தம்மை பரீட்சைக்கு ஆயத்தப் படுத்துவதிலேயே கழிகிறது. இதனால் பெற்றோர்கள் எப்போதும் அவர்களை கல்விக்காக தள்ளுகிறார்கள். விளையாட்டுக்களில் ஈடுபட, நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க, பெரும்பாலும் குழந்தை பருவத்தை ரசிக்க அவர்களுக்கு அதிக நேரம் இருப்பதில்லை. இந்த முறையால் பெரும்பாலான மாணவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பிற மனநல பிரச்சினைகள் உருவாகின்றன.

இன்றைய கலைத்திட்டம் ஆனது வெறுமனே அறிவை வழங்குதல் என்ற ரீதியில் மாணவர்களுக்கு ஒரு சுமையாக காணப்படுகிறது. இங்கு மாணவரின் சுய சிந்தனை, சிந்திக்கும் ஆற்றல், சமூகத் திறன்கள், ஏனைய தடைப்பட்ட திறன்களை விருத்தி செய்வதில் வெற்றி காணவில்லை. இதனால் ஆசிரியரும் மாணவரும் எண்ணில் அடங்காப் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.

 மற்றும் ஒரு பிரச்சினையாக தொழிலாளர் சந்தை தேவைகளுக்கு கல்வி முறையின் அக்கறையின்மை ஆகும் அதாவது பரீட்சைகளில் கவனம் செலுத்தும் போது இந்த கல்வி முறையின் தயாரிப்புகள் அறிவால் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஆனால் நடைமுறைச் செயற்பாடுகளில் குறைவாகவே உள்ளன. இது இலங்கைக் கல்வி முறையில் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது.

 ஆங்கில மொழி என்பது இன்று ஒரு சர்வதேச மொழியாக காணப்படுகின்றது. வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு இதன் அவசியம் மிக முக்கியமானதாகும். அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் கல்வி சார் சமூகத்தின் அங்கத்தவர்கள் மற்றும் அரச சேவை அங்கத்தவர்கள் மத்தியில் ஆங்கில சரளத்தின் அளவுகள் மோசமடைந்துள்ளன. இதற்கு காரணமாக உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கும் போது ஆங்கிலம் தக்கவைக்கப்படுவதற்கு பதிலாக கைவிடப்பட்டதே ஆகும்.

 கிராமப்புறங்களில் கல்வி கற்போரை எடுத்துக் கொண்டால் கல்வி கற்போரில் பெரும்பான்மையான குழந்தைகள் கல்வி அல்லாத நேரத்தில் உடல் உழைப்பில் பெற்றோருடன் பங்கு கொள்கின்றனர். இதனால் சிந்திக்கவும், செயற்படவும், உற்சாகமாக விளையாட வேண்டிய குழந்தை பருவம் கடுமையான வறுமையுடன் கூடிய உடல் உழைப்பில் வதைக்கப்படுகின்றனர். இது உயர்கல்வியை நோக்கி செல்லும் போதும் அங்கும் இவ்வாறான நிலையே எதிர்கொள்கின்றார்கள்.

 நமது நாட்டைப் பொறுத்தவரையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற மும்மொழிகளிலும் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால் பெரும்பான்மையான பாடசாலைகளில் மும்மொழி அடிப்படையிலான கல்வி நடவடிக்கைகள் காணப்படுவதில்லை. மூன்று பாடங்களும் பாடத் திட்டத்தினுள் கொண்டுவரப்பட்டாலும் மொழியை ஊடகமாகக் கொண்ட கற்றல் நடவடிக்கைகள் இல்லை.

மாணவர்கள் பாடசாலை கல்வியை தமது தாய்மொழிகளில் கற்று தேர்ச்சி அடைந்த பின்னர்  உயர்கல்வி நிறுவனங்களில் தமது பட்டப்படிப்பை கட்டாயம் ஆங்கில மொழியில் தொடர வேண்டிய நிலையே இன்றைய சூழலில் காணப்படுகின்றது. எனவே இந்த நிலை காரணமாக கற்றலை சுமூகமாகவும் போதிய விளக்கத்துடனும் பெற்றுக் கொள்வதென்பது பாரிய ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது இதற்கு காரணமாக அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழியை ஊடகமாகக் கொண்ட கற்றல் நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படாமையே ஆகும்.

இலங்கையின் கல்வி முறையின் முக்கிய விமர்சனங்களில் ஒன்று பாடத்திட்டம் காலாவதியானதாகும். மற்றும் நவீன உலகிற்கு மாணவர்களை போதுமான அளவில் தயார் படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கணினி நிரலாக்கம் நிதியியல் கல்வி அறிவு மற்றும் தொழில் முனைவு போன்ற பாடங்கள் பாடத்திட்டத்தில் தற்போது சேர்க்கப்படவில்லை.

 மற்றுமொரு விடயம் இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு வளங்களின் பற்றாக்குறை ஆகும். பல பாடசாலைகள் குறிப்பாக கிராமப்புறங்களில் பாடப் புத்தகங்கள், கணினிகள் மற்றும் பிற கல்விப் பொருட்கள் போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லை. இதனால் மாணவர்கள் கற்கவும், ஆசிரியர்கள் திறம்பட கற்பிக்கவும் சிரமப்படுகின்றனர்.

 பாடசாலையில் வள வேறுபாடு அல்லது வளப்பகிர்வு சமநிலை இன்மை நகர்ப்புற பாடசாலைகளுக்கும் கிராமப்புற பாடசாலைகளுக்கும் ஒழுங்கற்ற முறையில் வளங்கள் பகிரப்படுகின்றமை. 

ஒரு முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. உதாரணமாக மேல் மாகாண பாடசாலைகளையும் பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளையும் எடுத்து நோக்கும்போது பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தமது அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றுவதற்கு போதிய வசதிகள் இல்லாத நிலைமையை காணப்படுகின்றது. ஆனால் இதே நேரம் மேல் மாகாண பாடசாலைகளை எடுத்து நோக்குகின்ற போது பாடசாலைகளில் நீச்சல் தடாகம், விஞ்ஞான ஆய்வுக்கூடம் என மாணவர்களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. 

எனவே வளங்களின் சமனற்ற பகிர்வும் வகைப்படுத்தலும் மிக முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது.

 மற்றும் ஒரு சிக்கல் அடிப்படைக் கல்விச்செயல்முறையை முடிக்க எடுக்கும் நேரம் ஆகும். அதாவது பொதுவாக ஒரு மாணவன் ஒரு பாடசாலையில்  பட்டம் பெறும் போது அவனது வயது 19 ஆகும். மேலும் அவர்கள் அரசாங்க பல்கலைக்கழக கல்வியை திட்டமிட்டால் பல்கலைக்கழக நுழைவுச் செயல்முறைக்கு இன்னும் ஒரு வருடமாவது ஆகும். மேலும் அவர்கள் நான்கு வருட பட்டப்படிப்பை பின்பற்றுகிறார்கள் என்று நாம் நினைத்தால் வயது கிட்டத்தட்ட 24 ஆக இருக்கும். எனவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு மெதுவான செயலாகவே காணப்படுகின்றது.

பெற்றோர்கள் தரும் நெருக்கடிகள் இளைஞர்களின் இருப்பை பதற்றமாக்கிவிடுகின்றன. குறிப்பாக கல்வி ரீதியான நெருக்கடிகள்  இளைஞர்களைச் சோர்வடைய செய்து விடும். 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கலை அல்லது கலை சார்ந்த துறைகளைத் தொழிலாக மேற்கொள்ள நினைத்தால் அதை ஏற்க முன்வருவதில்லை. இது அவர்களுடைய விருப்பங்களை முடிக்கி விடுகின்றனர். இவர்களை முடக்குவதோடு அவர்களின் தன்னம்பிக்கையை சீர்குலைத்து விடுகிறது.

இலங்கையை பொறுத்தவரையில் தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. பண வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் தரமான கல்வியை கற்க்கும் வாய்ப்புகள் உள்ள போது ஏழைகள்,நடுத்தர மக்களின் பிள்ளைகள் தரமான கல்வியை கற்றுத் தராத, கட்டணம் குறைவான கல்வி நிலையங்களில் கற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை மிகுந்த சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது.

 இவ்வாறாக பல்வேறு சிக்கல்களை இலங்கையில் தற்போதைய நிலையில் எதிர்கொள்கின்றார்கள். எனவே மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பணிச்சுமையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கல்வி முறையில் இருந்து தொழிலாளர் சந்தை தேவைகளுக்கு சிறந்த பதில் அளிப்பை உருவாக்குவதற்கு வகுப்பறை கற்றலில் இருந்து செயற்பாடு அடிப்படையிலான கற்றலுக்கு கவனம் செலுத்துவது  தொடர்பாக இலங்கைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே தொகுத்து நோக்கும் போது முழு உலகமும் மாறிக்கொண்டிருக்கிறது வசதிகள், அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உட்பட எல்லாவற்றுக்கும் இணையாக செல்ல இலங்கை எப்போதும் முயற்சி எடுக்க வேண்டும். கல்வியில் உள்ள தற்கால பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எமது நாடானது கல்வி முறைகளையும் மற்றும் கொள்கைகளையும் தீர்மானிக்க வேண்டும்.

சண்முகநாதன் சுதர்சினி 

2ம் வருட சிறப்புக் கற்கை மாணவி 

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை

கிழக்குப் பல்கலைக்கழகம்.

கலை கலாச்சார பீடம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.