ஆரம்ப கல்வி ஆசிரியர்களின் கையில், வினைத்திறனான மாணவ சமூக உருவாக்கம்.

ஒரு சமுதாயத்தின் விடியல் என்பது ஆரம்ப கல்வி நிலையில்தான் அடித்தளமிடப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்தவகையில் தரம் 01 தொடக்கம் 05 வரையான காலப்பகுதியில் ஒரு மாணவன் பாடசாலையில் பெற்றுக் கொள்கின்ற கல்வியே ஆரம்பக் கல்வி ஆகும். இந்த நிலையில்தான் குழந்தையின் மனதில் கல்வி பற்றிய முதல் பதிவு ஊட்டப்படுகின்றது. இத்தகைய மிக முக்கியமான விடயத்தினை கையாளும் பொறுப்பு, ஆரம்பக் கல்வி ஆசிரியர்களிலேயே தங்கியிருக்கின்றது.

அதாவது தாய், தந்தை, உறவினர்கள் என அதுவரை காலமும் குடும்பச் சூழலில் பயணித்த ஒரு பிள்ளை, அதிலிருந்து விடுபட்டு முதன்முறையாக பாடசாலை எனும் புதிய சூழலில் எதுவுமே அறியாமல், தன் பயணத்தை தொடங்க ஆரம்பிக்கிறது.

 இந்நிலையில் ஒரு ஆசிரியர்தான் அக்குழந்தைக்கான நம்பிக்கையை வழங்க வேண்டும்.  அதாவது குறித்த பிள்ளையின் மனதை அறிந்து, வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடையிலான உறவை சிறந்த முறையில் கையாண்டு, கற்றலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியர் ஊட்ட வேண்டும். 

இதனை முறையாக செய்ய வேண்டும் என்பதற்காகவே தேசிய கல்வி நிறுவகமானது 2005 ஆம் ஆண்டிலிருந்து முதலாம் தரத்தில் பாடசாலைகளில் பிரவேசிக்கின்ற பிள்ளைகளை அறிந்து கொள்ளும் நோக்குடன்  'பிள்ளைகளை அறிந்து கொள்வோம்’ எனும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அவ்வகையில் இத்தகைய பாரிய கடமை ஆரம்பக் கல்வி ஆசிரியர்களிடமே நிரம்பி காணப்படுகின்றது.

அத்தோடு பாடசாலை கல்வி என்றால் இதுதான் என்பதை ஒரு பிள்ளை படிப்படியாக உணர ஆரம்பிப்பதும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் செயற்பாட்டின் அடிப்படையிலேயே ஆகும். 

எனவே ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியர் முறையானதும், பல்வேறு நுட்ப முறைகளைக் கொண்டதுமான ஆரோக்கியமான கற்றல் செயற்பாடுகளின் அடிப்படையில் கல்வியை வழங்குவதன் மூலமாகவே கல்வி மீதான ஆர்வத்தை, ஒரு பிள்ளை பெற ஆரம்பிக்கும்.

அந்தவகையில் ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியரானவர் பிள்ளையின் உளவியலைக் கருத்தில் கொண்டு அதற்குகந்த கல்விச் செயன்முறைகளை வழங்க வேண்டும்.

 அதாவது விளையாட்டு மூலமாக கற்றல், கதைகள் மூலமாக கற்றல், பாத்திரங்களைப் பாவனை செய்தலும் ஒலி எழுப்புதலும், எண்ணுதல், சித்திரம் வரைதல், ஆக்கச் செயல்பாடுகள், விளையாட்டு முற்றம் போன்ற பல்வேறு புத்தாக்கத் திறனுடைய கற்றல் செயற்பாடுகளை மாணவர்களுக்கு வழங்குவது சிறப்பானதாகும்.

அவ்வகையில் குறிப்பாக இன்றைய நவீன யுகத்தை பொருத்தமட்டில் வெறுமனே ஏட்டில் உள்ளவற்றை அப்படியே பிள்ளைகளின் மூளையில் ஒருபோதும் திணித்தல் கூடாது. மாறாக அவர்களுக்கு செய்முறை ரீதியிலான கற்பித்தல் செயற்பாட்டின் மூலமாக, அனுபவ ரீதியான கல்வியை ஒரு ஆசிரியர் இளம் பிள்ளையின் மனதில் பதியச் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக வீதிச்சமிக்ஞை தொடர்பான பாடத்தை கற்பிப்பதாயின், மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய அனுபவ கற்றலை வழங்க வேண்டும். 

அத்தோடு ஆரம்பக் கல்வி மாணவர்களை குழுக்களாகப் பிரித்து கலந்துரையாடல் மூலமாக கற்பித்தலை வழங்குவதும் மிக முக்கியமானதாகும். அதாவது இதன் மூலமாக சக மாணவர்களை எதிரிகளாக கருதாது, தோழர்களாக பழகுவதற்கான மனப்பாங்கு ஏற்படுவது மட்டுமின்றி, அங்கு கலந்துரையாடலை மேற்கொள்ளும் போது ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ஏராளமான தகவல்கள் கற்றலுக்கு கிடைக்கப்பெறும்.

இதனை வலியுறுத்தும் முகமாகவே 1953இல் மொரீனோ என்பவரால் ஒரு கொள்கை ஏற்படுத்தப்பட்டது. இதனை இவர் ‘சமூக மானம்’ என அழைத்தார். இதில் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனும் கொண்டுள்ள உறவு மற்றும் வகிபாகம் என்பன தெளிவாக விளக்கப்படுகின்றது.

 எனவே இந்நிலை வன்முறைகள் அற்ற, சினேக மனப்பாண்மையை பிஞ்சு உள்ளங்களின் மனதில் ஊட்டுவதாக அமையும். இத்தகைய சிறப்பான பணியை மிகவும் நேர்த்தியாக கையாளும் கடமையும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களிலேயே உள்ளது.

இத்தகைய ஏராளமான நுட்ப முறைகளைக் கொண்ட கற்பித்தலை ஒரு ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும் என்பதையே கால்ரோஜஸ் எனும் அறிஞர் “ ஆசிரியர் சிறப்பான உறவை வளர்த்து கூடுதலான அனுபவத்தின் மூலம் கற்றலை வழங்க வேண்டும். இதனை மாணவர்கள் விரும்பி ஏற்பார்கள். 

இங்கு மாணவர்களுக்கு எல்லா சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். அந்தவகையில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் நெருங்கிய சுமுகமான மானுடத் தொடர்பை விருத்தி செய்ய பல்வேறு நுட்பங்களைக் கொண்ட கற்பித்தல் பயனுடையதாகின்றது” என குறிப்பிடுகின்றார்.

மேலும் பொதுவாக ஆரம்பக் கல்வி ஆசிரியர்களை பிள்ளைகள், தமது முன்மாதிரிகளாக கருதும் வளமை பெரிதும் காணப்படுகின்றது. ஆதலால் ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் நேர்மையான, சிறப்பான நடத்தைகளை உடையவர்களாக இருத்தல் மிக அவசியமாகும். அவ்வகையில் ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியர் நல்லொழுக்கமும், சுகாதார பழக்கவழக்கங்களையும் தன்னகத்தே கொண்டவராக திகழ வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளும் அத்தகு சீரிய பாதைவழி பயணிப்பர்.

மற்றும் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் சமூகம் மாற்றமடைந்து செல்கின்ற தன்மைக்கேற்ப புதிய புதிய புலமைகளை ஆசிரியர் கொண்டிருப்பது மட்டுமின்றி, அவற்றின் அடிப்படையில் பிள்ளைகளையும் வழிகாட்டுதல்களுக்கு உட்படுத்துதல் வேண்டும். இது காலத்திற்கேற்ப பிள்ளை தன்னை இயைவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற மனப்பாங்கிற்கான உறுதியான அத்திபாரமாக அமையும்.

இத்தகு ஆரோக்கியமான புலமைகளை ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியர் கொண்டிராது, எப்போதும் சோம்பேறியாகவும், வகுப்பறைக்குள் மாணவர்களை முடக்கிப் போடுகின்ற வினைத்திறன் அற்ற கற்பித்தல் முறைகளையும், முறைகேடான நடத்தைகளையும், அன்பான முறைகளில் பிள்ளையை வழிப்படுத்தாமல், வன்முறைகளை பிரயோகிப்பவராகவும், பழைய விடயங்களை பிள்ளைகளுக்கு போதிப்பவராகவும் அமையும் பட்சத்தில், இளம் பிள்ளைகளின் மனதில் கல்வி பற்றி எதிர்மறையான சிந்தனைகளும், கற்பதற்கான ஆர்வமின்மையும் உருவாகும். இந்நிலை எதிர்கால மாணவ சமூகத்தின் கல்விக்கான மிகப்பெரிய தடைக்கல்லாக மாறிவிடும்.

எனவே ஆரம்பக் கல்வி மாணவர்களை முறையான வழிகாட்டல்களின் அடிப்படையில் பண்படுத்தி, உருவாக்கி ஏனைய கல்வி நிலைகளுக்கு வழிவிடும் பாரிய கடமையை ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் தமது கைகளில் சுமந்துள்ளமையை மறந்திடல் கூடாது. அதாவது “இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்னும் பொதுமொழிக்கிணங்க இளமையில் வழங்கப்படும் கல்வியும், நடத்தைகளும் ஒரு பிள்ளையின் வாழ்நாள் பூராகவும் தொடரும் என்பதை உணர வேண்டும். 

ஆக ஒரு நாட்டினது வினைத்திறனான மாணவ சமூகத்தினை படைத்து தரும் பாரிய கடமை, சிற்பிகளான ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் கைகளிலேயே பொதிந்துள்ளது என்பதில் எமது நாட்டின் கல்விச் சமூகம் தெளிவுபெறுவதிலேயே உண்மையான விடியல் காத்திருக்கிறது.

மதியழகன் திசாணி,

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு,

கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி,

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,

கலை கலாசார பீடம்,

கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.