சமூகத்தின் மாற்றத்திற்கேற்ப கல்வியின் வளர்ச்சி போக்கு

''மாற்றம் ஒன்றே மாறாதது'' என்பது ஜகத்தின் விதி. அந்தவகையில் சமூக மாற்றம் என்பதானது குடும்பங்களினது சேர்க்கையின் பிரதிபலிப்பாக திகழும் குழுக்களினுடைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சட்டங்கள் என்பவற்றில் ஏற்படும் வளர்ச்சியாகவும், நிறுவனங்களின் தன்மையிலும், அதன் அமைப்புகளிலும் ஏற்படும் வளர்ச்சியாகவும் அமைவதே சமூக மாற்றம் எனப்படுகிறது. சமூக மாற்றமானது நேர்மறை மாற்றம், எதிர்மறை மாற்றம் என்று இரண்டு வழிகளில் இடம்பெறக் கூடியதாகும்.

நெல்சன் மண்டேலா அவர்கள் 'கல்வி என்பது உலகத்தை மாற்றக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம்' என்று குறிப்பிடுகின்றார். எனவே இந்த கல்வியின் ஊடாக அறிவு சார்ந்த சமூகம் ஒன்று உருவாக்கப்பட்டு உயர் நிலையின் உச்ச மாற்றத்திற்கும் கல்வியே இன்றியமையாத ஒன்றாக காணப்படும்.

 அவ்வாறாக ஒரு சமூகத்தினுடைய அபிவிருத்தி, வளர்ச்சி பாதை, முன்னேற்றம், வீழ்ச்சி, பரிணாமம் என்பவற்றை தீர்மானிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒன்றாக கல்வியே அமையப்பெறுகின்றது. 

ஆரம்ப காலத்தை போன்றல்லாது கல்வியின் பரிணாம வளர்ச்சி அதியுயர் நிலையை அடைந்துள்ளமையை நோக்க முடிகிறது. குருகுலக் கல்வி, ஆசிரியர் மையக்கல்வி, மாணவர் மையக்கல்வி, தொழினுட்பத்துடன் ஒன்றியதான மாணவர் மையக்கல்வி என்றவாறு வளர்ச்சி கண்டுள்ளது. 

மேலும் விழுமியக்கல்வி, தொலைக்கல்வி, வாழ்நாள் நீடித்த கல்வி, அனைவருக்கும் கல்வி, வளர்ந்தோர் கல்வி, தேசிய ஒருமைப்பாட்டுக்கான கல்வி என்பனவும் சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை கொண்ட கல்வி முறைமைகளாகக் கருதப்படுகின்றன.

ஆரம்பகால சமூகமானது காட்டுமிராண்டித்தனமாக விசித்திரமான பழக்கவழக்கங்களோடு கிடைப்பதை அந்த நேரத்திற்கு மாத்திரம் பயன்படுத்தி சேமிப்பற்ற சமூகமாகவே இருந்தது. அங்கு மாற்றம் என்பதானது உணவு, உறையுள் என்பவற்றில் மாத்திரமே. 

திசை திருப்புகின்ற மாற்றத்திலே நாகரீக சமூகமானது அதன் இருப்பை அச்சுறுத்துகின்ற சமூக தீமைகளுக்கு திரும்புகிறது. மாற்றங்களுள் முதன்மையான சமூக மாற்றத்தினை எளிதாக்கக்கூடிய பல்வேறான காரணிகள் இருந்தாலும், கல்வியானது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கிய முதன்மை காரணியாகும்.

ஒரு நாட்டினுடைய அபிவிருத்தியானது பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதைப் போன்று சமூகத்தினுடைய அபிவிருத்தியானது கல்வியின் வளர்ச்சி போக்கில் தங்கியிருக்கின்றது என்று கூறினால் மிகையாகாது. இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையிலே அனைத்து மாற்றங்களுக்கும், அபிவிருத்திக்கும் கல்வியே ஆதாரமாக அமைகின்றது. 

அறியாமை எனும் இருளைப் போக்கி ஞானம் எனும் வெளிச்சத்திற்குள் பிரவேசிக்க செய்யும் முக்கிய ஊடகமாக கல்வியே திகழ்கின்றது. ஒரு மனிதனை மனித இயல்புகளோடு சமூகத்தின் ஆணிவேராக திகழச் செய்வதில் கல்வியின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

மாற்றம் என்பதானது பல்வேறுபட்ட வகையில் அமையப்பெறுகின்றது. இதிலே சமூக மாற்றம் என்று குறிப்பிடுகையிலே சமய, கலாசார, விழுமிய, பண்பாட்டு ரீதியிலான சகல துறைகளிலும் ஏற்படக்கூடியதான பொதுவாக காணப்படுகின்றது. 

இவ்வாறாக ஒவ்வொரு துறைகளிலும் ஏற்படுகின்ற மாற்றங்களை சிறப்பானதாகவும், மேம்பாடுடன் கூடிய மாற்றமாகவும் கொண்டு வருவதில் கல்வியே பிரதானமாக காணப்படுகின்றது. சமூகத்தை மாற்றக்கூடிய மாபெரும் சக்தி கல்விக்கு உண்டு. ஏனெனில் ஒவ்வொருவரும் தான் கற்ற கல்வியால் எவ்வளவு பயனடைகின்றனரோ அதுபோல நாட்டினுடைய, சமூகத்தினுடைய உயர்விலும் இவை பங்கு கொள்கின்றன.

ஔவையாரின் கூற்றுப்படி 'கற்றோனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்ற கூற்றின் உண்மையின் வெளிப்பாடு கல்வியினால் சமூகநிலை உயர்வடைவதை வைத்து நோக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அன்று ஔவையார் கூறிச் சென்ற இக்கருத்துக்கள் இன்றுவரையில் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம் கல்வியே ஆகும். 

குருகுலக் கல்வியில் சமூக மாற்றம் ஏற்பட தொடங்கி இன்று தொழினுட்பக் கல்வி வரை வளர்ச்சி கண்டிருப்பது என்பது மிகப்பெரிய வெற்றியே ஆகும். மனித சமூகம் மாற்றத்துக்கு உள்ளாகி முன்னேற்றகரமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

அத்தோடு சமூகத்திலே கல்வியின் ஊடுறுவல் பல்வேறான விதத்தில் அளப்பரிய பங்காற்றி வருகின்றது. ஓர் நல்ல பிரஜையை உருவாக்கி சமூகத்திற்குள் அனுப்புவது என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல. அதேநேரம் விதிவிலக்காக ஓரிரு சமூகப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். கல்வியின் ஊடுறுவல் காரணமாக தற்கால உலகமானது உலகமயமாதல் செயற்பாட்டிற்கு உள்வாங்கப்பட்டு சமய, கலாசார, பண்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 

இதிலே பிற நாடுகளின் தாக்கம் உள்நாடுகளில் ஏற்பட்டு சிறுவர்களுமே போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால் சமூகத்தில் சிறுவர் நலன் என்பது இல்லாது ஒழிக்கப்படும் நிலையும் ஏற்படுகின்றது. இவ்வாறாக சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு கல்வியின் மூலம் சமூக நலனை எடுத்துக்காட்டி அவர்களை வழிநடத்துவதன் மூலமாக சிறந்த பிரஜையை சமூகத்திலே உருவாக்கி எடுக்க முடியும்.

ஆரம்ப காலத்திலே வாழ்ந்த மக்களிடையே கல்வியறிவு என்பது மட்டமாகவே காணப்பட்டது. அதாவது கணவர் இறந்தவுடன் அவரது மனைவியும் உடனுயிர் நீத்த வேண்டிய நிலை இருந்தது. அங்கு பெண்ணானவள் சமூகத்திலே அடிமை நிலைப்படுத்தப்பட்ட நிலை காணப்பட்டது.

 ஆனால் கல்வி அறிவானது சமூகத்திலே ஊடுறுவத் தொடங்கிய பின்னர் அது முழுமையாக தடைப்பட்டது. அதாவது கணவன் இறந்ததும் மனைவி உடனுயிர் நீத்த வேண்டும் என்ற நிலைப்பாடு மருவி சமூகத்தில் பெண்கள் உயர் அந்தஸ்து உடையவர்களாக போற்றப்பட்டனர். இந்நிலை கல்வியால் ஏற்பட்ட சமூக மாற்றமாகவே திகழ்கின்றது. 

மேலும் தற்காலத்தில் அறநெறி பாடசாலைகளை முன்னெடுத்து செல்வதனால் அதனூடாக சமூகத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப எவ்வாறு நாம் செயலாற்ற வேண்டும் என்பதையும் புகட்டுவதாக அமைகின்றது.

அதுமாத்திரமின்றி, சிறுவயதிலேயே பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தும் வழக்கும் சமூகத்தில் காணப்பட்டது. இவ்வாறாக சமூகத்தினை கல்வி எனும் ஆயுதமே மாற்றி அமைக்கின்றது. 

கல்வி எனும் அறிவினை சமூகத்திற்குள் உட்புகுத்தி ''இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்'' என்பதனை உணர்த்துவதன் ஊடாக இளவயதில் வேலைக்கு அமர்த்தப்படுவோரது எண்ணிக்கையை குறைத்து சமூக புத்திஜீவிகளை உருவாக்குவதற்கு சமூகத்தில் கல்வி அடிக்கல்லாக உள்ளது.

 பிள்ளைகளது முன்னேற்றத்திலே சமூகத்தின் பங்கு அளப்பரியதாகும். தங்களுக்குரிய முக்கியத்துவங்களை அறிந்து எதிர்காலத்தில் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக சித்தரிக்கப்படுவதற்கு கல்வி ஊன்றுகோலாக அமைவது நிதர்சனமான உண்மையாகும். 

பிள்ளை தொழிலாளர்களாக இருந்தமையாலோ என்னவோ நாடானது அபிவிருத்தி நிலையை எட்டாது பின்தங்கியே இருந்தது. ஆனால் கல்வி என்ற ஒன்றின் காரணமாக இந்நிலை முற்றாக இல்லாது ஒழிக்கப்பட்டு சமூகம் மாற்றமடைய தொடங்கியது.

எனவே மேற்குறிப்பிடப்பட்டவாறாக கல்வி என்பதானது சமூகத்தின் மாற்றத்திற்கான அதியுயர் சக்தியாகும். மேலும் சமூகத்தின் அநீதிகளை இல்லாதொழித்து அனைவருக்கும் சம வாய்ப்பையும், சம சந்தர்ப்பத்தையும் பெற்றுக் கொடுத்து சிறப்பான பிரஜைகளை உருவாக்கும் கடப்பாடுடன் கூடிய கருவியாகவும் எதிர்கால சந்ததியினர் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் மூல சக்தியாகவும் கல்வி அமைகின்றது. 

ஆகவே தற்போதுள்ள காலத்துக்கு மாத்திரமல்லாது எதிர்கால உலகிற்கும் சமூக மாற்றத்துக்கான உந்துகோலாக கல்வியே அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஜெயக்குமார் காயத்ரீ.

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு

கல்வியியல்  சிறப்புக்கற்கை.

கல்வி பிள்ளை நலத்துறை.

கிழக்கு பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.