சமூகமயமாக்கத்தில் பாடசாலைகளின் பங்களிப்பு

கல்வி சமூகமயமாக்கல்

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற அடிப்படையில் அவனால் ஒரு நாளும் தனித்து வாழ முடியாது. சமூகத்துடன் இரண்டறக் கலந்து பழகும் மனிதன் ஒவ்வொரு நொடியும் சமூக மயமாக்கத்திற்கு உட்பட்டுக் கொண்டே இருக்கின்றான். 

சமூக மயமாக்கம் என்பது பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு செயற்பாடு எனலாம். பாடசாலைகள்  சமூகத்தின் ஒரு மிக முக்கிய அங்கமாகும். இந்த வகையில் பாடசாலைகள் சமூகமயமாக்களில் பாரிய பங்களிப்பு செய்கின்றன.

பாடசாலைகளின் கட்டமைப்பு மற்றும் இயக்கத்தைப் பொறுத்தவரை அவை "தன்னியல்புடன்" தொழிற்படுவது இல்லை.   மாறாக பாடசாலைகள் சமூகத்தின் இயல்பை மீள  மீள உருவாக்கிக் கொண்டிருக்கும் செயற்பாடுகளை நடைமுறையில் மேற்கொள்கின்றன. 

பாடசாலைக்கு வரும் மாணவர் ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் பாடசாலைகள் சமூகத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.  எனவே இம்மாணவர்களிடையே ஏற்படும் இடைவினையானது சமூகமயமாக்களில் மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டதாகும்.

பாடசாலைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் சமூகமயமாக்க செயல் முறையை நாம் வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து பார்க்க முடியும். இதன் ஆரம்ப அடிப்படை பாடசாலைக்கு முதன்முதலாக அடி எடுத்து வைக்கும் ஒரு குழந்தைக்கு சமூகத்தை அறிமுகப்படுத்துவது ஆகும். 

ஒரு குழந்தை பிறந்து முதல் 5 வருடங்கள் குடும்பத்துடன் மாத்திரமே தொடர்புகளைப் பேணுகின்றது. அதனால் அக்குழந்தை குடும்பத்துடன் தொடர்பான அனுபவங்களை மாத்திரமே பெற்றுக் கொள்கிறது. 

குடும்பத்தைத் தாண்டி பாடசாலைக்குள் காலடி எடுத்து வைக்கும் போது அக்குழந்தை முதன்முதலாக ஒரு புதிய சூழலுக்குள் உள்வாங்கப்படுகிறது. தன்னைப் போலவே ஓர் ஆயிரம் உறுப்பினர்களை இனங்கான ஆரம்பிக்கிறது. 

தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஒத்துப் போகக் கூடியவர்கள் மற்றும் ஒத்துப்போகாதவர்கள் என பலதரப்பட்டவர்களையும் இனங்கான ஆரம்பிக்கிறது. 

ஒவ்வொரு தனி எவ்வாறு பேசிப் பழக வேண்டும் என்பதை அக்குழந்தை பாடசாலையில் இருந்தே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றது. இங்கிருந்தே ஒவ்வொரு தனி மனிதனும் சமூகமயமாக்கத்திற்கான அடிப்படையை பெற்றுக் கொள்கின்றது. பாடசாலைகள் இதற்கான சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் போதே எதிர்காலத்தில் சிறந்த சமூகத் தொடர்புகளைப் பேணக்கூடிய நற்பிரஜைகள் உருவாகுவர்.

பாடசாலைகளில் வரன் முறையான கல்வி செயற்பாடுகள், வரன்முறை சாராத கல்வி செயற்பாடுகள் என இருவகையான கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விரு கல்விச் செயற்பாடுகளின் ஊடாகவும் பிள்ளைகளின் ஆளிடை தொடர்புகள் மேம்படுத்தப்படுகின்றன . சமூக மயமாக்களில் ஆளிடைத் தொடர்புகள் மிக மிக முக்கிய அங்கம் ஆகும்.

ஒரு பிள்ளை சிறந்த ஆளிடைத் தொடர்புகளைப் பேணும்போது அவை அவர்களின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆற்றல் மிக்க பயிற்சியாக உள்ளார்ந்த வலுவை கட்டி எழுப்புகின்றது. பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் கல்விச் செயற்பாடுகள் ஊடாக சிறந்த ஆளிடைத் தொடர்புகளை பேணி குழந்தைகள் புதிய விடயங்களை கண்டுபிடிக்க முனைகிறது. 

இக்கண்டு பிடித்தல் நடத்தையானது பாடசாலை ஆசிரியர்களின் ஆற்றுப் படுத்தலுக்கும் நெறிப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்படும் போது சமூகமயமாக்கம் படிப்படியாக வளர தொடங்குகிறது.

அதேபோல் சமூகமயமாக்களின் பிறிதொரு முக்கிய பரிமாணம் மனித உரிமைகளை அறிந்து கொள்ளலும் உரிமைகளுக்கு மதிப்பளித்தலும் கடமைகளை சரியாக செய்தலும் ஆகும். 

பாடசாலைகளில் இடம்பெறும் கல்விச் செயற்பாடுகள், கலை நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், மாணவர் தலைவர்களுக்கான பொறுப்புகளை பகிர்ந்து அளித்தல், ஆசிரியர்களுக்கு கட்டுப்படல் போன்ற  செயல்முறைகளின் ஊடாக  மாணவர்களிடம் உரிமைகளுக்கு மதிப்பளித்து கடமைகளைச் சரியாக செய்யும் மனப்பாங்கு வளர்க்கப்படுகின்றது. 

இதனூடாக இம்மாணவர்கள் வளர்ந்தவர்களாக சமுதாயத்திற்குள் உள்வாங்கப்படும் போது சமூகத்தில் உள்ள இதர மனிதர்களின் உரிமைகள், கடமைகள் பற்றிய சிறந்த மனப் பாங்குடன் செயற்படுவர். அதேபோல் சமூக கட்டுப்பாடுகள், தலைமைத்துவ கட்டுப்பாடு, சமூகத்தை வழி நடத்தல் என்பவற்றிலும் இவர்கள் சிறந்து விளங்குவர். இந்த வகையில் நோக்கும் போது பாடசாலைகளினால் ஆற்றப்படும் சமூகமயமாக்கல் பணி பாரியது எனலாம்.

அதேபோல் பாடசாலையில் நடைபெறும் சமூக மயமாக்கல் செயற்பாட்டின் ஊடாக சமூகம் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள அறிவும் அனுபவங்களும் அடுத்த தலைமுறையினருக்கு கை அளிக்கப்படுகிறது. இதனூடாக சமூக நகர்வு தடையின்றி முன்னேறிச் செல்கிறது. சமூகத்தில் காணப்படும் தனிமனித ஆளுமைகளின் வழிகாட்டல் முழு சமுதாயத்திற்கும் கிடைக்கும் சந்தர்ப்பம் உருவாகிறது. 

முன்னைய தலைமுறையினரிடம் இருந்து தாம் பெற்றுக் கொண்ட அறிவையும் அனுபவத்தையும் கொண்டு சமூகம் உருவாக்கிக் கொள்ளும் புதிய தொழில்நுட்ப விஷயங்களுக்கு ஏற்ப தம்மை இசைவாக்கிக் கொள்கின்றனர். 

அதேபோல் பாடசாலையை பொறுத்தவரை மாணவர்களுக்கு உரிய அடைவு பெறல் ஊக்கத்தை பாடசாலைகள் உருவாக்கி கொடுக்கின்றன. அதாவது தொழில் அடைவு பெறல், சமூகநிலை அடைவு பெறல், பட்டங்கள் பெறல் என்ற வகையில் முன்னேற்றங்களுக்கான வழிவகைகளை பாடசாலைகள் அமைத்து கொடுக்கின்றன. இவ்வாறு ஒரு மாணவனின் சமூகமயமாக்கச் செயற்பாட்டில் பாடசாலைகள் பாரிய பங்களிப்பினை ஆற்றுகின்றன.

எனவே பாடசாலைகளை நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் தம் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பை உணர்வது மிக மிக அவசியம். தாம் கைகளில் வைத்திருப்பது எதிர்கால சமுதாயத்தினை வடிவமைக்கக்கூடிய சிற்பிகளையே என்ற அடிப்படையில் அவர்களுக்கு சமூக மயமாக்கலுக்கான அனைத்து அடிப்படைகளையும் இட்டுக் கொடுப்பது இவர்களின் கடமை ஆகும்.

பாடசாலைகள் இப்பணியை செவ்வனே சரிவர மேற்கொள்ளும் போதே அப் பாடசாலைகளில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு பிள்ளையும் எதிர்கால சமூகத்துடன் சிறந்த முறையில் இடைவினை ஆற்றக் கூடியவர்களாக மாறுவார்கள்.

தனுசிகா ஜெயசீலன்

2ம் வருடம் 1ம் அரையாண்டு கல்வியில் சிறப்பு கற்கை,பிள்ளை நலத்துறை

கிழக்கு பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.