கல்வியும் சமூகமயமாக்கலும்.

கல்வி செயல்முறையானது சமூக செயல்முறையாக விளங்கும் அம்சமாகும் என்பதே  கல்வியும், சமூக மயமாக்கலினதும் அடிப்படை கருத்தாகும். அந்த வகையில் உலகில் எந்த ஒரு மனிதனும் தனிமைப்பட்டு வாழ்வதில்லை ஒவ்வொருவரும் சமூகமயமாகவே இணைந்து வாழ்கின்றனர். அதன் அடிப்படையில் சமூகமயமாக்கல் என்பது தனி ஒரு மனிதன் சமூக சூழலில் உள்ள நிலைமைக்கு ஏற்ப தன்னை இசைவாக்கப்படுத்திக்  கொள்வது ஆகும்.

 அதே வேளை  தனிநபரானாவன்  சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு தான் எவ்வாறான செயல்களை செய்ய வேண்டும் என்பவற்றை அறிந்து கொள்ளும் முறையினையும் நாம் சமூகமயமாக்கல் என வரையறுத்துக் கூற முடியும். எனவே குறித்த ஒரு மனிதன் சமூகத்தோடு இணைந்து வாழ சமூகமயமாக்கப்படல் வேண்டும்.

இதற்கமைய ஒரு மனிதனை சமூகமயமாக்கலுக்கு உட்படுத்தும் காரணிகளாக குடும்பம்,பாடசாலை பல்கலைக்கழகம்,ஒத்தவயது குழுக்கள் என்பன பிரதான இடம் வகிக்கின்றன. அதன் அடிப்படையில் தனி நபர் ஒருவர் முதன் முதலில் அங்கத்துவம் பெரும் சமூக நிறுவனமாக குடும்பம் விளங்குகின்றது. குடும்பமானது சமூகத்தின் முதன்மையான அலகாக அடையாளப்படுத்தப்படுகின்றது. எனவே பாடசாலை பற்றிய அறிவினை பிள்ளை பெற முன்னர் குடும்ப சூழலிலேயே தங்களுக்கான அறிவினை வளர்த்துக் கொள்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு சமூகத்திற்கேற்ற நடத்தைக் கோலங்களை பிள்ளை கற்றுக் கொள்கின்றது. 

இவ் குடும்ப ரீதியான பல்வேறு கற்றல் முறையானது  பிள்ளைக்கு சமூகமயமாக்கலுக்கான  அறிவின் அடித்தளமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குடும்பம் எவ்வாறு ஒவ்வொரு பிள்ளைக்கும் முதல் சமூகமாக காணப்படுகின்றதோ அதேபோன்று பாடசாலையும் தனித்துவமான பங்கினையும் இடத்தினையும் வகிக்கின்றது  என்று கூறினால் மிகையாகாது.இதற்கமைய பாடசாலைகளில் கல்வி ரீதியாகவும் ஏனைய செயற்பாடுகள் ஒவ்வொன்றும் சமூகமயமாக்கல் முறையினை  வெளிக்கொணரும் வகையில் அமையப்பெற்றுள்ளமையை காணலாம். பொதுவாக நோக்குமிடத்து குடும்ப சூழலில் இருந்து பாடசாலைக்கு முதன்முதலாக செல்லும் மாணவர்கள் பலதரப்பட்ட வெவ்வேறு கலாச்சாரங்களையும், பண்புகளையும், இயல்புகளையும் கொண்டவர்களோ டு இணைந்து வாழக்கூடிய சூழலை பாடசாலைதான் ஏற்படுத்திக் கொடுக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது பிள்ளைகள் சமூகமயமாக்கத்திற்கான முக்கிய அடிப்படை காரணியாக அமையப்பெறுகின்றது.

இதற்கமைய விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், குழுக்கற்றல், களப்பயணங்கள் போன்றன பாடசாலையின் ஊடாக மாணவர்களிடையே ஆளிடை தொடர்புகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளாகும். 

இத்தகைய ஒவ்வொரு செயற்த்திட்டங்களும் மாணவர்களிடையே சமூகத்தோடு இணைந்து வாழக்கூடியதான பரஸ்பரத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு வகிப்பதோடு மாணவர்களிடையே ஆளிடைத் தொடர்புகளை வளர்த்து பிள்ளைகள் சமூகத்தில் புதியதோர் சிந்தனையை உருவாக்க வழிவகுக்கின்றன.

சமூக நிறுவனமாக விளங்கும் பாடசாலையின் பிரதான நோக்கமானது கல்வி வழங்குவதாக அமையப்பெற்றிருந்தாலும் அதனையும் தாண்டி மாணவர்களை பாடசாலைக் கல்வியின் மூலமாக சமூகத்திற்குரிய  தனித்துவப் பண்புகளை வளர்த்தெடுப்பதாகவும் அமையப்பெறுகின்றது.

இவற்றோடு பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கலைத்திட்டம் பாடத்திட்டம் சார்ந்த விடயங்கள் ஒவ்வொன்றும் மாணவர்கள் சமூகத்துடன் எவ்வாறு இசைவாக்கப்படுத்திக் கொள்ளலாம் அவற்றோடு சமூகவியல் அம்சங்கள் உள்ளடக்கி இருக்கும்  வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதாவது பாடசாலை கல்வியானது பிள்ளைகளிடத்தில் சமூகம் சார்ந்த அறிவினையும் மனப்பாங்கினையும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்த ஒரு இடத்திலும் தாங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதே பிள்ளை கற்றுக் கொள்ளும்.

இவ்வாறு பாடசாலையில் காணப்படுகின்ற இணைப்பாடவிதான செயல்பாடுகள் ஊடாகவும், கலாச்சார ரீதியாகவும், கலைத்திட்டங்கள் வாயிலாகவும் பிள்ளைகள் சமூகமயமாக்கலுக்கு உட்படுத்தப்படுவதானது கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர் கையிலேயே உள்ளது.

மாணவர்களினது சமூகமயமாக்கலில் ஆசிரியரின் வகிப்பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அதன் அடிப்படையில் நோக்கும் போது ஆசிரியர் மாணவர்களிடத்தில் நடந்து கொள்கின்ற முறையானது மாணவர்களுக்கு முன் உதாரணமாக அமைகின்றன.

அத்தோடு அவர்கள் கற்றுக் கொடுக்கின்ற முறைகள் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். முக்கியமாக ஆசிரியர் தன் கற்றுக் கொடுக்கின்ற பாடங்களில் சமூக ரீதியான பின்னணிகளுக்கும் சமூகம் சார்ந்த விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அவற்றினுடைய தாக்கம் எவ்வாறு வலு பெற்று காணப்படுகின்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் அதே வேளை அவை சார்ந்த தெளிவினை மாணவரிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

குறிப்பாக சமூகம் சார்ந்த கட்டமைப்பானது எவ்வாறு காணப்படும் என்பதை கற்றலின் ஊடாக மாணவர்களுக்கு வழங்கும் போது அவர்களை சிறந்ததொரு சமூகமயமாக்கலுக்கு உட்படுத்த முடியும்.குறிப்பாக ஆசிரியர் ஜனநாயக ரீதியான வழிமுறைகளை மாணவர்களுக்கு கற்பித்தல் ஊடாகவும், மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்துவதன் ஊடாகவும் மாணவர்கள் கல்வி ரீதியாக சமூகமயமாக்கலுக்கு உட்படுத்தப்படுவர்.

“ஜோன் டியுவி”:-  பாடசாலை கல்வி பெரும் நிலையம் மட்டுமின்றி சமூகத்தின் ஒரு சிறு மாதிரி உருவமாகும்  என்கின்றார்.

இவ்வாறு மாணவர்களை சமூகமயமாக்கலுக்கு உட்படுத்த பாடசாலை ரீதியாக செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டாலும் மாணவர்களை சமூகமயமாக்கலுக்கு உட்படுத்துவதில் ஒரு சில குறைபாடுகளும் பாடசாலை ரீதியாக காணப்படுகிறது.

பாடசாலையை பொறுத்தவரை அனைத்து மாணவர்களிடத்திலும் சமூகமயமாக்கல் ஒத்தத் தன்மை வாய்ந்ததாக காணப்படுவதில்லை. அந்த வகையில் கற்றல் செயல்பாடுகளில் முதன்மையாக விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கின்றனர் ஏனைய மாணவர்களை கவனத்தில் கொள்ளும் பொருட்டு மந்தமாக உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது மாணவர்களிடத்தில் விரக்தி தன்மை ஏற்படும். இது சமூகமயமாக்கலுக்கு தடையாக காணப்படுகின்றது.

பாடசாலை ரீதியாக காணப்படும் நெறிபிறழ்வான நடத்தைகள், பேராசைகள், பொறாமை, தனிமைப்படுத்தப்படல்,கேலிக்கு உட்படுத்தப்படல் போன்றனவும் சமூகமயமாக்கல் ஏற்பட தடையாக காணப்படுகின்றன.

இவ்வாறு பாடசாலையின் கல்வி ஊடாக ஏற்படுத்தப்படுகின்ற சமூகமயமாக்கல் செயல்முறையில் குறைபாடுகள் ஏற்படின் பின்னர் அவை சமூகப் பிரச்சனைகளை தோற்றுவிக்க உந்துதலாக அமையும்.

உதாரணமாக சமூக விரோதமான செயற்பாடுகள், தற்கொலை முயற்சிகள், போதை வஸ்த்துக்கு அடிமையாதல் போன்றன இன்று மாணவர்கள் மத்தியிலேயே அதிகமாக காணப்படுகின்றது.

இத்தகைய சமூகம் சார்ந்த நெறிப்பிறழ்வான நடத்தைகள் இல்லாமல் போக வேண்டுமாயின்  பாடசாலையின் கல்வியின் ஊடாக எவ்வித பாரபட்சமும் இன்றி மாணவர்களிடையே சமூகமயமாக்கல் சிந்தனையானது சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாணிக்கம் கெளசல்யா

2ம் வருட சிறப்புக் கற்கை

கல்வி மற்றும் பிள்ளைநலத்துறை

கிழக்குப் பல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.