சமூக நகர்வு (Social Mobility) ஏற்படுவதனால் உண்டாகும் விளைவுகள்.

அறிமுகம்

பொதுவாக மனிதர்கள் அவர்கள் சமூகத்தில் கொண்டிருக்கும் அந்தஸ்தினாலும் மற்றும் வசிக்கும் பாத்திரங்களாலுமே அளவிடப்படுகினாறார்கள்.

மனிதன் சமூகத்தில் தான் கொண்டிருக்கும் அந்தஸ்து உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு கைங்கரியங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுகின்றான். தாழ்நிலையிலிருந்து உயர் நிலையை நோக்கிச் செல்வதற்கான உத்திகளையும் உபாயங்களையும் அவன் வகுத்துக் கொள்கின்றான்.  அதே  நேரம் பல்வேறு காரணிகள் மனிதனை உயர் நிலையிலிருந்து தாழ் நிலையை நோக்கி 

தள்ளி விடுவதும் உண்டு. சமூகத்தில் வாழும் இத்தகைய மனிதர்களின் உயர்வு நோக்கிய மற்றும் தாழ்வு நோக்கிய அசைவையே சமூக நகர்வு எனும் பதம் குறிக்கின்றது. சமூக அடுக்கமைப்பின்  பிரிக்க முடியாத ஒரு கூறாக சமூக நகர்வு கொள்ளப்படுகின்றது.

 சமூக இயங்கு நிலையின் வெளிப்பாடே சமூக  நகர்வாகும். சமூகம் ஒரே நிலையில் தேக்கமடைந்து உறைந் து போய் இருப்பதில்லை, மாறாக அது காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமூக நகர்வு நேர் மற்றும் எதிர்மறை விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துவதனை சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

நேர்விளைவுகள்

திறமைவாய்ந்த தனியன்கள் சமூக ஏறு நிலையை  அடைந்து கொள்வதற்கு சமூக நகர்வு வழியமைக்கின்றது என பாலு மற்றும் டுங்கன்  குறிப்பிடுகின்றார்கள். சமூகத்தின் வேறுபட்ட தேவைகளை அடைந்து கொள்வதற்கு ஆற்றலுள்ள மனிதர்களை சமூக நகர்வு தூண்டுவதனால் தனிமனித திறன்கள் வெளிப்படுத்தப்படுவதற்கு காரணமாக அமைகின்றது. 

அடைக்கப்பட்ட பாத்திரத்திலிருந்து நீராவியை வெளியேற்றி பாத்திரத்தை எப்படி அதன் வால்வு பாதுகாக்கின்றதோ அப்படி அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் அரணாக சமூக நகர்வு தொழிற்படுவதாக லிப்சட் மற்றும் பென்டிக்ஸ் குறிப்பிடுகின்றார்கள். கீழ் வர்க்க மக்களுக்கு கிடைக்கும் பல்வேறு சநீதர்ப்பங்கள் அவர்களை சமூக முன்னேற்றத்தின்பால் நகர்ந்து செல்ல தூண்டுகின்றன. 

இந்நிலை அவர்களுக்கு சமூக அந்தஸ்துக்கள் கிடைக்க காரணமாக அமைவதனால் தேவையற்ற முரண்பாடுகள் தோன்றுவதிலிருந்து சமூகம் பாதுகாப்பு பெறுகின்றது. இதனால் சமூக நகர்வு ஒரு பாதுகாப்புக் கருவியாக தொழிற்படுவதாக கூறப்படுகின்றது.சமூக நீதி சமுதாயத்தில் பேணப்படுவது ஒரு ஜனநாயக உரிமையாகும். 

இந்த ஜனநாயகம் சமூகத்தில் தோன்றுவதற்கும் ஒரு சமத்துவ சமுதாயம் மிளிர்வதற்கும் சமூக நகர்வு பாதை போடுகின்றது.

சாதியின் ஆதிக்கம் ஓங்கிக் காணப்படும் பாரம்பரிய சமூகங்களில் தொழில் தெரிவு மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது. 

விரும்பியோ விரும்பாமலோ தந்தையின் தொழிலையே பிள்ளைகளும் செய்ய வேண்டிய சூழ்நிலை அங்கு காணப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன கைத்தொழில் சமூகங்களில் தொழில் தெரிவுக்கான வாயில் திறந்து விடப்பட்டிருப்பதனால் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தொழிலையே செய்ய வேண்டும் எனும் நிலை மாறிப் போயுள்ளது. இந்நிலை தொழில் திருப்தியை அதனைச் செய்வோருக்கு கொடுத்துள்ளது.

ஒரு மனிதன் பெறும் தொழில், தொழில் மூலம் கிடைக்கும் வருமானம், அவன் இதுவரை வாழ்ந்த வாழ்வு முறையில் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றது. கீழ் வர்க்க மனிதன் ஒருவன் மத்திய வகுப்பை அடையும் போது அவனது வாழ்வு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த அவன் முனைகின்றான் விலை உயர்ந்த ஆடைகளை, கைக்கடிகாரத்தை, பாதணிகளை, வாசனைத் திரவியங்களை வாங்க முனைகின்றான். தனது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுக்க விளைகின்றான். 

தனக்கான ஒரு வீட்டைக் கட்டிக் கொள்வதற்கான முயற்சியில் இறங்குகின்றான் இப்படி பல மாற்றங்களை தனிமனித வாழ்வில் சமூக நகர்வு ஏற்படுத்துவதனைக் காணலாம். 

சமூக நகர்வின் முக்கிய சிறப்புக்களில் ஒன்று அது தனிநபர்களின் இயலுமையை, செயற்படும் ஆற்றலை, தயார் நிலையை உயிர்ப்புடன் வைக்க உதவுகின்றது. இந்த இயங்கு நிலை போட்டித் தன்மையை மனிதனுக்குள் உண்டாக்கி அடைவுகளை கிடைக்கச் செய்து வாழ்வை செழுமைப் படுத்துகின்றது.

எல்லா சமூகங்களிலுமுள்ள சராசரி தனியன்கள் சில மாற்றங்களை தமது வாழ்வில் எதிர்பார்க்கிறார்கள் அல்லது தமது வாழ்வு செம்மைப்பட வேண்டும் என விரும்புகின்றார்கள். உயர் அந்தஸ்தை அடைந்த மனிதர்கள் கூட மேலும் உச்ச நிலையை தொட வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். இருக்கும் சமூக முறைமை முன்னேற்றத்துக்கான பாதையில் எத்தகைய தடைக்கல்லையும் வைக்கவில்லை என உணரும் தனியன்கள் வாழ்வில் உயர்ந்திட தொடர் எத்தனம் செய்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் சமூக முறைமையில் பூரண நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்களின் கடின உழைப்பும் தொடர்தேர்ச்சியான போராட்டமும் இன்றோ அல்லது அண்மைய எதிர்காலத்திலோ பிரதிபலன்களை தரும் என நம்புகின்றார்கள்.

எதிர்மறை விளைவுகள்

சமூக நகர்வுக்கு உட்படுத்தப்படும் ஒருவர் பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. உயர் பதவிகளை நோக்கிச் செல்லும் ஒருவர் பல அபாயங்களையும் பாதுகாப்பற்ற தன்மைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படுகின்றது. 

அரசியலில் உயர் பதவியை பெற்றுக் கொள்ளும் ஒருவருக்கு தனது நடமாட்டங்கள் அனைத்தையும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே செய்ய வேண்டி ஏற்படுகின்றது. 

எதிரிகள் தன்னை தாக்கி விடக் கூடும் எனும் அச்சம் அவருக்குள் எப்போதும் மையம் கொள்கின்றது. 

நீதிபதியாக மாறும் ஒருவர் சகல விடயங்களையும் பாதுகாப்புடன் செய்வதோடு சமூக அங்கத்தவர்களுடனான உறவை மட்டுப்படுத்துகின்றார். அதே போல் பதவிஉயர்வு பெற்று இடம்மாறிச் செல்லும் போது அவருடைய குடும்பத்தை விட்டு, நண்பர்களைவ விட்டு தூரமாவதோடு பல்வேறு இடங்களுக்கு பயணிக்க வேண்டிய அசௌகரியங்களும் ஏற்படுகின்றன.

வாழ்வில் புதிய நிலைகளை அடைந்து கொள்ளும் செயற்பாட்டில் ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு மனிதன் பயணப்பட வேண்டி ஏற்படுகின்றது. சமூக பிணைப்பினை கத்தரிக்கும் ஒரு வலிமிகு விளைவை மனிதனுக்கு இந்நிலை ஏற்படுத்துகின்றது. இதன் போது வரும் புதிய சூழல் புதிய சமூகம், புதிய இடம் அவனுக்கு பல அசௌகரியங்களையும் அச் சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிலையையும் தோற்றுவிக்கின்றது. ஈற்றில் சோகத்தை அவனுக்குள் தோற்றுவித்து விடுகின்றது.

புதிய பதவி உயர்வு மேலதிக பொறுப்புக்களை ஒருவர் பெறவும் அதனை நிறைவேற்றவும் அழுத்தத்தைக் கொடுக்கின்றது. இது உளவியல் ரீதியான சுமையாகும். இதனை கட்சிதமாக செய்து முடிக்க தவறும் போது பதற்றத்தை தோற்றுவிக்கின்றது. புதிய இடத்தை நோக்கிச் செல்லும் இத்தகைய பயணத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் உடன் வர சில நேரம் மறுக்கலாம். இதன் போது மனக்கவலை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது. 

அதே போல் பதவி உயர்வு பெற்றவரோடு ஒன்றாக வேலை செய்தவர்கள் இவரது உயர்வை எண்ணி பொறாமை கொள்ளவும், சூழ்ச்சிகள் செய்யவும் சந்தர்ப்பங்கள் உண்டு.

அதே போல் கீழ் நோக்கிய சமூக நகர்வு வறியநிலை, தரமற்ற சுகாதாரம், குடும்ப உடைவு, அந்நியமயப்படுத்தப்பட்ட மனோநிலை, சமூக தொலைவு போன்ற நிலைகளை உருவாக்கி ஒரு தனியனின் மனதை வெகுவாக பாதிப்பதனை பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

மேல் நோக்கிய சமூக நகர்வு எப்போதும் சமூகத்துக்கு பிரயோசனமானது எனக் கூறமுடியாது. ஒரு தனியன் மேல்நிலை சமூக நகர்வுக்கு உட்படும் போது அவனுக்குள் வளரும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாமல் போகும் நிலைமை கூட தோன்றுவதுண்டு. 

மேல் நோக்கிய சமூக நகர்வில் ஏறிச் செல்லும் எல்லோரும் வெற்றியடைந்தவர்கள் எனக் கூறமுடியாது எனும் சமூகவியலாளர்களின் கூற்றும் கவனயீர்ப்புக்குரியது.

சமூகத்தில் தான் இருக்கும் நிலையிலிருந்து மற்றுமொரு நிலைக்குச் செல்வதனை சமூக நகர்வு எனும் பதம் குறிக்கின்றது. 

இந்நகர்வு கீழ் நிலை நோக்கிய நகர்வாகவோ மேழ்நிலை நோக்கிய நகர்வாகவோ காணப்பட முடியும். ஒருவர் கொண்டுள்ள கல்வி, தொழில், பொருளாதாரம் போன்றவையும் அதேபோல் சமயம், அரசியல், குடும்பம் போன்ற சமூக நிறுவனங்களும் ஒருவரது முயற்சி, அடைவு, திறமை, பயிற்சி, அதிஷ்டம் போன்றவையும் சமூக நகர்வை தூண்டுகின்றன. 

சட்டம், புலம்பெயர்வு, நவீன மயமாக்கம், கைத்தொழில் மயமாக்கம் போன்றவையும் சமூக நகர்வைத் தூண்டுகின்றன. சமூக நகர்வு சமூகத்துக்கு தேவையான பல நன்மைகளையும் சில விபரீதங்களையும் கொண்டு வந்திருக்கின்றன. 

ஒப்பீட்டு ரீதியில் சமூக நகர்வு அதிக பலாபலன்களையே சமூகப் பரப்பில் ஏற்படுத்தியிருக்கின்றன. 

சமூக நகர்வை திட்டமிட்ட அடிப்படையில் கொண்டுவரும்போது தேக்க நிலையிலிருந்து சமூகத்தையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாத்து புதிய மாற்றங்களை சமூகப் பரப்பில் கொண்டு வர முடியும்.

....✍️....

யேதீபா பிரபாகரன்

B.Ed Student 4th year

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.