விழுமியக் கல்வியும் இலங்கையின் நிலைப்பாடும்.

கல்வி என்பது குழந்தைகளை உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு,நல்லொழுக்கம் ஆகிய நன்மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். அந்த வகையில் ஒரு குழந்தை நல்லொழுக்கங்களை கற்கும் முதல் இடமாக குடும்பம் காணப்படுகின்றது.

 அத்தோடு கல்வியின் மூலமும் அறிவும் நல்லொழுக்கங்களும் கட்டியெழுப்பப்படுகின்றன. இந்தக் கல்வியை வழங்கும் முகவர்களாகவே பாடசாலை பல்கலைக்கழகம், கல்லூரிகள் என பல செயற்படுகின்றன.

அந்த வகையில் இங்கு கற்பிக்கப்படும் கல்வியில் முக்கியமான கல்வியாகவே விழுமியக் கல்வி காணப்படுகின்றது.   தனி நபர்களின் நற்பண்புகளையும், ஒழுக்க நெறிமுறை நடத்தைகளையும்  விருத்தி செய்ய தேவையான மனித விழுமியங்களை கட்டி எழுப்பும் செயல்முறையே விழுமிய கல்வியாகும். கற்போரை பண்புள்ளவனாகவும், சான்றோரை சால்வுள்ளவனாகவும் மாற்றும் ஆயுதம் விழுமியக்கல்வியே ஆகும். 

அந்த வகையில் விழுமியங்களாக நேர்மை, பொறுப்புணர்வு, நீதி, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, பெற்றோரை மதித்தல், மூத்தோருக்கு கீழ் படிதல் , ஆசிரியர் சொற்படி நடத்தல், உயிரிடத்தில் அன்பு காட்டுதல், அன்பு,கருணை மற்றும் இரக்க குணம் போன்ற பல நல்ல குணங்களே ஆகும்.அதனடிப்படையில் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் பல்வேறு வகையான விழுமியங்களை கற்றுக் கொள்கின்றான். 

ஒருவன் சிறுவனாக இருக்கும்போது கடைபிடிக்கும் விழுமியத்திற்கும், அவன் வயோதிபரான பிறகு கடைபிடிக்கும் விழுமியத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஆகவே தான் வயதுக்கேற்ப விழுமியங்களும் மாற்றம் அடைந்து செல்கின்றன எனலாம். 

எடுத்துகாட்டாக :- ஒருவன் சிறுவனாக இருக்கும் போது பெரியோரை மதிப்பான் ; ஆனால் அவன் பெரியவராக வளர்ந்த பிறகு சிறுவர்கள் அவனை மதிப்பார்கள்.

அந்த வகையில் இந்த விழுமியங்கள் கலைத்திட்டத்தில் ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதில்லை. அது ஆசிரியர்களின் நடத்தையின் மூலமே கற்பிக்கப்படுகின்றது. ஆகவேதான் ஆசிரியரானவர் நன்னடத்தை உடையவராகவும் மாணவர்களுக்கு முன்மாதிரியான நற்குணமுடையவராகவும் இருத்தல் என்பது அவசியமானதாக உள்ளது. ஏனெனில் ஆசிரியர்கள் மூலமாகவே ஒரு நாட்டின் எதிர்கால தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

அதன் அடிப்படையில் இலங்கையில் விழுமியக் கல்வியின் நிலைப்பாடு பற்றி பார்க்கின்ற பொழுது கற்பிக்கப்படுகின்றது ஆனால் கடைபிடிக்கப்படுகின்றதா? என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கையை பொறுத்தவரை விழுமியக்கல்வியானது சமயத்தை அடிப்படையாக வைத்தே போதிக்கப்படுகின்றது.  

ஏனெனில் இலங்கையை பொறுத்தவரை விழுமிய கல்வியை விடவும் சமய கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. ஆகவே தான் சமயக் கல்வியின் மூலமாக விழுமியக் கல்வி போதிக்கப்படுகின்றது. அதாவது விழுமியங்கள் எனும் போது சமயங்கள் கூறும் விழுமியங்களே இங்கு போதிக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.    

அந்த வகையில் இந்த விழுமியங்களை போதிப்பவராக ஆசிரியர்களே காணப்படுகின்றனர். அவ்வாறிருக்கும் போது ஆசிரியர்கள் இவற்றை கடைப்பிடிக்காவிடில் மாணவர்கள் எவ்வாறு கடைப்பிடிப்பார்கள்? என்பது கேள்வியாகவே உள்ளது.

 இலங்கையை பொறுத்தவரை பல ஆசிரியர்கள் மாணவர்களுடனும் சரி, சக ஆசிரியர்களுடனும் சரி தகாத முறையில் நடந்து கொள்ளல், மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற ஒழுக்க விழுமியத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் வேலையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். 

எடுத்துக்காட்டாக :- கலவான – கொடிப்பிலிகந்த பிரதேசத்தில் பதில் அதிபர்,  நடன ஆசிரியை இருவரும் இரண்டு மாணவர்களை பாலியல் வன்புணர்வு செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயல்பாடுகளை பார்க்கும் மாணவர்களும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். 

எடுத்துக்காட்டாக :- மட்டக்களப்பில் 16 வயது மாணவி மீது பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஏனெனில் ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு முன்மாதிரியானவர். ஆசிரியரை பின்பற்றியே மாணவர்கள் நடந்து கொள்கின்றனர். 

ஒரு நல்ல ஆசிரியரை முன்மாதிரியாக கொள்ளும் மாணவன் நல்லவனாகவும், தீய குணமுள்ள ஆசிரியரை முன்மாதிரியாக கொள்ளும் மாணவன் கெட்டவனாகவும் வருவான் என்பது  இதன் மூலம் உறுதியாகின்றது. 

எடுத்துக்காட்டாக :- முல்லை தீவு மாவட்டத்தில் ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து பாடசாலை மாணவிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது பாடசாலைகளில் விழுமியங்கள் கடைபிடிக்கப்படுகின்றனவா?என்பது தெரியாத ஒன்றாகவே உள்ளது.

இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக சிறுவர்கள் முதல் வளர்ந்தோர் வரை அனைவரும் சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக தகாத பாலியல் உறவுகள்,  கருக்கலைப்பு, சிசுக்கொலை என்பன இலங்கையில் அதிகரித்து விழுமியங்கள் சிதைந்துள்ளதை காணமுடிகின்றது. 

இலங்கையில் 96 வீதமானோர் பாலியல் காட்சிகளை பார்ப்பதற்கும்,  பிறரின் குற்றங்களை பகிர்வதற்குமே சமூக வலைத்தளங்களை பாவிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

இன்றைய கல்வி நடவடிக்கையை எடுத்துக்கொண்டால் அதற்கு முக்கிய ஊடகமாக தொலைபேசியே காணப்படுகின்றது. 

சிறுவர்களுக்கு தொலைபேசியை வழங்கும் போது அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை கவனிக்காது விடுவதால் தான் பிள்ளைகள் ஒழுக்கத்துக்கு புறம்பான நடத்தைகளை வெளிக்காட்டுகின்றனர்.

 இது மாத்திரமல்லாமல் வேலைப்பளு,  உலகமயமாதல்,வறுமை, நோய் போன்ற காரணங்களாலும் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிப்பது சிரமமாகவே உள்ளது. இவ்வாறான காரணங்களே விழுமியத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட மனிதனை தூண்டுகின்றது. 

ஏனெனில் எவன் ஒருவன் வறுமையின் உச்சத்தில் இருக்கின்றானோ அவனே திருடனாக மாறுகின்றான். அதேபோல் பெற்றோர்கள் வேலைப்பளுவின் காரணமாக பிள்ளைகளை கவனிக்காமல் விடுவதனால்தான் பிள்ளைகள் புறம்பான விழுமிய  நடத்தைகளை பின்பற்றுகின்றனர்.

அந்தவகையில் பாடசாலை மட்டத்தில் விழுமிய பண்புகளை  கல்வியை விடவும் விழுமியமே உயர்வானது என்பதை எடுத்துக் கூறி அவற்றை வளர்ப்பதற்காக  கலைத்திட்டத்தில் விழுமியத்தை ஒரு பாடமாக சேர்த்தல், வீதி நாடகங்கள் நடித்தல், புராணக் கதைகள், தத்துவ படங்கள், விழுமியத்தை பின்பற்றும் மாணவர்களை மாணவர்கள் மத்தியில் கௌரவித்தல், விழுமியத்தை பின்பற்றுகின்ற பெரியோர்களை மாணவர் மத்தியில் உரையாற்றுவதற்கு அழைத்தல், இணை பாடவித செயற்பாடுகளின் மூலம், பாடசாலையில் கொண்டாடப்படும் விழாக்கள் போன்றவற்றின் மூலமாக மாணவர்கள் மத்தியில் விழுமியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறலாம்.

அத்தோடு தமது சமயம் கூறும் விழுமியங்களை கற்றுக்கொள்வதோடு பிற சமயம் கூறும் விழுமிய பண்புகளையும் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல் அவசியமான ஒன்றாகும். அதாவது பாடசாலையானது பல்கலாச்சாரத்தை பின்பற்றுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்ற இடமாகும்.

 ஆகவேதான் அனைத்து கலாச்சாரத்திற்கும் முன்னுரிமை அளித்து அவர்கள் பின்பற்றுகின்ற விழுமிய பண்புகளை அனைத்து மாணவர்களும் பின்பற்றுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலமாக மாணவர்களுக்குள் ஒற்றுமை அதிகரிப்பதோடு வேற்று கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

பிள்ளை பாடசாலையை விடவும் அதிக நேரம் குடும்பத்துடனும்,சமூகத்துடனுமே செலவு செய்கின்றது.  ஆகவே பிள்ளைகளுக்கு விழுமியத்தை போதிக்கும் மிகப்பெரிய பொறுப்பு குடும்பத்திடமே காணப்படுகின்றது. 

குடும்பத்தில் காணப்படும் சகல உறுப்பினர்களும் விழுமியத்தை கடைப்பிடிப்பவராக இருந்தால்தான் பிள்ளையும் விழுமியங்களை கடைப்பிடிக்கும். ஆகவே குடும்ப உறுப்பினர்களும்,  சமூக உறுப்பினர்களும் விழுமியத்தை உயர்வாக கொள்பவராக இருத்தல் வேண்டும். ஏனெனில் பிள்ளை பாடசாலையில் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளும் விழுமியங்களை விடவும் சமூகத்தோடு கற்றுக் கொள்ளும் விழுமியங்களே அதிகமானவை ஆகும்.

அத்தோடு விழுமியத்தை போதிக்கும் முக்கிய பொறுப்பு ஆசிரியரிடமே உள்ளது. ஆகவே ஆசிரியரானவர் விழுமிய பண்புகளை உடையவராக இருத்தல் வேண்டும். எனவே முதலில் ஆசிரியர்களிடம் விழுமிய பண்புகளை சீர்படுத்த வேண்டும். 

அதற்காக  அறிஞர்களின் கருத்துக்களை பின்பற்றல், திருக்குறள்,  நாலடியார் போன்ற பாடல்களை படித்தல் போன்றவற்றோடு அதிபர், கல்விசார் ஊழியர்கள்  ஆசிரியர்களை மேற்பார்வை செய்தல் போன்றவற்றின் மூலமாக ஆசிரியர்களிடம் விழுமிய பண்புகளை வளர்க்கலாம்.

ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபொழுது விழுமிய பண்புகள் ஒரு சில பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்படுகின்றது. எனினும் அனேக பாடசாலைகளில் விழுமியம் என்றால் என்ன எனும் நிலைப்பாடே நிலவுகின்றது. 

ஆகவே தான் மாணவர்கள் மத்தியில் விழுமியத்தின் உன்னதத்தை எடுத்துக்காட்டி அதை கடைப்பிடிக்க வைக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரதும் கடமையாகும். அதேபோல் ஆசிரியரும் விழுமிய பண்புகளை கடைப்பிடிப்பவர் ஆக இருத்தல் வேண்டும்.

 ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் நாளைய தலைவர்கள் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் நினைத்து கொள்ள வேண்டும். அடித்தளம் சிறப்பாக அமைந்தால்தான் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

“மனுகுலத்தின் ஜீவியத்தை சீர்படுத்தும் விழுமியமது,

உயிரினும் மேலான உன்னதமது 

விழுமியம் கொண்டு எம்குலம் சிறக்க நெறிப்படி ஒழுகி, வாழ்வில் சிறந்து பாரினில் மிளிர்வோம்” 

மகேஸ்வரன்  சுவிர்த்தனா 

2ம் வருடம் 1ம் அரையாண்டு 

கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை

கலை கலாசார பீடம்

கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.